குழந்தைகளைப் பெற்ற புது அப்பாக்களுக்கான சில பயனுள்ள குறிப்புகள்!

குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் பார்த்து கொள்ளவே விரும்புவர். அதிலும், அம்மாக்கள் சுலபமாக குழந்தைகளுடன் ஒட்டி கொள்வர். ஆனால், அப்பாக்களோ பிறந்த குழந்தையை தூக்கவே பயப்படுவர்.

குழந்தைகள் வளரும் வரை அவர்கள் காத்திருப்பார்கள். குழந்தையை கருவில் இருந்தே சுமந்திருக்கும் பெண்கள், குழந்தை பிறந்தவுடனும் அதே அரவணைப்புடன் இருப்பதால் குழந்தைகள் அம்மாக்களையே பெரிதும் விரும்புவார்கள். தந்தைகளுக்கு அந்த அனுபவமும் கிடைக்காது.

Tips For New Dads On Bonding With Their Child In Tamil

புதிதாக குழந்தை பெற்ற அம்மாக்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். இரவு நேர தூக்கம் என்பது அவர்களுக்கு சரியாக இருக்காது. அத்தகைய தருணத்தில் நீங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ள உதவினால், உங்களிடையே பிணைப்பு அதிகரிக்கும். புதிதாக அப்பா ஆனவர்கள் அனைவரும், சிறந்த தந்தையாக, நல்ல நண்பனாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.

ஆனால், அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இந்த கட்டுரையில் புது அப்பாக்களுக்கு உதவும் சில முக்கியமான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை சரியாக பின்பற்றினால், உங்கள் குழந்தையுடன் உங்களுக்கு பிணைப்பு அதிகரிக்கும்.

அரவணைப்பு

ஆரம்பத்திலிருந்தே உங்கள் குழந்தையுடன் ஒரு நெருக்கமான இணைப்பை உறுதிப்படுத்தவும். அதற்கு நீங்கள் ஒரு நாற்காலியில் சௌகரியமாக அமர்ந்து, குழந்தையை உங்கள் மார்புக்கு மேலே சாய்த்து நெருக்கமாகப் பிடிக்கவும். தேவைப்பட்டால் ஒரு போர்வையால் மூடி கதகதப்பாக வைக்கவும். இது உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, அன்பிற்கான ஹார்மோனை வெளியிடுகிறது. மேலும், இது ஒருவித ஆறுதலையும் பாதுகாப்பு உணர்வையும் வழங்கிடும்.

குழந்தையை குளிப்பாட்டும் நேரத்தில், தொட்டிலில் தூங்க வைக்கும் நேரத்தில் என கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் குழந்தையுடன் நெருக்கமாக இருக்க முயலுங்கள். முடிந்தால் குளிப்பாட்ட உதவலாம், ஆடைகள் மாற்றி விடலாம், கைகளில் வைத்து ஆட்டி தூங்க வைக்கலாம். இவை அனைத்துமே, உங்கள் குழந்தையை உங்களுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவும்.

குழந்தையுடன் பேசுவது

உங்கள் குழந்தை, உங்கள் மனைவியின் கருப்பையில் இருக்கும்போதே, நீங்கள் அவருடன் உரையாடி, பாடல் பாடி உங்களுக்கான பிணைப்பைத் தொடங்கலாம். குழந்தை வயிற்றில் இருக்கும் போது என்னென்ன செய்தீர்களோ, குழந்தை பிறந்தவுடனும், அதே விஷயங்களை பேசுவது, பாடல்களைப் பாடுவது போன்றவை உங்கள் குழந்தையை அமைதிப்படுத்த உதவும்.

ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், கருவில் இருக்கும் குழந்தை 32வது வாரத்திலிருந்தே, தங்கள் தந்தையை குரலை நினைவில் கொண்டு, பிறந்த உடனேயே குழந்தைகள் தங்கள் தந்தையின் குரலை அடையாளம் காண முடியுமாம். குழந்தை முகத்தை அடையாளம் காண வேண்டுமென்றால், சிறிது காலம் ஆகும். உங்களுக்கு அவ்வளவாக பாட தெரியாது என்றாலும் பிரச்சனையில்லை. அதற்கு பதிலாக, கதைகளை சொல்லுங்கள், புத்தகங்களை வாசியுங்கள். நிச்சயமாக குழந்தைக்கு நீங்கள் பேசுவது புரியபோவது கிடையாது. ஆனால், உங்களின் குரல் அவர்களின் மனதில் பதியும்.

