உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..

Symptoms Of High Cholesterol In Tamil: கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற வழுவழுப்பான பொருள். கொலஸ்ட்ரால் என்றாலே பலரும் தீங்கை விளைவிக்கும் ஆரோக்கியமற்ற ஒன்றாக கருதுகிறார்கள். இயற்கையாகவே நமது கல்லீரல் உடலுக்கு தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. ஏனெனில் நமது உடலின் செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக இது செல்களை உருவாக்கவும், ஹார்மோன்களின் உற்பத்திக்கும், செரிமானத்திற்கும் மற்றும் பிற உடலின் சீரான செயல்பாடுகளுக்கும் அவசியமானது.

Top 6 Signs Of Bad Cholesterol You Should Never Ignore

இருந்தாலும், சில அசைவ உணவுகளில் இருந்தும் உடலுக்கு கொலஸ்ட்ரால் கிடைக்கிறது. இந்த கொலஸ்ட்ரால் இரத்தத்தில் லிப்போபுரோட்டீன் மூலம் உடலில் பயணிக்கிறது. இந்த கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை LDL கொழுப்பு மற்றும் HDL கொழுப்பு. இதில் HDL கொழுப்பு நல்ல கொழுப்பு ஆகும். LDL என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பாகும்.

இந்த வகை கெட்ட கொழுப்பு தான் இரத்தக்குழாய்களில் படிந்து மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அதற்கென்று குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும். இப்போது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் தெரியவரும் சில அறிகுறிகளைக் காண்போம்.

1. நெஞ்சு வலி

அடிக்கடி நெஞ்சு வலியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் கெட்ட கொலஸ்ட்ராலானது இதய தசைகளுக்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி தமனிகளில் குவிந்திருக்க வாய்ப்புள்ளது. இப்படி கொலஸ்ட்ரால் குவிவதன் மூலம், இரத்தக்குழாய்கள் குறுகி ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

இதன் விளைவாக உடல் உழைப்பு, மன அழுத்தம் அல்லது ஓய்வில் இருக்கும் போது கூட, நெஞ்சு வலியை நேரிடும். இப்படி ஏற்படும் வலி சில நிமிடங்கள் நீடித்திருக்கலாம். ஆனால் இந்த அசௌகரியம் போதுமான ஓய்வு அல்லது மருந்துகளால் குறையும். பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் லேசானவையாக இருக்கலாம். அத்துடன் குமட்டல், சோர்வு அல்லது மேல் வயிற்று அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம்.

2. கொழுப்பு கட்டிகள்

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், சருமத்திற்கு அடியில் உள்ள திசுக்களில் கொலஸ்ட்ரால் சேர்ந்து கொழுப்பு கட்டிகளாக ஆங்காங்கு தெரியும். அதுவும் இந்த கொழுப்பு கட்டிகள் முழங்கை, முழங்கால்கள் அல்லது தீவிர நிலையில் பிட்டங்களில் கூட காணப்படும். இப்படியான அறிகுறி உங்கள் உடலில் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி, உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை செய்யுங்கள்.

3. சுவாசிப்பதில் சிரமம்

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், இரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து, இரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்ப இதயம் கடினமாக செயல்பட நேரிட்டு, மூச்சுத்திணறலை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக படிக்கட்டுகளில் ஏறுதல், விறுவிறுப்பாக நடப்பது அல்லது தரையில் நேராக படுத்துக் கொள்வது போன்ற லேசான நடவடிக்கைகளினால் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். முக்கியமாக ஓய்வு எடுத்தாலும், முழுமையாக குணமாகாமல் இருக்கும்.

4. கால் வலி அல்லது தசை பிடிப்புகள்

கால் வலி அல்லது தசை பிடிப்புகளை அடிக்கடி சந்திக்கிறீர்களா? அப்படியானால் கால்களுக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கெட்ட கொழுப்புக்கள் தேங்கி, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தியிருக்கலாம். அதுவும் சிறிது நேரம் நடந்தாலே கால்களில் மிகுந்த வலியையும், இறுக்கத்தையும் சந்தித்தால், அது தமனித் தடிப்பு நோயைப் பிரதிபலிக்கிறது. இது மாரடைப்பு அபாயங்களை கணிசமாக அதிகரிக்கிறது.

5. தொடர்ச்சியான உடல் சோர்வு

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும். இதன் விளைவாக தசைகள் மற்றும் பிற உறுப்புகளுக்கு போதுமான சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் தொடர்ச்சியான உடல் சோர்வை சந்திக்க நேரிடும். முக்கியமாக தினசரி செயல்பாடுகளை கூட செய்ய முடியாத அளவில் மிகுந்த பலவீனத்தை சந்திக்கக்கூடும். உடல் சோர்வு பல பிரச்சனைகளுக்கான அறிகுறியாக இருப்பதல், இந்த அறிகுறி தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

6. தலைவலி அல்லது மந்தத்தன்மை

அடிக்கடி தலைவலியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் கொழுப்பு படிவுகளால் கழுத்துத் தமனிகள் சுருங்குவதன் அறிகுறியாக இருக்கலாம். இது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதைக் குறிக்கிறது. இதன் விளைவாக கவனச் சிதறல், தலைச்சுற்றல், மிகுந்த தலைவலி போன்றவற்றை சந்திக்க நேரிடும். அதுவும் இந்த தலைவலியானது தொடர்ந்து நீடித்திருப்பதோடு. தற்காலிக பார்வை இழப்பு அல்லது குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதை கவனிக்காமல் விடும் போது, பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Sunday, September 6, 2026, 14:46 [IST]
Desktop Bottom Promotion