For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் உடம்பு 'ஜில்'லுன்னு இருக்க சில டிப்ஸ்!

By Mayura Akilan
|

Body Care Tips for Summer Season
சாலையில் இறங்கி நடந்தாலே தகிக்கிறது வெயில். வெப்பத்தின் தாக்கத்தினால் உடம்பில் வியர்வை ஊற்றெடுக்கிறது. அதோடு மட்டுமல்லாது கோடை கால நோய்களாக தலைவலி, வயிற்று வலி, வாய்புண், தோல் வெடிப்புகள், வேர்க்குரு என வரிசைக்கட்டி நிற்கும். கோடையை சமாளிக்க நமது உணவுப்பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள் அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.

நீர்ச்சத்து அவசியம்

கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். தாகத்துக்கு குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்சை தவிர்ப்பது நல்லது. பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. குழந்தைகளுக்கு தெருவில் விற்கும் குச்சி ஐஸ்களை வாங்கித்தரக் கூடாது.

அதே சமயம் தண்ணீர் மட்டுமே கோடை இம்சைகளை துரத்திவிடாது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது நல்லது. அதிகமாய் வேக வைத்து அல்லது பொரித்து உண்பதில் பலன் கிடைக்காது. உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி,மீன்,பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளரிக்காய்

கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் பல நோய்களுக்கும் பயன்படக்கூடியது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.விரும்பினால் மிளகுப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.

வெள்ளரியில் சோடியம் அதிக அளவில் உள்ளது. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், குளோரைட், இரும்புச்சத்து போன்றவையும் உண்டு. விட்டமின் ஏபி,சி உள்ளன. வியர்வை மூலம் உடலில்இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்யக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு. வெயிலில் அதிகம் அலைவதால் உடலில் குறைந்து போன நிறத்தை மீண்டும் பெற வெள்ளரி சாறை சருமத்தின் மீது பூசலாம்.

இளநீரில் விட்டமின் பி,சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற பல தாது உப்புகள் உள்ளன. கோடையை சமாளிக்கவும், உடலை பாதுகாக்கவும் இளநீர் ஏற்ற பானம்.

வெட்டி வேர் பானம்

கோடைக்கு குளிர்ச்சித்தருவது வெட்டி வேர். புல் வகையைச் சேர்ந்த வெட்டி வேர் மிகுந்த மணம் கொண்டது. இது வாசனைப் பொருள் தயாரிக்க பயன்படுகிறது. வெட்டி வேருடன் சந்தனக் கட்டையை சேர்த்து தண்ணீரில் ஊறவைத்து அந்தண்ணீரை அருந்துவது உடல் வெப்பத்தை தணிக்கும். மேலும், வியர்க்குரு, வேனல் கட்டிகளை குணப்படுத்தும். வெட்டி வேர் விசிறியை நீரில் நனைத்து விசிறிக்கொள்ள குளிர்ச்சியாக இருக்கும்.
கோடை காலத்திற்கு ஏற்றது.

கோடைக்காலத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கப் போகும்முன் ஒன்று இரண்டு பழம் சாப்பிட்டு படுக்கலாம். இதனால் மலைச்சிக்கல் தீரும். ஆஸ்துமா, நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. சாத்துக்குடி சாப்பிடுவது தாகத்தை தணிக்கும்; வீரியத்தைக்கூட்டும். நோய் எதிர்ப்பு ஆற்றலும் சாத்துக்குடிக்கு உள்ளது என்பதால் கோடையில் தினமும் ஒரு சாத்துக்குடியாவது சாப்பிடுவது நல்லது.

பொரித்த உணவு தவிர்க்கவும்

கோடைகாலத்தில் மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது.

உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும்.

குளிர்ந்த நீர், பூண்டு, பீட்ரூட், மிளகு, திராட்சை, பைன் ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும். கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ப்ரெஞ்ச் ப்ரை, சிக்கன் பிரை வகைகளை ஒதுக்கிவிடுங்கள்.

English summary

Body Care Tips for Summer Season | கோடையில் உடம்பு 'ஜில்'லுன்னு இருக்க சில டிப்ஸ்!

Every season needs a particular type of the body care. You need to amend few of the health care tips as per every season. During the summer season there is lot of heat persistent in the atmosphere, thus we nee to take the body care accordingly.
Story first published: Tuesday, March 6, 2012, 15:04 [IST]
Desktop Bottom Promotion