சாலையில் விபத்து ஏற்பட்டால் உடனே முதலுதவி செய்வது எப்படி?

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட்டால் ஒருவருக்கு கீழ்கண்ட வகையில் நாம் உதவலாம். அதற்கு முன், முதலுதவி செய்ய முன் வருபவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. வாகனம் ஓடிக்கொண்டு இருந்தால், இன்ஜினை முதலில் நிறுத்தவும். முடிந்தால் பேட்டரிகளின் இணைப்புகளைத் துண்டிக்கவும். பெட்ரோல் - டீசல் பாதையை மூடவும். அதே போல, ஒருவேளை வாகனத்துக்கு அடியில் மனிதர்கள் சிக்கியிருந்தால் சக்கரங்களின் அடியில் கட்டைகளை வைத்து, வாகனத்தை நகராமல் பார்த்துக் கொள்ளவும்.

What are the important things to consider before giving first aid in an accident

2. பெட்ரோல் கசிந்து சிந்தியிருக்கும் இடங்களில் எளிதில் தீப்பிடித்துவிடும். இதனால் பெட்ரோல் டாங்க் வெடிக்கவும் வாய்ப்பு உண்டு. அதனால் யாரும் சிகரெட் பிடிக்காமலும், எண்ணை, விளக்கு போன்ற எரியும் பொருட்களை அருகில் எடுத்துச் செல்லாமலும் கவனமாக இருக்க வேண்டும்.

3. முதலுதவியின் மிக முக்கியமான விதிகளில் ஒன்று, அவசரச் சேவைகள் மற்றும் தொழில்முறை மருத்துவ உதவிக்கு அழைப்புவிடுக்க வேண்டும்.. யாரிடமும் உதவி கேட்க தயங்குவது, நிலைமையின் தீவிரம் குறித்து உங்களுக்கு முழுமையாகத் தெரியாவிட்டாலும் கூட. முன்கூட்டியே உதவி பெறுவது நல்லது, தேவைப்பட்டால் நிபுணர்கள் நிலைமையை கையாள அனுமதிக்க வேண்டும்.

4. விபத்தில் முதுகெலும்புகளும், கழுத்தெலும்புகளும் சேதமடைந்திருக்கலாம். பாதிக்கப்பட்டவரை அசைத்து வளைத்து தூக்கினால், எலும்புகள் மேலும் சேதமடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். அதனால், அடிபட்டவரை நான்கு பேர் சேர்ந்து தூக்க வேண்டும்.

5. முதலாமவர் காதுகளையும் தலையையும் அணைத்தாற்போல் பிடித்துக்கொள்ள வேண்டும். இரண்டாமவர், தோள்பட்டை, மார்புக்கு அடியில் இரு கைகளையும் சொருகிப் பிடித்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், வயிறு இடுப்புக்கு அடியில் கைகளைக் கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். நான்காம் நபர் தொடைக்கு அடியில் ஒரு கையையும், கெண்டைக்காலுக்கு அடியில் ஒரு கையையும் கொடுத்து, நால்வரும் ஒரே சமயத்தில் தூக்கி ஒரு ஜமுக்காளத்திலோ, அல்லது அதைப் போன்ற துணியிலோ படுக்க வைக்க வேண்டும்.

6. பின் அந்த ஜமுக்காளத்தை உடலின் மீது போர்த்தியது மாதிரி சுற்றி, துணி நழுவாமல் இருக்க ஆங்காங்கே சிறு கட்டுகள் போட வேண்டும். பின் பாதிக்கப்பட்டவரின் இடது பக்கம் மூன்று பேரும், வலது பக்கம் ஒருவரும் வந்து தலையையும் கழுத்தையும் ஆதரவாகத் தாங்கிப்பிடித்து, கட்டை போல அசையாமல் நேராகத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

7. மேற்கண்ட இவை தவிர, உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவ ஊர்தி, மீட்புப் பணியை தொடங்க வேண்டும்.. தீ விபத்தாக இருந்தால் தீயணைப்பு படை போன்றவர்களை உதவிக்கு அழைக்கவும். அவசர உதவி தொலைபேசி எண் 103 (ஆம்புலன்ஸ்) மற்றும் 1063 (தொலைதொடர்பு புகார்களை பதிவு செய்ய ) என்ற எண்ணுக்கு டையல் செய்ய வேண்டும்..

