ரோட்டுக்கடை பிரெட் ஆம்லெட் ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு பாருங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...!

Posted By:

Rottukadai Bread Omelette Recipe in Tamil: தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் சுவையாகவும் ஒரு காலை உணவை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டையும், பிரட்டும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு பிரட் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.

பிரட் ஆம்லெட் பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு உணவாகும், குறிப்பாக சாலையோரக் கடைகளில் விற்கும் பிரெட் ஆம்லெட்டின் சுவையும், மணமும் தனித்துவமானதாக இருக்கும். பிரெட் ஆம்லெட் கடையைக் கடக்கும் போதே அதன் வாசனை நம்மை இழுக்கும். அந்த சுவையான பிரெட் ஆம்லெட் ஆரோக்கியமான உணவும் கூட. இந்த பிரெட் ஆம்லெட்டை வீட்டிலேயே நாம் செய்து விடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு உங்களின் வழக்கமான சமையல் போரடித்து விட்டதா? அப்படியானால் ஒருமுறை இந்த ரோட்டுக்கடை பிரட் ஆம்லெட்டை காலை டிபனாக செய்து கொடுங்கள்.

Rottukadai Bread Omelette Recipe How to Make Rottukadai Bread Omelette

உங்களுக்கு ரோட்டுக்கடை பிரட் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் ஆம்லெட்டின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 4 பிரெட் துண்டுகள்
- 4 முட்டை
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 தக்காளி பொடியாக நறுக்கியது
- அரை ஸ்பூன் மிளகுத்தூள்
- 1 பச்சை மிளகாய் நறுக்கியது
- 2 ஸ்பூன் வெண்ணெய்
- அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு

செய்முறை:

- ஒரு சிறிய வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.

- பின்னர் நறுக்கி தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். தக்காளி லேசாக மென்மையாகும் வரை வேக வைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, அதை தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு சிறிய கிண்ணத்தில், இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். அனைத்தும் நன்கு கலக்கும் வரை ஒரு ஸ்பூனை வைத்து அடிக்கவும். அதை அப்படியே தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, அது உருகியதும், முட்டைக் கலவையை ஊற்றவும். கலவையைத் தவாவில் சீராகப் பரவுமாறு சுற்றி விடவும்.

- ஒரு பிரெட் துண்டை முட்டைக் கலவையில் முக்கி, தோசைக்கல்லில் உள்ள முட்டையின் மீது வைக்கவும். மற்றொரு ரொட்டித் துண்டையும் இதேபோல் செய்யவும்.

- வெங்காயம் தக்காளி கலவையில் ஒரு பகுதியை ஒரு பிரெட்டின் மீது வைத்து அதை நன்றாக பரப்பி விடவும். பின்னர் மற்றொரு பிரெட்டை கவனமாக அதன்மீது திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்.

- இருபுறமும் பொன்னிறமாகும் வரை ஆம்லெட்டை வேக வைக்கவும். பின்னர் தோசைக்கல்லில் இருந்து எடுத்து, பாதியாக வெட்டி உடனடியாகப் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Monday, December 15, 2025, 16:52 [IST]
Desktop Bottom Promotion