இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வழக்குகள் - இந்த 2 அறிகுறி தான் அதிகமா தெரியுதாம்.. எச்சரிக்கும் டாக்டர்கள்

Covid-19 Case Rise: கடந்த 2019 ஆம் ஆண்டில் சீனாவில் தோன்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் பரவி பல உயிர்களைப் பறித்து உலகை அச்சுறுத்தி வந்த ஒரு கொடிய வைரஸ் தான் கொரோனா வைரஸ் என்னும் கோவிட்-19. இந்த வைரஸ் தோன்றியதும் அதன் வீரியத்தன்மையால் ஏராளமானோர் அடுத்தடுத்து உயிரிழந்து வந்தனர். இதனால் பல நாடுகளில் இந்த வைரஸ் மக்களிடையே பரவாமல் இருக்க ஊரடங்குகளும், பல கட்டுப்பாட்டு விதிகளும் போடப்பட்டன.

இந்த வைரஸிற்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகளும் முயற்சித்து, எப்படியோ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அது உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு தடுப்பூசியாக போடப்பட்டது. அதன் பின் இந்த கோவிட்-19 வைரஸும் பலவாறு உருமாற்றமடைந்து, பல பெயர்களை பெற்று தொற்றை ஏற்படுத்தி வந்தது. அதன் பின் அந்த வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்கினர். அதற்காக இந்த வைரஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை. மாறாக அதன் வீரியம் குறைந்து மக்களிடையே பரவி வருகிறது.

Covid-19 Case Rise Two Lesser Known Symptoms Are Showing More Says Doctors

இந்நிலையில் தற்போது தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் -19 வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. அதுவும் சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் பாங்காக் போன்ற அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், குறிப்பாக இந்தியாவிலும் இந்த கோவிட்-19 வைரஸ் தொற்று மக்களிடையே பரவி வருதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகி வருகின்றன. இந்தியாவில் பரவும் கோவிட்-19 தொற்றுகளில் பெரும்பாலானவை லேசானதாக தோன்றினாலும், மருத்துவர்கள் மக்களை கவனமாக இருக்க வலியுறுத்துகின்றனர்.

சமீபத்தில் புள்ளி விவரங்களின் படி, கேரளாவில் சுமார் 70 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 44 வழக்குகளும், தமிழ்நாட்டில் 34 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இது தவிர, கர்நாடகா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் புதிய வழக்குகள் பதிவாகி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டால், அது காய்ச்சல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், சோர்வு அல்லது உடல் வலி போன்ற சாதாரண காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும். ஆனால் தற்போது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடையே முந்தைய கோவிட்-19 தொற்றின் போது அதிகம் கவனிக்கப்படாத இரண்டு அறிகுறிகள் அதிகம் தெரிவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை தான் வயிற்றுப்போக்கு மற்றும் விழி வெண்படல அழற்சி அல்லது கண்கள் சிவப்பது.

தற்போது பரவும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இப்படியான அறிகுறிகள் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த முறை வைரஸ் சற்று மாறுபட்ட போக்கை எடுக்கக்கூடும் என்றும், அறிகுறிகள் சமாளிக்கக்கூடியதாக இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களின் உடலை கவனிக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கோவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சில இயற்கை வழிகள்

நீங்கள் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுள்ளதாக உணர்ந்தால், உங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, முகமூடிகளை அணிந்து கொள்வதைத் தவிர, ஒருசில இயற்கை வழிகளை பின்பற்றுவதன் மூலமும் விடுபடலாம். அவை பின்வருமாறு:

கோவிட்-19 தொற்றுக்கான வீட்டு பராமரிப்பு

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போதுமான ஓய்வு, திரவங்கள் மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்ற சிகிச்சைகளை எடுப்பதன் மூலம் விரைவில் குணமடைகிறார்கள். எனவே காய்ச்சல் அதிகம் இருந்தால், மருத்துவர் பரிந்துரைக்கும் காய்ச்சல் மருந்தை வீட்டில் இருந்தே எடுக்கலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் சில மருத்துவ நிலைமை கொண்டவர்களுக்கு தொற்று தீவிரமாகும் அபாயம் இருப்பதால், இவர்களுக்கு நோய் மோசமடைவதைத் தடுக்க உங்களுக்கு மருந்து வழங்கப்படலாம். அதை தவறாமல் எடுக்க வேண்டும்.

போதுமான ஓய்வு மற்றும் தூக்கம்

கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் ஒருவர் 7-8 மணிநேர தூக்கத்துடன், போதுமான ஓய்வை எடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஓய்வு எடுக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும். அதுவும் போதுமான தூக்கம் உடலின் இயற்கையான பாதுகாப்புகள் வைரஸ்களை எதிர்த்துப் போராட வலுவாக செயல்பட உதவுகிறது. எனவே கோவிட்-19 அறிகுறிகள் தெரிந்தால், விரைவில் குணமாக, போதுமான ஓய்வை எடுங்கள்.

திரவங்களை அதிகம் எடுக்கவும்

கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டியது அவசியம். அதுவும் தொற்று காலத்தில் சர்க்கரை மற்றும் சுவையூட்டிகள் நிறைந்த பழச்சாறுகளை குடிப்பதை விட, வெறும் நீரைக் குடிப்பதே சிறந்தது. காபி, டீ, ஆல்கஹால் போன்றவற்றைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை நீரிழப்பை ஏற்படுத்தும்.

மூக்கை சுத்தம் செய்யவும்

கோவிட்-19 வைரஸ் ஒரு சுவாசத் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் என்பதால், சூடான நீரில் கற்பூரம் அல்லது யூகலிப்டஸ் டியூப்பை போட்டு ஆவி பிடிப்பது போன்ற மூக்கை, சுவாசப் பாதையை சுத்தம் செய்யும் செயலை செய்தால், தொற்றின் தீவிரத்தைக் குறைப்பதோடு, விரைவில் தொற்றில் இருந்து விடுபடவும் உதவும்.

உப்பு நீர் கொப்பளிப்பு

கோவிட்-19 வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தெரிந்தால், வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கலந்து, வாயைக் கொப்பளியுங்கள். இப்படி செய்வதன் மூலம் வைரஸ் தொற்றினால் சுவாச பிரச்சனைகள் தீவிரமாவதைத் தடுக்கலாம். ஏனெனில் உப்பு வைரஸை அழித்து வெளியேற்ற அல்லது தொற்றுநோயை செயலிழக்கச் செய்யலாம்.

கோவிட்-19-ல் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கோவிட்-19 தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், முதலில் தனிநபர் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது கண்ட இடங்களில் கைகளை வைத்துவிட்டு, நேரடியாக முகத்தில், வாயில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். சானிடைசர் அல்லது சோப்பு நீரால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

கூட்டமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியே சென்றால் முகமூடிகளை அணிந்து கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுவதோடு, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion