For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுத் தோட்டத்தில் பசுமையான காய்கறி வளர்க்கலாம்

By Mayura Akilan
|

Gardening
காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன.

நமது அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடியும்.

மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயணங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.

இடம் தேர்வு செய்தல்

வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாக பராமரிக்கவும், வீட்டின் சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்திக் கொள்ளவும் இது சுலபமாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொறுத்தும் காய்கறி தோட்டத்தின் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும்.

காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறி தோட்டத்தை தேர்வு செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி மற்றும் தொடர் சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும். நான்கு அல்லது ஐந்து நபர்கள் உள்ள ஒரு சராசரி குடும்பத்திற்கு தேவைப்படும் காய்கறியை உற்பத்தி செய்ய 5 சென்ட் இடம் இருந்தால் போதுமானதாகும்.

நிலத்தை பண் படுத்தல்

நிலத்தை 30-40 செமீ ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்றிய பின்னர் 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும். தேவைக்கேற்ப 45 செமீ 60 செமீ என்ற இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் படுக்கை முறையிலும் சாகுபடி செய்யலாம்.

நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும். விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும்.

தண்ணீர் பாய்ச்சுதல்

நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும். தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும். ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.

வருமானம் பெருகும்

ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

வீட்டுத் தோட்டங்களில் காய்கறி பயிரிடுவதன் மூலம் தங்கள் குடும்பத்திற்கு தேவையான சத்தான காய்கறிகளை உண்ணலாம். அளவுக்கு அதிகமாக உள்ள காய்கறிகளை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் கிடைக்கும். எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாகும்.

English summary

How to grow organic Vegetables | வீட்டுத் தோட்டத்தில் காய்கறி வளர்க்கலாம்

The Organic fruit and vegetable gardens are gaining popularity. To grow fruit trees and Vegetables organically with the help of following guidelines. Fertilizers have to be organic, it is an essential aspect of keeping trees from plant disease and other parasitic infiltration.
Story first published: Monday, March 5, 2012, 18:30 [IST]
Desktop Bottom Promotion