ஓபிஎஸ் கூட்டணியை அறிவிக்கிறார்.. கறாரான எடப்பாடி பழனிசாமி.. அந்த கட்சிக்கு போறாரா ஓ.பன்னீர்செல்வம்?

By Hema Vandhana

சென்னை: தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் யாருடன் இணைய போகிறார்? யாருடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியபடியே உள்ளது.. இது ஓபிஎஸை இன்னும் நம்பி அவருடன் பயணித்து வரும் ஆதரவாளர்களிடமும் ஒருவித பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய கூட்டணியை ஓபிஎஸ் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான காலகட்டத்தில் அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவராக கருதப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இன்றைய அரசியல் சூழலில் தனது இருப்பை காப்பாற்ற வேண்டிய கட்டாயப் போராட்டத்தில் உள்ளார்.


OPS O Panneerselvam edappadi palanisamy

தொண்டர்கள் உரிமை மீட்பு குழு

அதிமுகவில் மீண்டும் இணைப்பு சாத்தியமற்ற நிலை உருவானதையடுத்து, "தொண்டர்கள் உரிமை மீட்பு குழு" என்ற பெயரில் தனி இயக்கத்தை முன்னெடுத்து வருகிறார் ஓபிஎஸ்..

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்த முயன்ற அவர், இப்போது அந்த மீட்பு குழுவை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்

எனினும் சமீப காலமாகவே ஓபிஎஸ்ஸை சுற்றியிருந்த ஆதரவாளர்கள் பலரும் அணிமாற துவங்கிவிட்டனர்.. இது ஓபிஸ்ஸுக்கு மேலும் அரசியல் அழுத்தத்தை தந்துள்ளது... தன்னுடைய அரசியல் வாழ்வை மட்டுமல்லாமல், தனது மகன் மற்றும் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்கள் அடங்கிய முழு அணியையும் கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது..

டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், யாருடன் ஓபிஎஸ் கூட்டணி சேர போகிறார்? என்ற ஆர்வம் எழுந்தவாறே உள்ளது.. ஆனால் டிடிவி தினகரனை தன்னுடைய கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு ஓரளவு இறங்கி வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால் ஓபிஎஸ்ஸை சேர்த்து கொள்வதில் அதே பிடிவாதத்தையும் காட்டி வருகிறார்.

ஓபிஎஸ் யாருடன் கூட்டணி

மேலும், ஓபிஎஸ்ஸிடமிருந்து தினகரனை பிரிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முயற்சி மேற்கொள்வதாக சொல்லப்படுவதும், ஓபிஎஸ் தரப்பை அதிக வருத்தத்துக்கு ஆளாக்கி விட்டுள்ளதாகவும் தெரிகிறது..

அதிமுக கூட்டணி பக்கம் போக முடியாத ஓபிஎஸ், தவெகவுக்கு தாவுவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தபடியே உள்ளது.. மூத்த தலைவர் செங்கோட்டையனும் ஓபிஎஸ்ஸை தவெகவுக்குள் இழுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்..

ஓ.பன்னீர்செல்வம் தங்களுடன் பேசி வருவதாக தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தவெக உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வலம் வந்தவாறே உள்ளன.. ஒருகட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் விஜய் கட்சியில் இணைந்தும் விட்டது, முன்னோட்டமாகவே பார்க்கப்பட்டது.

இன்று கூட்டணி அறிவிப்பு

எந்த கூட்டணியில் இணைய போகிறேன் என்பதை தை பொங்கலுக்கு அறிவிக்கிறேன் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தொடர்ந்து கூறி வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓபிஎஸ் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கும் 'தை பிறக்கட்டும்" எனக் கூறிவிட்டு சென்றார்.

அதுமட்டுமல்ல வரும் 23-ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை, ஓபிஎஸ் சந்தித்து, கூட்டணியில் இணையலாம் என்றும் தகவல்கள் வெளிவந்தன... இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று தன்னுடைய கூட்டணியை அறிவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..

எதிர்பார்த்தபடியே பாஜக கூட்டணியில் இணைவாரா? அல்லது செங்கோட்டையன் எதிர்பார்த்தபடி, தவெகவில் இணைவாரா? தெரியவில்லை... ஓபிஎஸ் அறிவிக்க போகும் கூட்டணி மிகுந்த ஆர்வத்தையும், பரபரப்பையும் தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

இன்னும் சற்று நேரத்தில்...

சமீபத்தில், ஓபிஎஸ்ஸின் 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக' மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. அந்த கூட்டத்தில் பேசிய பலரும், "எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கவே முடியாது. 3 தொகுதிகளுக்காக அந்த அணிக்கு செல்லக்கூடாது" என்று வற்புறுத்திய நிலையில், ஓபிஎஸ்ஸும் அதை வழிமொழிந்தார்.

இதனால் அதிமுக அணி இல்லாத நிலையில் திமுக அணி அல்லது தவெக அணி தான் ஓபிஎஸ்ஸுக்கு சாய்ஸ் ஆக உள்ளது. திமுக, தவெக, பாஜக என 3 கட்சிகளுக்கு செல்லும் வாய்ப்பு இருந்தாலும், குறிப்பிட்ட இடங்களை பெறுவதற்காக தவெக பக்கம் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.. எதுவானாலும் இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

Credit: Oneindia

Desktop Bottom Promotion