சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க..

Posted By:

Empty Kurma For Chapati In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கு, காளான், பன்னீர் என ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவுமே இல்லையா? அப்படிப்பட்ட தருணத்தில் என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியவில்லையா? கவலை வேண்டாம்.

Empty Kurma How To Make Plain Kurma For Chapati

வீட்டில் வெங்காயமும், தக்காளியும் இருந்தாலே போதும், சப்பாத்திக்கு சூப்பரான ப்ளைன் குருமாவை செய்யலாம். இந்த குருமாவை வீட்டில் உள்ளோருக்கு செய்தால் கணக்கில்லாமல் சப்பாத்தியை சாப்பிடுவார்கள். ஏனெனில் அந்த அளவில் குருமா ருசியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ப்ளைன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ளைன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* புதினா - சிறிது
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
* நறுக்கிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* அரைத்த விழுது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, இஞ்சி, புதினா, வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய பாதி வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ப்ளைன் குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 18, 2026, 21:24 [IST]
Desktop Bottom Promotion