இந்தியாவின் டாப் 10 பணக்கார கோவில்கள் இதுதான்... இந்த பட்டியலில் உள்ள ஒரேயொரு தமிழ்நாட்டு கோவில் எது தெரியுமா?

Top to Richest Temples in India: இந்தியாவின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் இடங்களாக கோவில்கள் உள்ளது. கோவில்கள் இந்தியாவின் வரலாற்றையும் பாதுகாக்கும் இடங்களாக கம்பீரமாக நிற்கின்றன. இந்தியாவின் கோவில்களையும், கட்டிடக்கலையையும் பார்வையிட ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவிற்கு வருகைத் தருகின்றனர்.

இந்தியா அதன் மதங்கள் மற்றும் கலாச்சாரங்களால் வகைப்படுத்தப்படும் ஒரு அற்புதமான வரலாற்றைக் கொண்டுள்ளது, இந்த வளமான பாரம்பரியத்தின் ஆழமான அடையாளங்களாக கோவில்கள் உள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு கோவிலும் நிதிச் செழிப்பு, அற்புதமான கட்டிடக்கலை மற்றும் ஆழமாக வேரூன்றிய மரபுகளின் கதையை உலகிற்கு சொல்கிறது.

Top to Richest Temples in India

இந்தியாவின் சுற்றுலாத்துறையை வளப்படுத்துவதில் கோவில்களுக்கு முக்கியப்பங்கு உள்ளது. சுற்றுலா மூலமும், அதன் பாரம்பரிய சொத்துக்கள் மூலமும் கோவில்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. இதன்மூலம் இந்தியாவில் சில கோவில்கள் பல லட்சம் கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயில், ஆந்திரப் பிரதேசம்

இந்த பட்டியலில் முதலிடத்தில் திருப்பதி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. திருப்பதியின் திருமலை மலைகளில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 பார்வையாளர்கள் வருகிறார்கள். இது இந்தியா மட்டுமல்ல உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றாகும், இதன் நிகர மதிப்பு ரூ.3 லட்சம் கோடியாகும். இது இந்தியாவின் பல கார்ப்பரேட் கம்பெனிகளின் சொத்துக்களை விட மிக அதிகம். 16.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவில் உண்டியல் காணிக்கைகள் மற்றும் பிற வழிகளில் மாதம் தோறும் பல கோடிகளை சம்பாதிக்கிறது.

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில், திருவனந்தபுரம், கேரளா

1,20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில், இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாக உள்ளது. தங்க சிலைகள், தங்க நாணயங்கள், மரகதங்கள், பழங்கால வெள்ளி, வைரங்கள் மற்றும் பித்தளை பொருட்கள் என இதன் சொத்துக்களின் பட்டியல் மிகவும் பெரியது. 2015 ஆம் ஆண்டில், கோவிலுக்குள் இருந்த ரகசிய அறைகள் திறக்கப்பட்டது. இந்த கோவிலின் புராணக் கதையின் படி, இரண்டு பெரிய நாகப்பாம்புகள் உட்புறமாக மறைக்கப்பட்ட அறையைப் பாதுகாக்கின்றன.

Top to Richest Temples in India

குருவாயூர் தேவஸ்வம், குருவாயூர், கேரளா

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், விஷ்ணுபகவான் கிருஷ்ணராக வழிபடப்படுகிறார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். 2022 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, இந்த புகழ்பெற்ற கோயில் ரூ.1,737.04 கோடி வங்கி வைப்புத்தொகையையும் 271.05 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது. பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றின் மூலமும் இந்த கோவில் பல கோடிகளை சம்பாதிக்கிறது. திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில் அதன் யானை திருவிழாவிற்கும் பெயர் பெற்றது.

வைஷ்ணவ தேவி கோயில், ஜம்மு

கடல் மட்டத்திலிருந்து 5,200 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோவில், வைஷ்ணவ தேவியாக வணங்கப்படும் துர்கா தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றான இந்தக் கோவிலுக்கு கடந்த இருபது ஆண்டுகளில் (2000-2020) 1,800 கிலோ தங்கம், 4,700 கிலோ வெள்ளி மற்றும் மிகப்பெரிய அளவில் ரூ.2,000 கோடி ரொக்கம் நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இந்த குகைக் கோவிலின் சரியான வரலாறு மற்றும் அவை எவ்வாறு வந்தன என்பது தெரியவில்லை என்றாலும், இந்த குகைகளில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் கோயில் ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதைக் குறிக்கின்றன.

