Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
HMPV Virus Outbreak: HMPV வைரஸ் தொற்று குறித்த வதந்திகளும்.. உண்மைகளும்..
HMPV Virus Outbreak: சீனாவில் தோன்றி பல மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்த கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பின், தற்போது சீனாவில் HMPV வைரஸ் என்னும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் தொற்றினால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருவதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
மேலும் இந்த வைரஸ் கோவிட்-19 போன்றே உலகளவில் பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்தவாறு உள்ளன. இதனால் பலருக்கும் மனதில் ஒருவித பயமும், இது உண்மை தானா என்ற கேள்வியும் எழுந்திருக்கும்.

இந்நிலையில் சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சீனாவில் பரவும் HMPV வைரஸ் தொற்று குறித்த வதந்திகளையும், உண்மைகளையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
வதந்தி 1
சீனாவில் தற்போது வைரஸ் தொற்று பரவி வருவதால் பொது சுகாதார எமர்ஜென்சி விடப்பட்டதாக வதந்தி பரவி வருகிறது.
உண்மை 1
சீனாவில் தற்போது எந்த வகை பொது சுகாதாரம் சார்ந்த எமர்ஜென்சி நிலையும் விடப்படவில்லை என்பது குறித்த ரேப்லர் ஃபேக்ட் செக் செய்தி. ரேப்லர் என்பது சர்வதேச அளவில் செய்திகளின் உண்மைத் தன்மையை அறியும் நிறுவனம் ஆகும்.
வதந்தி 2
சீனாவில் HMPV எனும் புதிய கோவிட் 19 போன்ற வைரஸ் தொற்றுப் பரவல் நடந்து வருகிறது. அதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
உண்மை 2
HUMAN META PNEUMO VIRUS என்பது புதிய வைரஸ் அன்று. 1960களில் இருந்தே மனிதர்களிடையேவும் பறவைகளிடையேவும் அறியப்படும் வைரஸ் தான். அதை கண்டறிந்த ஆண்டு 2001 ஆக இருப்பினும், அதற்கு முன்னமே ஐம்பது ஆண்டுகளும் இப்போது 24 ஆண்டுகள் என நமக்குப் பழக்கப்பட்ட வைரஸ் அது.
2019 போல புதிய கொரோனா வைரஸ் (novel corona virus 2019) போன்றது அன்று. இதற்கும் கொரோனா வைரஸுக்கும் இரண்டும் ஆர் என் ஏ வைரஸ்கள், இரண்டும் சுவாசப் பாதை வழியாக பரவும் வைரஸ்கள் என்ற தொடர்பைத் தவிர வேறெதுவும் இல்லை .
கொரோனா வைரஸ்கள் - கொரோனாவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஹெச்எம்பிவி- நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இரண்டும் இருவேறு குடும்பங்கள். எனவே இரண்டையும் நாம் தொடர்புபடுத்தத் தேவையில்லை.
வதந்தி 3
இந்த வைரஸ் இனிமேல் தான் புதிதாக இந்தியாவுக்குள் பரவ இருக்கிறது. இதனால் பெருந்தொற்று ஏற்பட இருக்கிறது
உண்மை 3
இந்த ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் இந்தியாவுக்கும் இந்திய குழந்தைகளுக்கும் புதிதன்று. இன்னும் சொல்லப்போனால் இது இந்தியாவில் பல்வேறு இடங்களில் ( சென்னை, புதுச்சேரி உட்பட செய்யப்பட்ட ஆய்வுகளில்) அந்தந்த இடங்களில் குளிர் சீதோஷ்ண நிலை நிலவும் போது சீசனல் வைரஸ்களுடன் சேர்ந்து பரவி தொற்றை ஏற்படுத்தவல்லது.
வதந்தி 4
சீனாவில் வைரஸ் தொற்றுப் பரவல் நடந்து மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன.
உண்மை 4
சீனாவில் குளிர் காலத்தில் சீதோஷ்ண நிலை என்பது மைனஸ் டிகிரி குளிர் நிலை நிலவும். கூடவே அவர்களின் பதினைந்து நாட்கள் நிகழும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அங்கு நிலவும் மக்கள் நெருக்கடி + மக்கள் தொகை + வைரஸ் பரவலுக்கு உகந்த சீதோஷ்ண நிலை.
