Pongal 2026: தை பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? எந்த திசையில் பொங்கல் பொங்கினால் என்ன பலன்?

Pongal 2026: சூரியனின் ஆதிக்கம் நிறைந்த 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் தமிழர்களால் 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை வருகிறது. இந்த பொங்கல் பண்டிகை தமிழ் மாதமான தை 1 ஆம் தேதி கொண்டாடப்படும். இந்த தை திருநாள் முதல் சூரியனின் வட திசை பயணம் ஆரம்பமாகிறது.

பயிர்களின் விளைச்சலுக்கு உதவும் சூரியனுக்கும், விவசாயத்திற்கு உதவி புரியும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கவும் தை திருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகை நாளில் மக்கள் வீடு, வாசல்களை சுத்தம் செய்து மாவினால் கோலமிட்டு தோரணங்கள் கட்டி, கணுப்பிள்ளை எனப்படும் காப்பு கட்டி பொங்கல் பண்டிகையை வரவேற்பார்கள்.

Pongal 2026 Date Auspicious Time Pongal Overflow Directions And Its Meanings

தை திருநாளன்று வீட்டு வாசலில் அழகிய வண்ண கோலமிட்டு புது அடுப்பும், புது பானையும் வைத்து பொங்கல் வைத்து, காய்கறிகள், கரும்புகள் வைத்து சூரிய தேவனுக்கு நன்றி செலுத்துவார்கள். மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுத்தொழுவங்களை சுத்தம் செய்து பொங்கல் வைத்து உழவர்களின் நண்பர்களான கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவார்கள்.

இந்த தை பொங்கல் நாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, ஜோதிடத்தில் பொங்கல் வைக்க நல்ல நேரம் குறிக்கப்பட்டுள்ளது. ராகு காலம், எம கண்டம் தவிர்த்து நல்ல நேரத்தில் பொங்கல் வைக்கலாம் என்று கூறினார்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்:

தை பொங்கல்: ஜனவரி 15, 2026 (வியாழக்கிழமை)

அதிகாலையிலேயே பொங்கல் வைக்க விரும்புபவர்கள் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4:30 - 6:00 மணிக்குள் பானை வைத்து, சூரிய உதயத்தின் போது பொங்கல் பொங்கி வருமாறு பொங்கல் வைக்கலாம். பொங்கல் பொங்கி வரும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று கூறி வணங்கலாம். இல்லாவிட்டால்

- காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
- காலை 10.30 மணி முதல் 11 மணி வரை
- பிற்பகல் 1 மணி முதல் 1.30 மணி வரை

மாட்டுப் பொங்கல்: ஜனவரி 16, 2026 (வெள்ளிக்கிழமை)

மாட்டுப் பொங்கல் அன்று விவசாயத்திற்கு உதவிய மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வண்ணங்களை பூசி, பூக்களால் அலங்கரித்து, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த மாட்டுப் பொங்கல் தினத்தில் பொங்கல் வைக்க நல்ல நேரம் என்றால், அது காலை 9:30 - 10:30 மணி வரை பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு நன்றி கூறலாம்.

சுவாரஸ்யமாக, பொங்கல் பொங்கும் போது, அது பொங்கும் திசைகள், அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கணித்து கூறியுள்ளனர். இப்போது எந்த திசையில் பொங்கல் பொங்கினால் என்ன பலன் என்பதைக் காண்போம்.

கிழக்கு

பொங்கல் பொங்கி வழியும் போது, அது கிழக்கு திசையில் பொங்குவது நல்லது என்று கூறுவார்கள். ஏனெனில் இந்த திசையில் பொங்கினால், உங்களுக்கு வீடு, நிலம் வாங்கும் எண்ணம் ஏதேனும் இருந்தால், அது இந்த ஆண்டு நல்லபடியாக நடக்கும். மேலும் நீண்ட காலமாக ஏதாவது வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த ஆண்டில் அதை விரைவில் வாங்குவீர்கள். முக்கியமாக ஆடை, ஆபரணங்கள் அதிகம் சேரும் வாய்ப்புள்ளது.

வடக்கு

பொங்கல் வடக்கு திசையில் பொங்கினால், அந்த ஆண்டில் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்து பிரச்சனைகள் நீங்கி, கைக்கு வந்து சேரும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் தேடி வரும். கடனாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்கும்.

மேற்கு

மேற்கு திசை நோக்கி பொங்கல் வழிந்தால், அந்த ஆண்டு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். சுப செலவுகள் அதிகமாக இருக்கும்.

தெற்கு

தெற்கு திசையில் பொங்கல் பொங்கினால், அந்த ஆண்டு முழுவதும் மருத்துவ செலவுகளை அதிகமாக சந்திக்க நேரிடும். எப்போதும் மிகுந்த உடல் சோர்வுடன் இருக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு இன்னும் தாமதமாகவே திருமணம் நடக்கும். மொத்தத்தில் இந்த திசையில் பொங்கல் பொங்கினால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

Desktop Bottom Promotion