For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய மருத்துவர்கள் தினத்தின் வரலாறு மற்றும் அதை ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா?

மருத்துவர்களை பாராட்ட மற்றும் நினைவு கூற, ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக நமது நாட்டில் கொண்டாடுகிறோம்.

|

மருத்துவம் என்பது நம் எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய மற்றும் பாராட்டத்தக்க ஒரு துறை ஆகும். அதிலும் இப்பொழுதுள்ள இந்த கொரோனா காலத்தில் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். தம் உயிரை துச்சமென நினைத்து பல மோசமான நோய் பாதித்த நோயாளிகளை கணிவுடனும், அக்கறையுடன் கவனிப்பதில் மருத்துவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை.

மருந்துகள் வேண்டுமானால் நோயை குணப்படுத்தலாம், ஆனால் நோயாளியை மருத்துவராலே மட்டுமே குணப்படுத்த முடியும். அவர்களின் சிறப்புகளை அறிந்ததால் தான் சிறு குழந்தைகள் கூட பிற்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்துகின்றனர். இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த நொடியில் கூட, சாவின் விளிம்பில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான நபர்களை, இந்த உலகிலுள்ள மருத்துவர்கள் காப்பற்றி கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்ட மருத்துவர்களை பாராட்ட மற்றும் நினைவு கூற, ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக நமது நாட்டில் கொண்டாடுகிறோம். அதற்கு பின்னல் இருக்கு காரணம், மற்றும் மருத்துவர்களின் சிறப்புகள், அவர்களுக்கு எவ்வாறு நம் நன்றியை செலுத்துவது என்பது போன்றவற்றை பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேசிய மருத்துவர் தினம் - காரணம்

தேசிய மருத்துவர் தினம் - காரணம்

நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், மருத்துவர்களின் சேவைகளுக்காக மருத்துவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள் மட்டுமின்றி மருத்துவம் சார்ந்த துறையிலுள்ள அனைவருக்குமே இந்த நாள் மிக முக்கியமான ஒன்று.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் திரு டாக்டர்.பிதான் சந்திர ராய் என்பவரின் நினைவாகவே மருத்துவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. டாக்டர். பிதான் சந்திர ராய், ஜூலை 1, 1882 ஆம் ஆண்டு பிறந்து, அதே தேதியிலேயே 80 ஆண்டுகள் கழித்து 1962 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருக்கு, இந்திய அரசாங்கம், நாட்டின் உயரிய குடிமகனுக்கான விருதான பாரத ரத்னாவை பிப்ரவரி 4, 1961 ஆம் ஆண்டு வழங்கியது. சிறந்த மருத்துவராக மட்டுமில்லாமல், சுதந்திர போராட்ட வீரராகவும், மேற்கு வங்கத்தை சிறந்த முறையில் நவீனமாக மாற்றிய முதலமைச்சராகவும், பிதான் சந்திர ராய் இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

ராய் அவர்கள் மகாத்மா காந்தியின் மிக முக்கிய நண்பராகவும், பிரதான மருத்துவராகவும் இருந்தவர். 1933 இல் பூனாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய காந்தியை அருகிலிருந்து கவனித்து கொண்டவர் டாக்டர் ராய்.

மருத்துவ பணியாளர்களின் அளப்பரிய சேவை

மருத்துவ பணியாளர்களின் அளப்பரிய சேவை

இதற்கு முன்னிருந்த நாட்களில் நம்மில் சிலர் மருத்துவர்களை குறைத்து மதிப்பிட்டிருப்போம் அல்லது அவர்களில் முக்கியத்துவத்தை உணராமல் இருந்திருப்போம். ஆனால் இந்த கொரோனா நோய் தாக்க காலத்தில் அவர்களின் சிறப்பை உணராத நபர்களே இருக்க முடியாது. நாம் எல்லோரும் நம் உயிரை பாதுகாத்து கொள்ள வீட்டில் நம்மை தனிமைப்படுத்தி கொண்டு, பெரும்பாலான நம் வேலைகளை வீட்டிலிருந்தபடியே கவனித்து கொண்டு வருகிறோம். ஆனால் தம் உயிரை பற்றி நினைக்காமல், மற்ற உயிர்களை காப்பற்றுவது ஒன்று தான் முக்கியம் என நினைத்து இரவு பகல் பாராது உழைத்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல மருத்துவ துறை பணியாளர்களின் சேவை அளப்பரியது. இந்த நேரத்தில் மட்டுமில்லை, எப்பொழுதுமே மருத்துவர்கள் எல்லோரும் ஒரு ஹீரோக்கள் என்பதில் உங்களுக்கும் மாற்று கருத்து இருக்க போவதில்லை.

இந்த வருட மருத்துவர்கள் தினத்தின் சிறப்பு

இந்த வருட மருத்துவர்கள் தினத்தின் சிறப்பு

ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு முறையில் இந்த மருத்துவர்கள் தினமானது கொண்டாடப்படுகிறது. சென்ற வருடம் மருத்துவ துறையின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைக்கு எதிராக இருந்தது. இந்த வருடத்தின் தீம் 'கோவிட் -19 இன் இறப்பைக் குறைத்தல்' ஆகும்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தேதியில் மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் மார்ச் 30 ஆம் தேதியும், கியூபா நாட்டில் டிசம்பர் 3 ஆம் தேதியும் மற்றும் ஈரான் நாட்டில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியும் மருத்துவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்தந்த நாட்களில், அந்த நாட்டிலுள்ள மருத்துவர் அமைப்புகளால், ஒவ்வொரு வருடமும் எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

இந்திய மருத்துவர்களின் சிறப்பு

இந்திய மருத்துவர்களின் சிறப்பு

நம் நாட்டு மருத்துவர்களின் சிறப்புகளை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே வரும், நம் நாட்டிற்கு வரும் மருத்துவ சுற்றலா பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டாலே, அவர்களின் சிறப்பைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இன்றும் கூட அமெரிக்கா நாட்டில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட மருத்துவர்களுக்கு படு கிராக்கி உள்ளது. இதற்கு கரணம் அவர்களின் அறிவு திறன் ஒரு புறம் இருந்தாலும், அவர்கள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து வேலை செய்வதே மிக முக்கிய காரணம் ஆகும்.

இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அனைத்து மருத்துவருக்கும் தங்களுக்கு கொரோனா நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது என்றும், தங்கள் உயிர் கூட இந்த சேவையில் போகலாம் என்றும் நன்கு தெரியும். இருப்பினும் அதை எதையும் பாராமல் அவர்கள் பணியை செவ்வனே சிறக்க செய்கிறார்கள். அதனால் தான் நம் நாட்டில் கொரோனா நோய் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது வெகு குறைவாக உள்ளது.

பொது மக்கள் நாம் என்ன செய்ய வேண்டும்?

பொது மக்கள் நாம் என்ன செய்ய வேண்டும்?

என்ன தான் மருத்துவர்கள் அளப்பரிய சேவை செய்தலும், மருத்துவர்களுக்கும் சில அசௌகரியமான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் கொரோனாவால் மரணமடைந்த டாக்டர் சைமனின் சடலத்தை புதைக்க சிலர் கிளப்பிய எதிர்ப்பு. மக்கள் சேவையே தங்கள் முழு முதல் கடமையாக செய்து வரும் மருத்துவர்களை நாம் போற்றி அவர்கள் நமக்கு செய்யும் சேவையை எப்பொழுதும் நினைவில் கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

National Doctor’s Day 2021: Why We Celebrate It, Theme And History

National Doctor’s Day 2021: Want to know why we celebrate it, theme and history? Read on...
Desktop Bottom Promotion