பேயாக இரத்தம் தெறிக்க தெறிக்க வரும் 'ராயன்'... கொலைக்களமாக மாறும் கோலிவுட்...தமிழ் சினிமாக்கு என்னதான் ஆச்சு?

Raayan: தமிழ்சினிமாவிற்கு இந்த வருடம் மிகவும் சோதனையான காலகட்டம் என்றே கூறலாம். 2024 தொடங்கி கிட்டத்தட்ட 7 மாதங்கள் முடியப்போகும் நிலையில் இதுவரை விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்ற படங்கள் என்றால் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில்தான் உள்ளன. தமிழசினிமாவை காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்த இந்தியன் தாத்தாவும் ஒரே வாரத்தில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.

இப்போது அனைவரின் கண்களும் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50 வது படமான 'ராயன்'-யை நோக்கி திரும்பியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த விஜய சேதுபதியின் 50 வது படமான மகாராஜா மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தனுஷின் 50 வது படம் எப்படி இருக்கப்போகிறது என்று அவரது ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Raayan Why Tamil Cinema Directors Glorify Violence

தனுஷ்

தனுஷ் எப்படிப்பட்ட நடிகர் என்பதற்கு விளக்கமே தேவையில்லை. அவர் வாங்கி குவித்துள்ள தேசிய விருதுகளே அதற்கு சாட்சி. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க பிரபலமான நடிகராக தனுஷ் விளங்குகிறார். உலக நாயகன் கமலுக்குப் பிறகு இந்தி திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய ஒரே தமிழ் நடிகர் தனுஷ்தான். ஒவ்வொரு நடிகருக்கும் அவர்களின் 50 வது படம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது, அதிலும் இந்த படத்தை தனுஷே இயக்கியிருப்பது கூடுதல் சிறப்பு.

ராயன்

கடந்த வாரம் ரிலீஸான ராயன் படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒளிக்கும் 'உசுரே நீதானே' பலரின் ரிங்க்டோனாகவே மாறிவிட்டது. தனுஷுடன் அவரது சகோதரர் செல்வராகவன், S.J. சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராமன், அபர்ணா பாலமுரளி என நடிப்பால் மிரட்டக்கூடிய பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கதைக்களம்

திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது இது வடசென்னை பின்புலத்தில் நடக்கும் கதைக்களம் போல உள்ளது. பாஸ்ட் புட் கடை நடத்தும் மூன்று சகோதரர்கள் அவர்கள் வாழ்க்கையில் காதல் மற்றும் வன்முறையால் அவர்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதாக இருக்கலாம். ஏற்கனவே வடசென்னை பின்புலத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, வடசென்னை போன்ற திரைப்படங்கள் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றியையும், அடையாளத்தையும் கொடுத்தது. இந்த வரிசையில் ராயனும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வன்முறை

தமிழ்சினிமாவின் தற்போதைய போக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. படங்கள் வணிகரீதியாக வெற்றியடைவதில்லை என்பதையும் தாண்டி எப்படிப்பட்ட படங்கள் வெளிவருகின்றன என்பதிலேயே சிக்கல் உள்ளது. ஒரு பக்கம் ஜாதிப்பெருமை பேசும் படங்கள் அதிகரித்து வரும் சூழலில் மறுபுறம் திரைப்படங்களில் வன்முறையும் அதிகரித்து வருகிறது. அதற்கு ராயனும் விதிவிலக்கல்ல. ராயன் திரைப்படத்தின் ட்ரெய்லர் எந்த அளவிற்கு நன்றாக இருந்ததோ அதேயளவிற்கு இரத்தம் நிறைந்ததாகவும் உள்ளது. சென்சார் போர்டு இதற்கு A சான்றிதழ் அளித்திருந்தாலும் இந்த படத்தை OTT- ல் வெளிவந்த பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள். அப்போது இது நிச்சயம் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராயன் போலவே இந்த ஆண்டு தமிழசினிமாவில் வெற்றி பெற்ற வேறுசில படங்களிலும் வன்முறைக் காட்சிகள் அதிகமாகவே இருந்தது. சூரியின் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற கருடனின் கதைக்களம் நட்பு மற்றும் துரோகத்தைப் பற்றியதாக இருந்தாலும் அதில் இருந்த வன்முறைக் காட்சிகள் நிச்சயம் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. குறிப்பாக தந்தையைக் கொன்றவனை பழிவாங்க அவரது மகன் கத்தியெடுப்பது போன்ற காட்சிகளில் உணர்வுகள் வலிமையானதாக இருந்தாலும் நிச்சயம் ஏற்புடையதல்ல.