குளிர் சீதோஷ்ண நிலை நிலவும் போது காற்று ஈரப்பதம் இல்லாமல் வரண்டு போய் இருக்கும். இவ்வாறு வறண்டு இருக்கும் காற்றின் மீது இருமல் தும்மல் போன்றவற்றால் வெளிவரும் சளித்துகள்கள் எளிதாக காற்று மூலக்கூறுக்குள் உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் நிலவும். கூடவே குளிர் காலங்களில் மக்கள் காற்றோட்டம் குறைவான இடங்களில் வீட்டுக்குள் இருப்பார்கள். இதன் விளைவாக ஒருவர் இருமினாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் தொற்று வரும்.
வதந்தி - 5
சீனாவில் டிசம்பர் என்றாலே ஏதாவது ஒரு வைரஸ் தொற்று பரவல் நிகழ்கிறது. பெருந்தொற்றகள் அனைத்தும் சீனாவிலேயே தோன்றுகின்றன.
உண்மை 5
கடந்த இருபதாம் மற்றும் தற்போதைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு வரை பல பெருந்தொற்றுகளைக் கடந்திருக்கிறோம் . பெருந்தொற்றுகள் - முதலில் உருவான நாடுகள் விபரம் இதோ:
1899 முதல் 1923 வரை
ஆறாவது காலரா பெருந்தொற்று
- இந்தியா
1918 முதல் 1920 வரை இன்ஃப்ளுயன்சா பெருந்தொற்று
ஐந்து கோடி மக்கள் இறந்தனர்
- ஸ்பெய்ன் மற்றும் ஐரோப்பிய நாடுகள்
1957-1958 வரை இன்ஃப்ளூயன்சா வைரஸ் பெருந்தொற்று
- சிங்கப்பூர்
1961 தொடங்கி தற்போது வரை
காலரா பெருந்தொற்று
- இந்தோனேசியா
1968-1969 வரை
H3N2 இன்ஃப்ளூயன்சா தொற்று
- ஹாங் காங் ( அப்போது பிரிட்டன் வசம் இருந்தது)
1981 முதல் தற்போது வரை
ஹெச் ஐ வி / எய்ட்ஸ் பெருந்தொற்று
- காங்கோ ஆப்ரிக்கா
2002-2003
சார்ஸ் கொரோனா பெருந்தொற்று
- சீனா
2009-2010
ஹெச் 1 என் 1 இன்ஃப்ளூயன்சா பெருந்தொற்று -
மெக்சிகோ மற்றும் அமெரிக்கா
2012
மெர்ஸ் கொரோனா வைரஸ் பெருந்தொற்று - சவுதி அரேபியா
2014
போலியா மீள்வருகை பெருந்தொற்று
- ஆப்பிரிக்க நைஜீரியா
ஆஃப்கானிஸ்தான்/ பாகிஸ்தான்
2014-2016
எபோலா வைரஸ் பெருந்தொற்று-
ஆப்பிரிக்க லைபீரியா
2015-2016
ஜிக்கா வைரஸ் பெருந்தொற்று
- பிரேசில் ( தென் அமெரிக்க கண்டம்)
2018-2020
எபோலா மீள்வருகை
- காங்கோ ஆப்ரிக்கா
2019- 2023
கொரோனா வைரஸ் பெருந்தொற்று
- வூஹான், ஹீபைய் மாகாணம், சீனா
2022-2023
2024 முதல் தற்போது வரை
எம்-பாக்ஸ் பெருந்தொற்று
- ஆப்பிரிக்காவின் காங்கோ நாடு
இப்போது புரிந்திருக்கும் அந்தந்த நாட்டின் சீதோஷ்ண நிலை, அங்கு நிலவும் வைரஸ்கள் ( குறிப்பாக அந்த பகுதிகளில் வாழும் விலங்குகளிடையே நிலவி வரும் வைரஸ்கள்) ஆகியவற்றை வைத்து சில வைரஸ்கள் சில நாடுகளில் இருந்து மட்டும் உண்டாவதைக் காணலாம். இதற்கு அந்த நாட்டையோ நாட்டு மக்களையோ பகடி செய்வதோ அறுவறுப்பதோ அவர்களின் உணவு முறையைக் கேலி பேசுவதோ "செனோஃபோபிக்" (XENOPHOBIC) பிறழ்வு மனநிலையாகும்.
வதந்தி 6
ஹெச் எம்பிவி வைரஸ் பரவினால் உயிரிழப்புகள் மிகவும் கடுமையாக இருக்கும். கொரோனா அளவுக்கு மரணங்கள் நேரும்.
உண்மை 6
இப்போது வரை ஹெச்எம்பிவி வைரஸ் இரண்டு வகைகளில் உருமாற்றம் அடைந்துள்ளது. ஏ மற்றும் பி வகை. இந்த வகை வைரஸ்கள் - பொதுவாக சாதாரண சீசனல் ஜீரத்தை உண்டு செய்யும் அளவே திறன் படைத்தவை. எனினும் இவை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிலும் குறிப்பாக ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும் போது, அந்தக் குழந்தைகளில் எடை குன்றிய/ ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட / பிறவிக் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளிடம் சற்று தீவிரத்துடன் வெளிப்படும்.
இவர்களுக்கு தீவிர நியூமோனியா ஏற்படுத்தும். அதற்கும் முறையான சிகிச்சை செய்தால் இறப்பைத் தவிர்க்க இயலும். இந்த வைரஸை விட அதிக வீரியமுள்ளவை இன்ஃப்ளூயன்சா மற்றும் ஆர் எஸ் வி வைரஸ்கள் ஆகும். நமது நாட்டில் குளிர் கால சீதோஷ்ண நிலையில் அதிகமாகப் பரவும் வைரஸ்கள் பின்வருமாறு:
- அடினோ வைரஸ்கள்
- ரைனோ வைரஸ்கள்
- இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள்
- பாரா இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள்
- கொரோனா வைரஸ்கள்
- ஆர் எஸ் வி வைரஸ்கள்
- ஹெச்எம்பிவி வைரஸ்கள்
இவற்றுள் பிரச்சனைக்குரியவை என்றால் இன்ஃப்ளூயன்சா. ஆர்எஸ்வி அதற்கடுத்த நிலையில் தான் ஹெச்எம்பிவி நமது குழந்தைகளிடையே கண்டறியப்படுகிறது. பல நேரங்களில் ஆர்எஸ்வி + ஹெச்எம்பிவி இரண்டுமே ஒரே நபருக்கு நேரலாம். எனினும் ஆர்எஸ்வி யை விட பலம் மற்றும் வீரியம் குன்றிய வைரஸாகவே ஹெச்எம்பிவி இதுவரை இருந்து வந்துள்ளது.
எனினும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், நலிவுற்ற முதியோர்கள், எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் மருந்துகள் உட்கொண்டு வருபவர்கள் ஆகியோருக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இந்த வைரஸ் பொதுவாக பெரும்பான்மையினருக்கு பிரச்சனை அதிகம் ஏற்படுத்தாத சீசனல் வைரஸ் என்றே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.
வதந்தி 7
இந்த ஹெச்எம்பிவி பெருந்தொற்றாக உருமாற இருக்கிறது.
உண்மை 7
இப்போதைய சூழ்நிலையில் ஹெச்எம்பிவி வைரஸால் பெருந்தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம், இன்ஃப்ளூயன்சா மற்றும் கொரோனாவை ஒப்பிடும் போது இந்த வைரஸால் நீண்ட நேரம் காற்றில் நிலவ இயலாது. இந்த வைரஸ் பரவுவதற்கு தொற்று கண்டவர் மற்றொருவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்போது பேசும் போது தும்மும் போது இருமும் போது பரவும் வாய்ப்பு உள்ளது. இருவருக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக பரவும் வாய்ப்பு குறைகிறது.
எனவே இன்ப்ளூயன்சா அளவுக்கு, கொரோனா அளவுக்கு வேகமாக மற்றொருவருக்கு பரவும் வேகம் இதற்கு இல்லை. ( எனினும் எதிர்காலத்தில் தன்னகத்தே மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்போது நமக்கு அச்சுறுத்தல் தரலாம்) வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் தன்மையை ரீப்ரொடக்சன் நம்பர் ( R-0) வைத்து அறியலாம். இது 1 இல் இருந்து அதிகமாக அதிகமாக விரைவாக வைரஸ் பரவும் என்று அர்த்தம்.
