வேர்க்குரு பிரச்சனை வந்துவிட்டதா? அப்ப இதெல்லாம் செய்யுங்க...

By Super

வேர்க்குரு என்றும் வியர்க்குரு என்றும் அழைக்கப்படும், சருமத்தில் தோன்றும், அரிப்பினை உண்டாக்கும், சிவந்த புள்ளிகள், சருமத்தில் புண்களை ஏற்படுத்தும். உடலின் எப்பாகத்திலும் இத்தகைய தடிப்புகள் தோன்றலாம். குறிப்பாக, முகம், கழுத்து, மார்பு மற்றும் தொடைகளில் இது பொதுவாகக் காணப்படுகிறது.

வேர்க்குருவின் வகைகள்:

வேர்க்குரு ஏற்படுத்தும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, இது மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது.

1. மிலியரியா கிரிஸ்டலைன் (Miliaria crystalline)- சருமத்தின் மேற்புறத்தில் காணப்படும் அடைப்புகள்.

குணாதிசயங்கள்: 1-2 மில்லி மீட்டர் அளவுள்ளது, சிறிய நீர்க்குமிழியை ஒத்த, நீர் போன்ற திரவத்தை உள்ளடக்கியது. ஆனால் சருமத்தில் சிவந்த நிறத்தைத் தோற்றுவிக்காது.

காணப்படும் இடங்கள்: நெற்றி, கழுத்து, முதுகு மற்றும் மார்பு.

2. மிலியரியா ரப்ரா (Miliaria rubra)- சருமத்தின் மத்திய அடுக்கில் காணப்படும் அடைப்புகள்.

குணாதிசயங்கள்: 1-2 மில்லி மீட்டர் அளவுள்ளது, சிறிய நீர்க்குமிழியை ஒத்தது, சருமத்தில் சிவந்த நிறத்தைத் தோற்றுவிப்பன. குமிழிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும். சிலசமயங்களில் கொத்துகொத்தாகவும் காணப்படலாம். அதிகமாக வியர்க்கும் பொழுது அரிப்பும், வலியும் அதிகரிக்கும். இவ்வித வேர்க்குருக்களே அதிகமாகக் காணப்படும்.

காணப்படும் இடங்கள்: துணிகளால் மூடப்பட்டுள்ள இடங்கள் அனைத்திலும்.

3. மிலியரியா புரோஃபண்டா (Miliaria profunda)- சருமத்தின் உள் அடுக்கில் காணப்படும் அடைப்புகள்.

குணாதிசயங்கள்: 1-3 மில்லி மீட்டர் அளவுள்ளது. சிறிய நீர்க்குமிழியை ஒத்தது. சருமத்தில் சிவந்த நிறத்தைத் தோற்றுவிக்காது. அதிகமாக அரிப்பையும் தருவதில்லை. இவ்வித வேர்க்குருக்கள் அதிகமாகக் காணப்படுவதில்லை.

காணப்படும் இடங்கள்: உடல், கைகள், கால்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேர்க்குரு ஏற்படக் காரணங்கள்

வேர்க்குரு ஏற்படக் காரணங்கள்

வியர்வைச் சுரப்பிகளிலிருந்து வியர்வை சுரந்து வெளியில் வரும் வழியில் ஏற்படும் அடைப்புகளே வேர்க்குரு உண்டாவதற்கான முதன்மைக் காரணமாகும். கோடைக்காலங்களில் வெப்பத்தின் காரணமாக அதிகமான வியர்வை சுரந்து, வியர்வை நாளங்கள் அடைக்கப்பட்டு, சிறு சிறு சிவந்த கொப்புளங்கள் உண்டாகின்றன.

சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் வியர்வை தவிர வேர்க்குரு உண்டாவதற்கு இன்னும் பிற காரணங்கள் உள்ளன. அதிகமான வேலை, மது அருந்துதல், புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உடலுக்கு கேடு விளைவிக்கும் ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை அதிகமாக உட்கொள்ளல், நேரந்தவறி உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருத்தல், வயிற்றில் அமிலம் சுரத்தல், உணவு நஞ்சாதல், சில மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவற்றாலும் வேர்க்குரு ஏற்படலாம்.

