வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா?

வரலாற்றில் பல மன்னர்கள் அவர்களின் வீரத்தாலும், முட்டாள்தனமான செயல்களாலும். கொடூரமான போர்களாலும் இடம் பிடித்துள்ளனர், ஆனால் தன்னிடமிருந்த அளவில்லாத செல்வத்தாலும், அதை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்ததாலும் வரலாற்றில் அழிக்க முடியாத பெயர் பெற்ற ஒரு அரசர் என்றால் அது மாலியின் பேரரசர் மன்சா மூசாதான்.

Mansa Musa Unknown Facts About the Richest Man in History

பதினான்காம் நூற்றாண்டில் மாலியின் பேரரசராக இருந்த மன்சா மூசா, வரலாற்றில் இதுவரை வாழ்ந்த மனிதர்களிலேயே மிகப்பெரிய செல்வந்தராகக் கருதப்படுகிறார். பல நகரகங்கள் வழியாக மெக்காவிற்கு அவர் மேற்கொண்ட புனித பயணம் உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேற்கு ஆப்பிரிக்காவில் இன்றைய கானா, டிம்புக்டு மற்றும் மாலியை உள்ளடக்கிய பேரரசை நிறுவிய மான்சா மூசாவைப் பற்றி பலரும் அறியாத உண்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மன்சா மூசா என்பதன் அர்த்தம் என்ன?

மாலியின் முதல் மான்சா (Mansa I), தனது வாழ்நாளில் 'மெல்லேவின் அமீர்', 'வங்காராச் சுரங்கங்களின் அதிபதி', 'கனாதாவை வென்றவர்', 'மாலியின் சிங்கம்' மற்றும் 'கன்கன் மூசா' எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டார். ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இவர் 'மான்சா மூசா' என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறார். 'மூசா' என்பது ஒரு இஸ்லாமியப் பெயராகும். விவிலியத்தில் இதற்கு இணையான பெயர் 'மோசே' ஆகும். அதேவேளையில், 'மான்சா' என்பதற்கு "மன்னர்களுக்கெல்லாம் மன்னன்" என்று அர்த்தம்.

மாலி பேரரசின் 10-வது ஆட்சியாளர்

மான்சா மூசாவின் தாத்தா, மாலி பேரரசை நிறுவிய சுந்தியாட்டா கெயிட்டாவின் சகோதரர் ஆவார். மாலி பேரரசில் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது அரசர் ஒரு பயணத்திற்கோ அல்லது மெக்காவிற்கு புனிதப் பயணத்தை மேற்கொள்ளும்போது, ​​பேரரசைப் பராமரிக்க ஒரு பிரதிநிதியை நியமிப்பார். பின்னர் அந்த பிரதிநிதியே அரசரின் வாரிசாக அறிவிக்கப்படுவார். பேரரசர் அபு பக்கர் II, அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளை ஆராய்வதற்காகப் புறப்பட்டபோது, ​​மான்சா மூசாவைத் தனது பிரதிநிதியாக அறிவித்தார். அபு பக்கர் II மீண்டும் தனது பயணத்தை முடிந்து திரும்பி வரவே இல்லை. எனவே, 1307-ஆம் ஆண்டில் மான்சா மூசா மாலி பேரரசின் பத்தாவது ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார்.

மெக்காவிற்கு அவரது புனிதப் பயணம் வரலாற்று புகழ் பெற்றது

மான்சா மூசா, தனது ஆட்சியின் பதினேழாம் ஆண்டான 1324-இல் மேற்கொண்ட அவரது மெக்கா புனிதப் பயணத்திற்காகவே மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். அப்பயணத்தின்போது அவர் வெளிப்படுத்திய செல்வச் செழிப்பை நேரில் கண்டவர்கள் பிரமித்துப்போயினர். மேலும், இது குறித்த பல குறிப்புகள் அக்கால நாட்குறிப்புகள், செவிவழிக் கதைகள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. மாலி நாட்டின் அளவற்ற செல்வத்தை உலகிற்கு வெளிப்படுத்தியதும், மான்சா மூசாவை உலகளவில் பிரபலமான ஒரு ஆளுமையாக மாற்றியதும் இந்தப் புனிதப் பயணமே ஆகும்.

