கணைய புற்றுநோயின் 7 எச்சரிக்கை அறிகுறிகளை பட்டியலிட்ட அமெரிக்க டாக்டர்!

Pancreatic Cancer Symptoms In Tamil: உயிரைப் பறிக்கக்கூடிய கொடிய நோய்களில் ஒன்று தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவை தாக்கும் பகுதியைப் பொறுத்து வேறுபடும். அந்த வகையில் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க மிகவும் சவாலாக இருக்கும் புற்றுநோய்களில் ஒன்று தான் கணைய புற்றுநோய்.

Harvard Gastroenterologist Shares 7 Silent Symptoms Of Pancreatic Cancer

கணையம் என்பது நம் வயிற்றின் பின் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய உறுப்பாகும். இந்த உறுப்பானது செரிமானம் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த உறுப்பு மறைவான இடத்தில் இருப்பதன் காரணமாக, இந்த உறுப்பில் சிறு கட்டி இருந்தாலும் அதை கண்டறிய பல ஆண்டுகள் ஆகலாம். சில சமயங்களில் இதில் உள்ள பிரச்சனை தீவிரமாகும் வரை எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் இருக்கக்கூடும்.

அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் படி, கணைய புற்றுநோய் பெரும்பாலும் முற்றிய நிலையில் தான் கண்டறியப்படுகிறது. ஏனெனில் இதன் ஆரம்பகால அறிகுறிகள் தெளிவற்றவையாகவும், மற்ற நோய்களின் அறிகுறிகளையும் கொண்டிருக்கலாம். குறிப்பாக திடீரென்று காரணமின்றி உடல் எடை குறைவது, செரிமான பிரச்சனைகள், மஞ்சள் காமாலை போன்றவை இதன் முதன்மையான அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

இந்நிலையில் ஹார்வார்டு மற்றும் ஸ்டான்போர்ட் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற இரைப்பைக் குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணைய புற்றுநோய் அமைதியாக வெளிக்காட்டும் 7 அறிகுறிகள் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த அறிகுறிகளைக் கொண்டு எடுத்தவுடனேயே புற்றுநோய் என உறுதிபடுத்த முடியாது. மாறாக காரணமின்றி இந்த அறிகுறிகள் தோன்றும் போது, அவற்றை அலட்சியப்படுத்தாமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இப்போது டாக்டர் சேத்தி பகிர்ந்த அந்த கணைய புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

1. காரணமின்றி சருமத்தில் ஏற்படும் அரிப்பு

நிறைய பேர் பல்வேறு காரணங்களால் சருமத்தில் அரிப்பை சந்திப்பார்கள். இப்படி ஏற்படும் அரிப்பை பெரும்பாலும் சரும வறட்சி, அழற்சி, கால நிலை மாற்றம் என்று கருதுகிறார்கள். ஆனால் தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால், அது கல்லீரல் அல்லது கணைய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

மேலும் டாக்டர் சேத்தி அவர்களும், "பித்தப்பையில் உள்ள பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, பித்த உப்புக்கள் தேங்கும் போது உடல் முழுவதும் அரிப்பை சந்திக்க நேரிடும்" என்று கூறினார். அதோடு இது ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளில் பலரால் மிகவும் கவனிக்கப்படாத ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

2. திடீரென்று சில உணவுகளை சகித்து கொள்ள முடியாமல் போவது

ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட சில உணவுகள் ஒத்துக்கொள்ளாது. ஆனால் இதுவரை சாப்பிட்டு வந்த ஒரு உணவுப் பொருள் மீது திடீரென்று எதிர்பாராத வெறுப்பு ஏற்படுகிறதா? அல்லது சிறிது உட்கொண்டாலே குமட்டல் ஏற்படுகிறதா? இப்படி தெளிவான காரணம் இல்லாமல் ஏற்படும் சில உணவுகளின் மீது வெறுப்பு, புதிய குமட்டல், பசியின்மை போன்றவை ஏற்பட்டால் முழுமையான மருத்துவப் பரிசோதனை தேவை என்று டாக்டர் சேத்தி குறிப்பிட்டிருந்தார்.

3. தோல் அல்லது கண்கள் மஞ்சள்

"கணையத்தின் தலைப்பகுதியில் ஒரு கட்டி உருவாகி பித்த நாளத்தைத் தடுக்கும்போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது தான் பெரும்பாலும் நோயறிதலுக்கு வழிவகுக்கும் முதல் அறிகுறியாக அமைகிறது. கணையத்தின் உடல் அல்லது வால் பகுதியில் (body or tail) ஏற்படும் கட்டிகளுக்கு, இந்த அறிகுறி மிகவும் தாமதமாகவே வெளிப்படுகிறது" என்று டாக்டர் சேத்தி கூறினார்.

4. முதுகின் நடுப்பகுதியில் வலி

கணையம் வயிற்றுப் பகுதிக்கு ஆழமாக பின்புறத்தில் அமைந்துள்ளது. எனவே மற்ற அறிகுறிகள் தெரிவதற்கு முன் முதுகு பகுதியில் மந்தமான வலியை உண்டாக்குகிறது. ஆகவே எவ்வித காயமும் இல்லாமல் முதுகின் நடுப்பகுதியில் வலியை நீண்ட காலமாக அனுபவித்தால், அது கணைய புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் சேத்தி கூறினார்.

5. மிதக்கும், எண்ணெய் பசையுடனான மலம்

"எப்போது கணையமானது செரிமான நொதிகளை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறதோ, அப்போது உண்ணும் உணவில் உள்ள கொழுப்புக்கள் சரியாக செரிமானமாகாமல் வெளியேறும். இதன் காரணமாக மலம் மிதந்தவாறும், எண்ணெய் பசையுடனும் மற்றும் வெளிரிய நிறத்துடனும் இருக்கும். பெரும்பாலான மக்கள் இதை மாதக்கணக்கில் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்" என்று டாக்டர் சேத்தி குறிப்பிட்டுள்ளார்.

6. திடீர் எடை இழப்பு

"எவ்வித டயட்டும் மேற்கொள்ளாமல் மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைகிறதா? அப்படியானால் கணையத்தில் வளரும் கட்டி, உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களைச் செயலாக்கி உறிஞ்சும் விதத்தைத் தீவிரமாக மாற்றுகிறது" என்று டாக்டர் சேத்தி குறிப்பிட்டிருந்தார்.

7. 50 வயதிற்கு பின் ஏற்படும் சர்க்கரை நோய்

"கணையம் நமது உடலில் இன்சுலினை ஒழுங்குபடுத்துகிறது. ஆனால் அந்த கணையத்தில் கட்டி வளரும் போது, அது வலியையோ அல்லது வெளிப்படையான அறிகுறிகளையோ வெளிப்படுத்தும் முன், இன்சுலினை ஒழுங்குபடுத்தும் செயல்முறையை பாதித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். இதைக் கொண்டும் கணைய புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளதை அறியலாம்"என்று டாக்டர் சேத்தி குறிப்பிட்டிருந்தார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, July 5, 2026, 14:23 [IST]
Desktop Bottom Promotion