வேர்க்குருவின் அறிகுறிகள்

வேர்க்குருவின் அறிகுறிகள்

வியர்வைச் சுரப்பி நாளங்கள் அடைபட்டால், உள்ளிருக்கும் வியர்வையானது, சருமத்திற்குள் வீக்கத்தை உண்டாக்கும். இவ்வீக்கமானது, எரிச்சலையும் அரிப்பையும் உண்டாக்கும். வேர்க்குருக்கள் பொதுவாக சருமத்தின் மீது மிகச்சிறிய, சிவந்த கொப்புளங்களாக காணப்படும். அத்தகைய எரிச்சல் மற்றும் அரிப்பை உண்டாக்கும் வேர்க்குருவை விரட்டுவதற்கான சில எளிய முறை வீட்டுக் குறிப்புகளை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

வேர்க்குருவிற்கு மிகச்சிறந்த வீட்டு மருத்துவமாகத் திகழ்வது ஓட்ஸ் ஆகும். அதற்கு குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில், சிறிது ஓட்ஸைப் போட்டு நன்றாகக் கலக்கவும். அத்தண்ணீரில், சருமத்தின் வீக்கம் மற்றும் அரிப்பிற்கு இதம் ஏற்படும் வரை அல்லது சுமார் 15 நிமிடங்கள் படுத்திருக்கவும். இதே போன்று ஒரு நாளுக்கு இரண்டு முறை செய்யவும்.

ஐஸ்கட்டி

ஐஸ்கட்டி

ஈரப்பதமுள்ள வெப்பத்தினால் ஏற்படும் வேர்க்குருவிற்கு மிகச்சிறந்த வீட்டு மருத்துவமாக இருப்பது ஐஸ்கட்டி ஆகும். குத்தும் உணர்வை இதமாக்கும் வரையும், வீக்கத்தை வற்றச் செய்யும் வரையும், வேர்க்குரு உள்ள சருமத்தின் மீது ஐஸ்கட்டிகளைக் கொண்டு தேய்க்கவும்.

சந்தனப் பவுடர்

சந்தனப் பவுடர்

சந்தனப் பவுடர் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் 2-3 டேபிள் ஸ்பூன் பன்னீர் விட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். பின் அதனை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி உலர விட்டு, குளிர்ந்த நீரால் நன்கு அலசி விடவும்.

மூல்தானி மெட்டி

மூல்தானி மெட்டி

ஃபுல்லர் மண் எனப்படும் மூல்தானி மெட்டி கூட வேர்க்குருவிற்கு சிறந்த வீட்டு மருத்துவமாகத் திகழ்கிறது. 4-5 டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, 2-3 டேபிள் ஸ்பூன் பன்னீர், ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். பின் வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில், இந்தக் குழம்பைப் பூசி 2-3 மணிநேரத்திற்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

பஞ்சு அல்லது பருத்தித் துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, அதனை வேர்க்குரு உள்ள இடங்களின் மீது போர்த்துமாறு மூடிவிடவும். பஞ்சு அல்லது துணியிலுள்ள ஈரம் முழுவதும் உறிஞ்சும் வரை காத்திருக்கவும். இம்முறையை ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முறை செய்யவும். இல்லையெனில் வேர்க்குரு உள்ள இடத்தின் மீது குளிர்ந்த நீரை கொண்டு கழுவலாம். வேர்க்குருவின் அரிப்பிற்கும், எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும் முறை இதுவே.

ஆலமரப்பட்டை

ஆலமரப்பட்டை

ஆலமரப்பட்டை கூட வேர்க்குருவிற்கு சிறந்த பொருளாக இருக்கிறது. அதற்கு காய்ந்த ஆலமரப் பட்டைகளை எடுத்துக் கொண்டு, நன்கு பொடியாக அரைக்கவும். இப்பொடியை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவவும். இது வேர்க்குருவின் அரிப்பிற்கும் எரிச்சலுக்கும் உடனடி நிவாரணம் தரும்.

வேப்பமர இலைகள்

வேப்பமர இலைகள்

சிறிது வேப்பிலைகளை எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு மை போன்று விழுதாக அரைத்துக் கொள்ளவும். இவ்விழுதினை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவவும். நன்கு காயும் வரை 2-3 மணிநேரத்திற்கு உலரவிடவும். வேப்பிலையில் உள்ள கிருமிநாசினி சக்தியானது, வேர்க்குரு தோன்றக் காரணமான கிருமிகளைக் கொன்று, சருமத்திற்கு உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. மேலும் வேறு சரும நோய்கள் ஏற்படாவண்ணமும் தடுக்கிறது.