இருசக்கர வாகனத்தில் செல்பவருக்கு விபத்து ஏற்பட்டால் :

முதலில் அவர் அணிந்து இருக்கும் ஹெல்மெட்டை கழற்றுவது நல்லது. அதிலும், தாடையையும் ஹெல்மெட்டையும் இணைத்துள்ள ஒட்டு நாடாவை பிரிக்க முடியாவிட்டால் வெட்டி எடுக்க வேண்டும். ஒருவர் கைவிரல்களை ஹெல்மெட்டுக்குள் நுழைத்து ஒருகையால் கழுத்துப் பகுதியையும், மற்ற கையால் கீழ்த்தாடையையும் தாங்கி உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

இன்னொருவர் ஹெல்மெட்டை சற்றே முன்னோக்கிச் சாய்த்து பின்பக்கமாக மெள்ள மெள்ள தூக்கி வெளியே எடுக்க வேண்டும். தாடையையும் கழுத்தையும் பிடித்துக்கொண்டு இருப்பவர் ஹெல்மெட் முழுவதுமாக எடுக்கும் வரை விடக்கூடாது.

தலையுடன் சேர்ந்து ஹெல்மெட் நசுங்கி இருக்கும் சமயங்களில், ஹெல்மெட்டை மட்டும் தனியே கழற்ற முயற்சித்தால்... தோலும் ஹெல்மெட்டோடு சேர்ந்து கழன்று வந்து விடும். அதனால், நேரடியாக மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள். மீறி ஹெல்மெட்டைக் கழற்றினால், தலையிலிருக்கும் தோலும் சேர்ந்து பிய்ந்துவிடும், கவனமாக செயல்படுங்கள்..

இரு சக்கர வாகனத்தில் செல்லும் சமயத்தில் கீழே விழுவதால் ஏற்படும் லேசான எலும்பு முறிவுக்கு செய்ய வேண்டிய அடிப்படை முதலுதவி சிகிச்சைகள் சில

1. இருசக்கர வாகனத்தில் செல்லும் சமயத்தில் கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். பின்னர் உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

2. டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம்பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

3. எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்பு முறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது. டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு எற்பட்டவருக்குத் தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.

எலும்பு முறிவுகளும் அதற்கான முதல் உதவி சிகிச்சைகளும்

ஒரு நபர் விபத்தில் சிக்கி விட்டார் எலும்புகள் முறிந்து விட்டது இந்நிலையில் அவருக்கு நம்மால் என்னென்ன முதல் உதவிகள் செய்ய முடியும்.

1. முதலில் விபத்தில் சிக்கிக் கொண்ட அந்த குறிப்பிட்ட நபருக்கு எலும்புகள் முறிந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. அடிபட்ட நபருக்கு எலும்பு முறிந்துள்ளதா என்று தெரிந்துகொண்ட பின்னரே, முதலுதவியைத் தொடங்க வேண்டும். அதற்குக் கீழ்க்காணும் அறிகுறிகள் உதவும்.

3. விபத்து ஏற்பட்ட உடல் பகுதியில் வலியும், வீக்கமும் இருக்கும். அத்துடன் அடிபட்ட பகுதியை அசைக்க முடியாது. அசைத்தால் வலி உயிர் போகும். மேலும், முறிவுள்ள பகுதியைத் தொட்டாலே வலி அதிகரிக்கும்.

4. அதே போல எலும்புகள் ஒருவேளை முறிந்திருந்தால் அப்பகுதியில் எலும்புகள் உள்ளுக்குள் உராய்வதை பாதிக்கப்பட்ட நபர் உணர்வார்.

5. இவை தவிர, முறிவு ஏற்பட்ட பகுதியில் வளைவு அல்லது குழி தோன்றலாம் அல்லது முறிவுக்குக் கீழ் உள்ள பகுதி பலமில்லாமல் இருக்கும்.

6. மிக முக்கியமாக (CPR-Cardio Pulmonary Resusicitation) எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration - நினைவிழந்தவர் வாயில் முதலுதவியாளர் வாயை வைத்து ஊதும், மற்றும் Chest compressions - நெஞ்சை அமத்தி மூச்செடுக்கச் செய்யும் CPR-Cardio Pulmonary Resuscitation - செயற்கைச் சுவாச முதலுதவிச் சிகிச்சை மிக மிக அவசியம்.

Story first published: Thursday, July 11, 2024, 13:10 [IST]
Desktop Bottom Promotion