HMPV இன் ஆர் நம்பர் - 1.2
இன்ஃப்ளூயன்சா- 1.23
RSV இன் ஆர் நம்பர் - 3 முதல் 5
கொரோனாவின் ஆர் நம்பர் - 3.28
இதன் காரணமாகவே பெரும்பான்மை ஆய்வுகளில் ஏனைய சீசனல் வைரஸ்களை விடவும் ஹெச்எம்பிவி குறைவான அளவிலேயே கண்டறியப்பட்டு வருகிறது. எனவே, அதன் பரவும் வேகம் கூடாதவரை நமக்கு பாதிப்பு பெரிதாக இருக்காது.
வதந்தி 8
கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் சீனாவில் இவ்வாறு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
உண்மை 8
இல்லை. சீனாவில் அவர்களது குளிர் காலத்தில் வருடா வருடம் இதே போன்று சீசனல் வைரஸ்கள் உச்சத்தில் பரவும் போது, அதிகமான மக்கள் தொற்றுக்கு உள்ளாகும் போது, ஆங்காங்கே சீசனல் வைரஸ்கள் தீவிரமாக பரவும் போது,மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பது வாடிக்கை தான். இது நமது நாட்டிலும் அப்படித் தான்.
குளிர் காலம் நிலவும் போது சீசனல் வைரஸ் ஜுரம் அதிகமாகும் போது மருத்துவமனைகள் சில வாரங்கள் ஸ்தம்பிக்கும். பிறகு சரியாகும். 2023 ஆம் வருடம் நவம்பர் டிசம்பர் மாதங்களிலும் இதே மாதிரி சீனாவில் தொற்றுப் பரவல் நடப்பதாக வந்த செய்திகள் - அப்போது மைக்கோ பிளாஸ்மா நியூமோனியா எனும் தொற்று அதிகமாக பரவி வந்தது.
ஆனால் அது பெருந்தொற்றாகவோ அண்டை நாடுகளுக்கோ எந்த அச்சுறுத்தலும் வழங்கவில்லை. 2022 இன் இறுதியில் சீனா தனது ஜீரோ கோவிட் பாலிசியை விலக்கிக் கொண்ட பிறகு ஒமைக்ரான் வேரியண்ட் மூலம் கொரோனா அலையைச் சந்தித்தது செய்திகளில் வந்தது. ஆனால் அதனாலும் நமக்கு எந்த பிரச்சனையும் உருவாகவில்லை. காரணம் நாம் அதற்கு முன்னமே ஓமைக்ரான் அலையை ஜனவரி 2022இல் சந்தித்து விட்டோம்.
முடிவுரை
என்னைப் பொருத்தவரை, என்னை சந்திக்கும் மக்கள் மற்றும் என்னைப் படித்து வரும் சகோதர சகோதரிகள் கேட்கும் கேள்வியில் முக்கியமானது "மீண்டும் கொரோனா போன்ற நிலை ஏற்படுமா?"
இப்போதைக்கு பேசப்பட்டு வரும் ஹெச்எம்பிவி யால் ஏற்படும் சாத்தியக்கூறுகள் குறைவு. ஆனாலும் பல வைரஸ்கள் பெருந்தொற்றை உண்டாக்க வல்ல நிலையில் வரிசையில் இருக்கின்றன (அவற்றுள் கொரோனா வகை, இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ்களுக்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. ஹெச்எம்பிவி மூலம் பெருந்தொற்று உருவாக தற்போதைக்கு வாய்ப்பு குறைவில் இருந்து மிதமான நிலையிலேயே இருக்கிறது) . ஆனால் அது எப்போது உண்டாகும் என்பதை யாராலும் கணிக்க இயலாது.
"மீண்டும் லாக் டவுன் வருமா?" இப்போதைக்கு அந்த நிலை இல்லை. அச்சம் பீதி இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்போம். தொடர்ந்து இந்த வைரஸ் பரவலை கண்காணித்து வருவோம். பிரச்சனைக்குரிய நிலை ஏற்பட்டால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோம். இப்போதைக்கு சீன வைரஸ் பரவல் குறித்து வரும் அறிவியல் பூர்வமான செய்திகளை மட்டும் படியுங்கள் பரப்புங்கள்.. அச்சம் கொள்ளாதீர்கள். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" என்று டாக்டர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