சமையல் சோடா

சமையல் சோடா

சருமத்தின் மீது ஏற்பட்டுள்ள அரிப்பினை உண்டாக்கும் வேர்க்குருவிற்கு ஒரு குளிர்ச்சியான ஒத்தடம் அளிக்க வேண்டும். ஒரு கோப்பை குளிர்ந்த நீரில், ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவைக் கலக்கவும். ஒரு சுத்தமான பருத்தித் துணியை இத்தண்ணீரில் நனைத்து, மிகுதியான தண்ணீரைப் பிழிந்துவிட்டு, வேர்க்குருவின் மீது இத்துணியைப் போர்த்தவும். இதனால் துணியிலுள்ள தண்ணீரானது வீக்கத்தைக் குறைக்கும். அதே நேரத்தில், அதிலுள்ள சமையல் சோடாவானது, எரிச்சலையும், அரிப்பையும் குறைக்கும் பணியைச் செய்கிறது. இந்த முறையை ஒருநாளைக்கு 4-5 முறை செய்து வந்தால் நல்ல பலனுண்டு.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

நிறைய எலுமிச்சை ஜூஸ் குடிப்பது வேர்க்குருவைக் குறைக்கவும், வராமல் தடுக்கவும் உதவும். ஒரு நாளைக்கு 3-4 டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், பதினைந்து நாட்களில் இதன் பலனை உணரத் தொடங்குவீர்கள்.

சோளமாவு

சோளமாவு

சிறிது சோளமாவினை எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டுநன்றாகக் குழைக்கவும். பின் அதனை வேர்க்குரு உள்ள இடங்களில் இபூசி அரை மணிநேரத்திற்கு உலரவிட்டு, குளிர்ந்த நீரால் நன்கு அலசி விடவும்.

கற்றாழை

கற்றாழை

வீட்டில் ஒரு கற்றாழை செடி இருக்குமேயானால், நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் போன்ற பசையை வேர்க்குருவின் மீது தடவவும். இந்த பசையைப் பூசி, சிறிது நேரத்திற்கு உலரவிடவும். அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்து நன்கு அலசி விடவும்.

காலமைன் லோசன்

காலமைன் லோசன்

வேர்க்குருவால் பாதிக்கப்பட்ட இடங்களின் மீது காலமைன் லோஷனைத் (calamine lotion) தடவி வந்தால், அது அரிப்பிற்கும் எரிச்சலுக்கும் இதம் தரும். சருமம் புண்ணாகவும், அரிப்போடும் இருந்தால், ஹைட்ரோகார்டிசான் கிரீமைத் தடவலாம்.

காட்டன் ஆடைகள்

காட்டன் ஆடைகள்

குழந்தைகளுக்கு வேர்க்குரு வராமல் பாதுகாக்க, சருமத்திற்கு எரிச்சலூட்டும் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்த்து, காட்டன் ஆடைகளை அணிவிக்கவும்.

வெளியே இருப்பதை தவிக்கவும்

வெளியே இருப்பதை தவிக்கவும்

வெயில் காலங்களில், வெயிலில் செல்லாமல், நிழலிலோ, ஏர்கன்டிஷனரிலோ, சற்றுத் தொலைவிலுள்ள மின்விசிறிக் காற்றிலோ, இருக்க வேண்டும். இதனால் வியர்க்காமல் இருப்பதோடு, வேர்க்குருவும் வராது.

காற்றோட்டமுள்ள அறை

காற்றோட்டமுள்ள அறை

தூங்கும் அறை, காற்றோட்டமுள்ளதாகவும், குளிர்ச்சியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வேர்க்குரு வருவதை தவிர்க்கலாம்.

குளிர்ந்த நீரில் குளிக்கவும்

குளிர்ந்த நீரில் குளிக்கவும்

வாசனையோ, சாயங்களோ இல்லாத சோப்பினைக் கொண்டு, குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.

க்ரீம்களை தவிர்க்கவும்

க்ரீம்களை தவிர்க்கவும்

சருமத்திற்கு க்ரீம்களையோ, எண்ணெய்களையோ பயன்படுத்த வேண்டாம். அவை வேர்க்குரு வராமல் தடுப்பதில்லை. மாறாக வியர்வை நாளங்களை அடைத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion