மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...

Posted By:

Dindigul Style Seeraga Samba Egg Biryani Recipe In Tamil: நீங்கள் பிரியாணி பிரியரா? பிரியாணி என்றாலே சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணியைத் தான் சாப்பிடுவீர்களா? முட்டை பிரியாணியை பிரியாணியாகவே ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா? அப்படியானால் ஒருமுறை திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணியை சுவைத்துப் பாருங்கள்.

Dindigul Style Seeraga Samba Egg Biryani How To Make Egg Biryani Recipe

இந்த பிரியாணியை ஒருமுறை ருசித்தால், பின் அடிக்கடி இந்த பிரியாணியை சுவைக்க விரும்புவீர்கள். மாத இறுதியில் சிக்கன், மட்டன் வாங்க முடியாமல் இருக்கும் போது, முட்டை மட்டும் இருந்தாலே போதும் இந்த பிரியாணியை செய்து சாப்பிட்டால், வயிறும், மணமும் நிரம்பிவிடும்.

உங்களுக்கு இந்த திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சீரக சம்பா அரிசி - 2 கப் அல்லது 1/2 கிலோ (நீரில் கழுவி 30 நிமிடம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 3 கப் (2 கப் நீர் + 1 கப் தேங்காய் பால்)
* வேக வைத்த முட்டை - 6

அரைப்பதற்கு...

* சின்ன வெங்காயம் - 15
* பச்சை மிளகாய் - 5
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* புதினா - 1 கையளவு
* கொத்தமல்லி - சிறிது

பிரியாணி தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 100 மிலி
* நெய் - 2 டீஸ்பூன் + தேவையான அளவு
* தயிர் - 1/4 கப்
* திண்டுக்கல் பிரியாணி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூடன
* உப்பு - சுவைக்கேற்ப

திண்டுக்கல் பிரியாணி மசாலா வறுத்து அரைப்பதற்கு...

* மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ- 2
* கல்பாசி - 1 சிறிய துண்டு
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 6
* ஏலக்காய் - 4
* பிரியாணி இலை - 1
* ஜாதிபத்திரி - 1 சிறிய துண்டு
* முந்திரி - 5

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து திண்டுக்கல் பிரியாணி மசாலா பொடியை செய்வதற்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாதிபத்திரி மற்றும் முந்திரியை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அரைத்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள்.
* பின்னர் பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காய விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் திண்டுக்கல் பிரியாணி மசாலா, மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறி எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை சேர்த்து கிளறி, சிறிது கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த முட்டையை சேர்த்து, 4 நிமிடம் குறைவான தீயில் வைத்து கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 2 கப் தண்ணீர் மற்றும் 1 கப் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 1/2 மணிநேரம் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசியை சேர்த்து கிளறி, மூடி வைத்து உயர் தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து ஒருமுறை கிளறி விட்டு, மற்றொரு அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து, அதன் மேல் இந்த பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடி, குறைவான தீயில் 20 நிமிடம் தம் போட்டு இறக்கினால், அருமையான திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, September 6, 2026, 12:36 [IST]
Desktop Bottom Promotion