அதேபோல கடந்த மாதம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற விஜய சேதுபதியின் 50 வது படமான மகாராஜாவிலும் வன்முறை சற்று தூக்கலாகவே இருந்தது. இந்த திரைப்படத்தில் கையை வெட்டுவது, தலையை வெட்டுவது, கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள் நிச்சயம் முதல் முறை பார்ப்பவர்களை கலவரப்படுத்தியிருக்கும். இந்த காட்சிகளுக்கான காரணங்கள் வலுவாக இருந்தாலும் இந்த அதீத வன்முறை நம்முடைய காட்சி அனுபவத்தை தொந்தரவு செய்வதாக இருந்தது என்பது முற்றிலும் உண்மை.

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு திரைப்படங்களுமே இந்த ஆண்டின் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களாகும். நல்ல கருத்தை சொல்லும் படங்களாக இருந்தாலும் சரி, பொழுதுபோக்கு படமாக இருந்தாலும் சரி அது கொஞ்சம் கூடுதல் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும்.

உலக நாயகனின் விக்ரம், தளபதி விஜய்-ன் லியோ, ரஜினிகாந்த்-ன் ஜெயிலர் என அனைத்துப் படங்களிலும் வன்முறை அதிகமாகவே இருந்தது. இந்த படங்களின் வெற்றி வருங்கால இயக்குனர்களிடம் திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் அவசியம் என்ற எண்ணத்தை உருவாக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அது தமிழ் சினிமாவிற்கும் சரி, நமது சமூகத்திற்கும் சரி நல்லதல்ல.

வன்முறைக் காட்சிகளால் ஏற்படும் சிக்கல்கள்

வன்முறைக் காட்சிகள் பார்ப்பவர்களுக்கு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில சமயங்களில் அந்த திரைப்படத்திற்கும், அந்த இயக்குனர் சொல்ல வரும் கருத்திற்குமே பாதகமாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதற்கு பல உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம். நாம் யாருக்காக பேசுகிறோமோ அவர்களே அந்த காட்சியில் உள்ள வன்முறையால் நமக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் ஒட்டுமொத்த திரைப்படமும் சொல்ல வரும் கருத்து நிராகரிக்கப்படலாம்.

பிற மொழி படங்கள்

இந்த வருடம் மலையாள சினிமாவின் பொற்காலம் என்றே கூறலாம், இந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் வெளிவந்த பல திரைப்படங்கள் வசூல் சாதனை புரிந்துள்ளது. மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேஷம், பிரேமலு, பிரம்மயுகம் சமீபத்தில் வெளிவந்த குருவாயூர் அம்பலநடையில் போன்ற திரைப்படடங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றவை. ஆனால் இதில் எந்த திரைப்படத்திலும் ஆபாசமோ, வன்முறையோ இருக்காது. சாதாரண கதையை திரைக்கதையால் சுவாரஸ்யமான திரைப்படமாக மாற்றும் வித்தையை அவர்கள் மலையாள இயக்குனர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

நம் இயக்குனர்களும் உணர்வுகளை வெளிப்படுத்தும் திரைப்படங்களை இயக்குவதில் சளைத்தவர்கள் அல்ல. அதை பல புதிய இயக்குனர்கள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற படங்களுக்கு போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை. புதிய நல்ல இயக்குனர்களுக்கு போதுமான அங்கீகாரமும், பெரிய இயக்குனர்கள் வன்முறையை நம்பாமல் திரைக்கதையை எப்போது நம்பத் தொடங்குகிறார்களோ அப்போது தமிழ் சினிமா மீண்டும் பொற்காலத்தை அடையும்.

Story first published: Saturday, July 20, 2024, 18:06 [IST]
Desktop Bottom Promotion