வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Vazhaithandu Poricha Kuzhambu Recipe In Tamil: வாழைத்தண்டு வாங்கினாலே அதைக் கொண்டு பெரும்பாலும் பொரியல் தான் செய்வோம். ஆனால் அந்த வாழைத்தண்டு கொண்டு பொரிச்ச குழம்பு செய்யலாம் என்பது தெரியுமா? இப்படி குழம்பு செய்யும் போது இதுவரை வாழைத்தண்டை விரும்பி சாப்பிடாதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதுவும் இந்த வாழைத்தண்டு குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Vazhaithandu Poricha Kuzhambu How To Make Banana Stem Kulambu

உங்களுக்கு இந்த வாழைத்தண்டு பொரிச்ச குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* வாழைத்தண்டு - 300 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கடலைப்பருப்பு - 50 கிராம் (நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கட்டிப் பெருங்காயம் - சிறிய துண்டு
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 7-8
* வரமிளகாய் - 3
* தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4-5 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை:

* முதலில் குக்கரில் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு மற்றும் ஊற வைத்த கடலைப் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கட்டிப் பெருங்காயம் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லி, சீரகம், மிளகு, வெந்தயம், வரமிளகாய், நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த மசாலாவை குக்கரில் உள்ள வாழைத்தண்டுடன் சேர்த்து கலந்து, மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறிய வாணலியை வைத்து, அதில் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, August 31, 2026, 14:55 [IST]
Desktop Bottom Promotion