தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..

Hair Oil For Hair Fall In Tamil: ஒருவரின் அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் தற்போது தலைமுடி கொட்டும் பிரச்சனையால் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் தலைமுடி உதிர்வது சாதாரணம் தான். ஆனால் ஒவ்வொரு முறை தலையில் கையை வைக்கும் போதும் கொத்து கொத்தாக தலைமுடி கொட்டினால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால், தலைமுடி எலிவால் போன்று மாறுவதோடு, நாளடைவில் வழுக்கையை ஏற்படுத்திவிடும்.

How To Make Homemade Hair Oil In 5 Simple Steps To Stop Hair Fall

ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் மரபணு காரணியை தவிர, மற்ற காரணங்களால் தலைமுடி உதிர்கிறது என்றால் போதுமான பராமரிப்பை கொடுப்பதன் மூலம் தடுக்கலாம். அதுவும் தலைமுடி உதிர்வைத் தடுக்க ஏராளமான எண்ணெய்கள் பழங்காலம் முதலாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் பிரபலமான மற்றும் தலைமுடி உதிர்வுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடிய ஒரு ஹேர் ஆயில் குறித்து தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

அது தான் வெந்தயம் மற்றும் செம்பருத்தி கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய். இவ்விரு பொருட்களுமே தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான சத்துக்களை கொண்டுள்ளன. இப்போது இந்த பொருட்களைக் கொண்டு தலைமுடி உதிர்வைத் தடுக்கும் ஹேர் ஆயிலை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் - 1 கப்
* வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
* கருஞ்சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* செம்பருத்தி பூக்கள் - 2-3

எண்ணெய் தயாரிக்கும் முறை:

* முதலில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை லேசாக இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டு உலர்த்திக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் உலர்த்திய செம்பருத்தி பூக்களின் இதழ்களை சேர்த்து கிளறி, சில நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* எண்ணெய் குளிர்ந்த பின் அதை ஒரு மஸ்லின் துணி அல்லது வடிகட்டியைக் கொண்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் வடிகட்டிய எண்ணெயை ஒரு ஈரப்பதமில்லாத மற்றும் காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி வைத்துக் கொண்டு, சூரியஒளி படாத இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

* தயாரித்த எண்ணெயை சிறிது எடுத்துக் கொண்டு ஸ்கால்ப்பில் படும்படி தடவி, நன்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பின் 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
* முக்கியமாக இந்த எண்ணெயை பயன்படுத்தும் முன் கையில் பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
* இந்த எண்ணெயைக் கொண்டு வாரத்திற்கு 2 முறை எண்ணெய் குளியல் எடுத்து வந்தால், தலைமுடி உதிர்வது குறைவதோடு, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Sunday, September 6, 2026, 20:28 [IST]
Desktop Bottom Promotion