குழந்தை திருமணங்கள் இல்லாத தமிழ்நாடாக மாற்ற தீவிரமாக போராடும் அரசு!

Child Marriage Free Tamil Nadu: தமிழ்நாட்டை குழந்தை திருமணம் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு இன்று சென்னையில் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், மாநில சட்ட சேவைகள் ஆணையம் (SLSA) மற்றும் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையுடன் பச்பன் பச்சாவ் என்றும் அழைக்கப்படும் அந்தோலன் சங்கம், மாநிலத்தில் குழந்தை திருமணத்தை எதிர்ப்பதில் பல்வேறு சவால்கள் மற்றும் சட்ட இடைவெளிகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பற்றிய அறிவை வலுப்படுத்துவது முதல், அரசின் பல்வேறு திட்டங்களுடன் அவர்களை ஒருங்கிணைப்பது முதல் மாநிலத்தின் பழங்குடியின மக்களிடையே குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவது வரை, குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடாக மாற்றுவது குறித்து பலர் விரிவாக விவாதித்தனர்.

Tamil Nadu Steps up Fight against Child Marriage

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நீதிமன்றம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, எஸ்.எல்.எஸ்.ஏ., காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், சமூக நலத்துறை இயக்குனரகம், குழந்தைகள் நலக் குழு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் இயக்குநர் முத்து மீனாள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையச் செயலர் பி.வி. சாண்டில்யன், CWC தலைவர்களான ஏ மோகன்தாஸ் மற்றும் மேரி ஆக்ஸிலியா மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியப் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவிலேயே குழந்தைத் திருமணங்கள் மிகவும் குறைவாக உள்ள சில மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்றாகும். அதில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்ட பெண்களின் சதவீதம் 12.8 ஆகும். தேசிய சராசரி சதவீதம் 23.3 ஆகும்.

குழந்தை திருமணத்தை எதிர்த்துப் போராடுவதில் மாநிலத்தின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்தைப் பாராட்டிய சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.என். பிரகாஷ், "இந்தியா ஒரே நேரத்தில் பல தலைமுறைகளாக வாழ்கிறது மற்றும் இந்த விகிதமானது ஒவ்வொரு பகுதிகளிலும் வேறுபடுகிறது. இதில் குறைவான பொருளாதார பின்னணியில் உள்ளவர்களுக்கு குழந்தை திருமணத்தின் தீய விளைவுகளைப் பற்றி புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். ஆனால் நாம் தான் அந்த விதிமுறைகளை உடைத்தெறிய வேண்டும். அதேப் போல் பழங்குடியின மக்கள் மீது நமது சட்டங்களை திணிக்க முடியாது. அதே வேளையில் அவர்களை சிறைக்கு அனுப்பவும் முடியாது. எனவே இந்த குழந்தை திருமண பிரச்சனைக்கான தீர்வை சிந்தனையுடனும், மென்மையாகவும் காண வேண்டும்." என்றார். மேலும் அவர், "பெண்கள் தங்கள் முடிவுகளை சுதந்திரமாக எடுக்க வேண்டும். அதுவும் தங்களது உரிமையாக கூறி முடிவெடுக்க வேண்டும்." என்றார்.

குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான மாநில அரசின் தீர்மானத்தை பாராட்டிய பச்பன் பச்சாவ் அந்தோலனின் நிர்வாக இயக்குனர் தனஞ்சய் திங்கல், "குழந்தை திருமணத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி, தமிழகத்தில் பல அரசுத் துறைகள் தலைமையில் மாநிலம் தழுவிய இயக்கம் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து அதிகாரிகள் குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். இந்த ஆலோசனையானது போராட்டத்தை தீவிரப்படுத்தவும், 2030க்குள் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்து செயல்படுவதற்கான அடுத்த பெரிய படியாகும்."

கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி SLSA, கல்வித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், சமூக நலம் மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுத் துறைகள், குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டில் பங்கேற்குமாறு அந்தந்த துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை விடுத்தன.

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் மாவட்டம் மற்றும் கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் மாநில அரசு விரிவாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை கிராம அளவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து சமூக நலத்துறை இயக்குனரகத்தின் இணை இயக்குநர் ரூத் வெண்ணிலா பேசுகையில், "கடந்த 3 ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட 7640 சிறுமிகள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில். ஒவ்வொரு 3 மாதங்களுக்கும், சமூக நலத்துறையானது, மாவட்ட அளவில் மற்றும் கிராம அளவில் தங்கள் மாவட்டம்/கிராமத்தில் தற்போதுள்ள குழந்தை திருமணத்தின் பிரச்சினை மற்றும் நிலை குறித்து விவாதிக்க கூட்டங்களை நடத்தி வருகிறது. அதோடு குழந்தை திருமணங்களில் இருந்து மீட்கப்பட்ட 1178 சிறுமிகள் திறன் பயிற்சி பெற்றதுடன், மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு ஒன் ஸ்டாப் மையமும் ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் ஹெல்ப்லைன்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்." என்றார்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஆர்.உமா மகேஸ்வரி, பழங்குடியின மக்களிடையே நடக்கும் குழந்தை திருமணங்கள் குறித்து பேசுகையில், ''பழங்குடியினரின் கல்வியறிவு 50 சதவீதமாக இருந்தாலும் பெற்றோரின் கவனம் பெண் குழந்தைகளின் கல்வியை விட அவளது திருமணத்தில் உள்ளது; பழங்குடியின மக்களிடையே பல குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன, ஆனால் அவை மறைக்கப்படுகின்றன. எனவே பள்ளிகளிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த தீவிரமான பிரச்சினை குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்." என்றார்.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஏ.நசீர் அகமது கருத்து தெரிவிக்கையில், "கிராம கமிட்டிகள் மூலம் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் இரண்டையும் ஒழிக்க முடியும். தொகுதிக் குழுக்கள் தங்கள் பகுதிகளின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அறிந்திருப்பதால் திறமையாகச் செயல்பட முடியும். குழந்தை திருமணங்களை தடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வந்து சமுதாயத்திற்கு உதவ வேண்டும். தமிழகத்தில் 12000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் உள்ளன, அவை குழந்தை திருமண பிரச்சினையை அடிமட்டத்தில் இருந்து ஒழிக்க உதவும்." என்றார்.

தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்களின் ஒட்டுமொத்த சதவீதம் தேசிய சராசரியை விட குறைவாக இருந்தாலும், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இதுப்போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. அதில் விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், சேலம், கோயம்புத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.

Story first published: Wednesday, February 28, 2024, 21:47 [IST]
Desktop Bottom Promotion