ஷீரடி சாய் பாபா, மகாராஷ்டிரா

மும்பையிலிருந்து 296 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த உலகப்புகழ் பெற்ற கோவிலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து தினமும் 25,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். இந்த கோவில் 1922 ஆம் ஆண்டு கட்டப்பட்டது மற்றும் சாய்பாபா அமர்ந்திருக்கும் சிம்மாசனம் 94 கிலோ தங்கத்தால் ஆனது. பக்தர்கள் 2022 ஆம் ஆண்டில் ஷீர்டியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளைக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான நன்கொடைகளை வழங்கினர்.

நன்கொடைகள் ரொக்கம், காசோலைகள் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட்கள் மூலம் பணம் செலுத்துதல், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி வடிவில் வழங்கப்பட்டன. இந்த கோவில் அறக்கட்டளை இரண்டு மருத்துவமனைகளை நடத்துகிறது, அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், இங்கு தினமும் 50,000 முதல் 1 லட்சம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

பொற்கோயில், அமிர்தசரஸ்

அமிர்தசரஸின் மையத்தில் அமைந்துள்ள பொற்கோயில், இந்தியாவின் மிகவும் பிரபலமான மதத்தலங்களில் ஒன்றாகும். ஐந்தாவது சீக்கிய குருவான குரு அர்ஜனின் உதவியுடன் இந்த ஆலயம் கட்டப்பட்டது. கட்டுமான செயல்முறை 1581 இல் தொடங்கி முடிக்க 1589-ல் முடிக்கப்பட்டது. முதல் சீக்கிய குருவான குரு நானக், கோவில் கட்டப்படுவதற்கு முன்பு இங்கு தியானம் செய்தார். இந்த கோவிலின் மேல் தளங்களை உருவாக்க சுமார் 400 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே இது 'தங்க கோயில்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ. 500 கோடி என்று கூறப்படுகிறது.

மீனாட்சி கோவில், மதுரை

தமிழ்நாட்டின் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள மீனாட்சி கோயில், அதன் கட்டிடக்கலை மற்றும் 14 பல அடுக்கு கோபுரங்களுக்காக உலகப்புகழ் பெற்றது. இந்த கோவிலின் முக்கிய தெய்வம் சுந்தரேஸ்வரரின் (சிவன்) மனைவி மீனாட்சி அம்மன். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் 20,000 க்கும் மேற்பட்ட பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர் மற்றும் ஆண்டுதோறும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வருவாயை இந்த கோவில் ஈட்டுகிறது.

சித்தி விநாயகர் கோயில், மும்பை

200 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாகும். கோவிலின் பிரதான தெய்வம் 4 கிலோ தங்கத்தை அணிந்துள்ளார். கூடுதலாக, ரூ.125 கோடி நிகர மதிப்பு மற்றும் நன்கொடைகள் மூலம் தினமும் ரூ.30 லட்சம் வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விநாயகர் தெய்வத்தின் சிறப்பான அம்சம், தும்பிக்கை வலது பக்கம் சாய்ந்திருப்பதுதான்.

சோம்நாத் கோவில், குஜராத்

குஜராத்தில் உள்ள இந்த தனித்துவமான தேன் நிறக் கோயில், இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவதாக தோன்றியது என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு வெளியிடப்படாமல் இருந்தாலும், அதன் உட்புறத்தில் 130 கிலோ தங்கமும், அதன் சிகரத்தில் 150 கிலோ தங்கமும் உள்ளன. 2023 ஆம் ஆண்டில், கோவில் அறக்கட்டளை GMS இன் கீழ் சுமார் 6 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்தது மற்றும் 1700 ஏக்கர் நிலம் உட்பட சொத்துக்களைக் கொண்டுள்ளது.

ஸ்ரீ ஜெகநாத பூரி கோவில், பூரி, ஒடிசா

11 ஆம் நூற்றாண்டில் மன்னர் இந்திரத்யும்னரால் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில், விஷ்ணுவின் ஒரு வடிவமான ஜெகந்நாதரின் வசிப்பிடமாகும். இது இந்துக்களால் மிகவும் மதிக்கப்படும் புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும், மேலும் பத்ரிநாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரத்துடன் புனித சார் தாம் யாத்திரையில் சேர்க்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, இந்த கோவிலின் நிகர மதிப்பு ரூ. 150 கோடி, மேலும் இது ஜெகந்நாதர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் 30,000 ஏக்கர் நிலத்தை கொண்டுள்ளது.

Desktop Bottom Promotion