Ashwini Nakshatra: அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா?

Ashwini Nakshatra Characteristics: கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது தான் ஜோதிடம். ஜோதிடத்தில் மொத்தம் 9 கிரகங்களும், 27 நட்சத்திரங்களும் உள்ளன. இதில் கிரகங்களை விட நட்சத்திரங்கள் வலிமையானதாக கூறப்படுகிறது. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நட்சத்திரங்களுள் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் தான் பிறந்திருக்கக்கூடும். இந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ, அதுவே அந்நபரின் ஜென்ம ராசியாகும்.

எப்படி ஒருவரது ராசி அந்நபரின் குணாதிசயங்களை வெளிப்படுத்துமோ, அதேப் போல் ஒருவரது நட்சத்திரமும் அந்நபரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும். அந்த வகையில் நட்சத்திரத்தில் முதல் நட்சத்திரம் தான் அஸ்வினி. இந்த அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசிக்கு உரியது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது. இப்போது இந்த அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

Characteristics Of Ashwini Nakshatra In Astrology

பொதுவான குணங்கள்

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் இயற்கையாகவே உடல் வலிமையும், மன உறுதியையும் கொண்டிருப்பார்கள். இவர்களின் பார்வை மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும். எந்த ஒரு வேலையை எடுத்தாலும், அதை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஒருபோதும் சுயகௌரவத்தை விட்டு கொடுக்கமாட்டார்கள். வேலையில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். நீண்ட ஆயுட்காரர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

வேகமாக செயல்பட நினைப்பார்கள். இவர்களால் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது என்பது பிடிக்காது. சொந்த உழைப்பால் முன்னேற்ற நினைப்பார்கள். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவார்கள். எதிரிகளை சமாளிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும் பொறுமையை கைவிடமாட்டார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் எளிதாக புரிந்து கொண்டு முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

கல்வி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர் கல்வி கற்கும் யோகத்தைக் கொண்டிருப்பார்கள். எந்த துறையில இருந்தாலும், அதில் சிறந்து விளங்குவார்கள். கலை, கணிதம், ஜோதிடம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். அமானுஷ்யம், மாந்திரீகத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தொழில்

அஸ்வினி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் எந்த வேலையை செய்தாலும், அதில் மிகவும் நேர்மையாக இருப்பார்கள். கண்ணியத்தைக் கடைப்பிடிப்பார்கள். வங்கி, மருத்துவம், மின்சாரம், ரியல் எஸ்டேட், கட்டிடக்கலை போன்ற துறைகளில் இருந்தால் சிறந்து விளங்குவார்கள். ஜோதிடத்தில் இருந்தால் தலைச்சிறந்து விளங்குவார்கள்.

குடும்பம்

அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், இவர்களுக்கு காதலிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், சுக்கிரன் வலுவாக இருந்தால் தான், அந்த காதல் திருமணம் வரை செல்லும். இல்லாவிட்டால் பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் தான் நடக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் பாசமாக இருப்பார்கள். தங்கள் குடும்பத்தினரும் நீதி, நேர்மை தவறாமல் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களு இயற்கையாகவே நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது சிறுசிறு ஆரோக்கிய பிரச்சனைகள் தொந்தரவு செய்தாலும், இவர்கள் நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டிருப்பார்கள்.

அஸ்வினியில் உள்ள நான்கு பாதங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் 1, 2, 3, 4 என நான்கு பாதங்கள் உள்ளன.

* முதல் பாதம் செவ்வாயின் அம்சமாகும். இந்த முதல் பாதத்தை சேர்ந்தவர்கள் துணிச்சலுடனும், தைரியத்துடனும் இருப்பார்கள். சொந்த உழைப்பால் முன்னேற நினைப்பார்கள். இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகமாக பிறக்கும் வாய்ப்புள்ளது. குடும்பப் பாசம், வீரம், முரட்டுப் பிடிவாதம், தன்னம்பிக்கை எல்லாவற்றையும் கொண்டிருப்பார்கள்.

* இரண்டாம் பாதம் சுக்கிரனின் அம்சமாகும். இந்த பாதத்தை சேர்ந்தவர்கள் மற்றவர்களை கவரும் வகையில் இருப்பார்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் திறன் கொண்டிருப்பார்கள். காதல் திருமணம் நடைபெறும். நிறைய நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். நன்கு உயர் கல்வியை படிப்பார்கள்.

* மூன்றாம் பாதம் புதனின் அம்சமாகும். இந்த பாதத்தை சேர்ந்தவர்கள் நல்லவனுக்கு நல்லவனாகவும், கெட்டவனுக்கு கெட்டவனாக இருப்பார்கள். நன்கு பேசக்கூடியவர்களாகவும் இருப்பர். வாழ்வில் நல்ல நிலைக்கு வந்த பின்னரே திருமணம் என்று இருப்பார்கள். எவ்வளவு வசதியாக இருந்தாலும், எளிமையாகவே இருக்க விரும்புவார்கள். நல்ல அனுபவத்திற்கு பின் தொழிலை தொடங்குவார்கள். விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

* நான்காம் பாதம் சந்திரனின் அம்சமாகும். இந்த பாதத்தை சேர்ந்தவர்கள் திறமையானவர்களாக இருப்பார்கள். எப்போதும் பரபரவென்று எதையேனும் செய்தவாறு இருப்பார்கள். ஆடம்பரத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வசீகரமான முக அழகைக் கொண்டிருப்பார்கள். அதிக தெய்வ பக்தியைக் கொண்டிருப்பார்கள். உதவும் மனப்பானமையை கொண்டிருப்பார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, September 13, 2024, 15:25 [IST]
Desktop Bottom Promotion