குழந்தை பிறந்தது முதல் உங்கள் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு உங்களுக்குப் பிடித்த நாவல் அல்லது செய்தித்தாளை சத்தமாக படித்து காட்டுவது அவர்களைப் பாதுகாப்பாக உணர வைக்கும். உங்கள் குழந்தை வளர வளர, அவர்கள் வயதிற்கு ஏற்ற புத்தகங்களை மாற்றவும்.

வேலை செய்யும் போது குழந்தையை உடன் வைத்திருத்தல்

நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறீர்கள் அல்லது ஏதேனும் சுலபமான வீட்டு வேலை செய்கிறீர்கள் என்றால், குழந்தையை உடன் வைத்திருப்பது நல்ல பிணைப்பை ஏற்படுத்தும். இதற்கு பல வகையான பேபி கேரியர்கள் உள்ளன. நீங்கள் வேலை செய்யும் போது உங்கள் குழந்தையைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல நீங்கள் அவற்றைப் பயன்படுத்தலாம்.

உங்கள் குழந்தையுடனான பிணைப்பை நீங்கள் அதிகரிக்க வேண்டுமென்றால், இந்த பேபி கேரியரை அதிகம் பயன்படுத்துங்கள். நீங்கள் கேரியரை சரியான மற்றும் பாதுகாப்பான முறையில், பொறுப்பாக பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள். கேரியர் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வசதியாக இருக்க வேண்டும்.

வெளியே அழைத்து செல்வது

உங்கள் குழந்தை வெளியே அழைத்து செல்லக்கூடிய வயதை அடைந்ததும், உங்கள் குழந்தையை ஸ்டோலரில் வைத்துக்கொண்டு அக்கம்பக்கத்தில் நடைபயிற்சிக்கு செல்லலாம். உங்கள் குழந்தைக்கு வயதாகும்போது, உங்கள் சைக்கிளில் குழந்தைக்கான இருக்கையைப் பொறுத்திக் கொள்வது மாதிரியான விஷயங்களை யோசித்து செய்ய வேண்டியது அவசியம்.

வீட்டிலேயே இருப்பதை காட்டிலும், குழந்தைகளை வெளியே அழைத்து செல்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வெளியே அழைத்து செல்லும் நபர்களை குழந்தைகளுக்கு பொதுவாக மிகவும் பிடிக்கும். உங்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவு செய்து, அவர்களை மகிழ்ச்சியாக வெளியே அழைத்து செல்வது, அவர்களுடனான உங்கள் பிணைப்பை அதிகரிக்க செய்திடும்.

ஒரு வழக்கத்தை கொண்டிருத்தல்

நீங்கள் அலுவலகத்திற்கு சென்று வேலை முடிந்து வீடு திரும்புகிறீர்கள் என்றால், அலுவலகத்தைப் பற்றிய எண்ணங்களை வெளியே விட்டுவிட்டு வீட்டிற்கு செல்லவும். வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு உங்கள் மனதைத் தெளிவுபடுத்தி, உங்கள் குழந்தையுடன் நேரத்தைச் செலவிடத் தயாராக வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன், உங்களை சுத்தம் செய்து கொண்டு குழந்தையை தூக்கி கொஞ்சி, அவர்களுடன் நேரம் செலவிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

இதனை தினசரி வழக்கமாக கொண்டிருக்கும் போது, உங்கள் குழந்தையும் உங்களுக்காக காத்திருந்து, உங்களை பார்த்தவுடன் மகிழ்ச்சியடைவார்கள். வார இறுதி நாட்களில் மளிகைக் கடைக்குச் செல்வது அல்லது உங்கள் அப்பாவுடன் சிறு வயதில் செய்த விஷயங்களை நினைவு கூர்ந்து, அவற்றை உங்கள் குழந்தையுடன் சேர்ந்து செய்வது என வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

இது தவிர, உங்கள் அலுவலகத்தில் தந்தைக்கான விடுப்பு உள்ளதா என விசாரித்து, அதையும் பயன்படுத்தி உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது, உங்கள் துணைக்கு உதவியாகவும், குழந்தையுடன் உங்கள் பிணைப்பை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும்.

Story first published: Sunday, April 9, 2023, 13:10 [IST]
Desktop Bottom Promotion