அவர் அளவற்ற செல்வத்தை தாராளமாக செலவழித்தார்

மான்சா மூசாவின் பயணக் குழுவில், பாரசீகப் பட்டு ஆடை அணிந்த 12,000 அடிமைகள் உட்பட 60,000 ஆண்கள் இருந்தனர். மூசா குதிரையில் பயணம் செய்ய, அவருக்கு முன்னால் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோல்களை ஏந்திய 500 அடிமைகள் நேரடியாகச் சென்றனர். மேலும், அவர் தன்னுடன் 80 ஒட்டகங்களையும் அழைத்துச் சென்றார். அவை ஒவ்வொன்றும் 300 பவுண்டு தங்கத்தைச் சுமந்து சென்றன. மூசா தனது பயணத்தின் போது, ​​கெய்ரோ மற்றும் மதீனா உட்பட மக்காவிற்குச் செல்லும் வழியில் அவர் கடந்து சென்ற நகரங்களில் மக்களுக்குத் தங்கத்தை விநியோகித்தும், பரிசுகளை வழங்கியும், பண்டமாற்று செய்தும் ஆடம்பரமாகச் செலவழித்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றாசிரியர் சிஹாப் அல்-உமரி கெய்ரோவிற்குச் சென்றபோது, ​​அப்போதும் அந்த நகரத்தின் மக்கள் மூசாவைப் புகழ் பாடிக்கொண்டிருந்தனர்.

அவரின் ஆடம்பர செலவுகள் பல நகரங்களில் பணவீக்கத்தை ஏற்படுத்தின

மான்சா மூசா ஆடம்பரமாக விநியோகித்த தங்கம் மற்றும் பரிசுகள், அவர் பயணம் செய்த நகரங்களின் சந்தைகளில் அவற்றின் மதிப்பைச் சீர்குலைத்தன. கெய்ரோ, மதீனா மற்றும் மக்கா ஆகிய நகரங்களுக்குள் திடீரெனப் பெருமளவில் தங்கம் வந்து சேர்ந்ததால், அது தங்கத்தின் மதிப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இது கடும் பணவீக்கத்திற்கு வழிவகுத்ததுடன், பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தன. பின்னர், தங்கத்தின் மதிப்பைச் சமன் செய்யும் பொருட்டு, கெய்ரோவில் உள்ள வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடமிருந்து, மூசா அதிக வட்டிக்குச் தங்கத்தை மீண்டும் கடனாகப் பெற்றார். அவரது புனிதப் பயணம் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, அந்தச் சந்தைகளால் முழுமையாக மீள முடியவில்லை.

அவரது ஆட்சிக்காலத்தில் டிம்பக்டு அறிவு மற்றும் வர்த்தக மையமாக மாறியது

மான்சா மூசா தனது பயணத்தின்போது சந்தித்த பல அறிஞர்களை எகிப்திலிருந்து தன்னுடன் அழைத்து வந்தார். டிம்பக்டுவில் அமைந்துள்ள சங்கோர் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மட்டுமின்றி, மத்திய கிழக்கிலிருந்தும் முஸ்லிம் அறிஞர்களை ஈர்க்கும் ஒரு கற்றல் மையமாக உருவெடுத்தது. அவரது புனிதப் பயணத்தின் விளைவாக, மாலி நாட்டின் செல்வச் செழிப்பை உலகம் அறிந்துகொண்டது. இதுவே டிம்பக்டுவை ஒரு முக்கிய வர்த்தக மையமாக மாற்றியது. இங்கு வெனிஸ், கிரானடா மற்றும் ஜெனோவா போன்ற பல்வேறு நகரங்களைச் சேர்ந்த வணிகர்கள், தங்கள் பொருட்களைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தங்கத்தைப் பெற்றுக்கொண்டு வர்த்தகம் மேற்கொண்டனர்.

வரலாற்றின் மிகப்பெரிய செல்வந்தர்

2012-ல், 'செலிபிரிட்டி நெட் வொர்த்' நிறுவனம், உலக வரலாற்றின் 25 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் போன்ற பெயர்களுக்கும் மேலாக மான்சா மூசா முதலிடத்தில் வைக்கப்பட்டார். அவர் இறந்த நேரத்தில் மூசாவின் தனிப்பட்ட நிகர மதிப்பு 400 பில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டது. இரண்டாம் இடத்தில் இருந்த ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் சொத்து மதிப்பு, அவரை விட 50 பில்லியன் டாலர்கள் குறைவாக இருந்தது. உலகின் உப்பு மற்றும் தங்க விநியோகத்தில் பாதிக்கும் மேல் மாலியின் கட்டுப்பாட்டில் இருந்ததுதான் மூசாவின் இந்த அசாதாரண செல்வத்திற்கு முக்கியக் காரணமாகும்.

Desktop Bottom Promotion