பீர்க்கங்காய் வேர்க்கடலை தொக்கு

உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அந்த பீர்க்கங்காய் கொண்டு என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் ஒரு ஈஸியான மற்றும் சுவையான பீர்க்கங்காய் தொக்கு செய்யுங்கள்.

Posted By:

உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அந்த பீர்க்கங்காய் கொண்டு என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் ஒரு ஈஸியான மற்றும் சுவையான பீர்க்கங்காய் தொக்கு செய்யுங்கள். இந்த தொக்கு செய்வதற்கு தக்காளி, வெங்காயம் என்று எதுமே தேவைப்படாது. பீர்க்கங்காய் மற்றும் வேர்க்கடலை இருந்தாலே போதுமானது. முக்கியமாக இந்த பீர்க்கங்காய் வேர்க்கடலை தொக்கு சாதத்திற்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Ridge Gourd Peanut Thokku Recipe In Tamil

பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மலச்சிக்கல் குறையும், எடையை குறைக்க உதவும், உடலில் இருந்து நச்சுக்களை நீக்கப்படும், அசிடிட்டி குறையும் மற்றும் செரிமானம் மேம்படும். முக்கியமாக இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்க்க மறவாதீர்கள்.

உங்களுக்கு பீர்க்கங்காய் வேர்க்கடலை தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் வேர்க்கடலை தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பீர்க்கங்காய் - 1 (நீளமானது)

* வேர்க்கடலை பருப்பு - 1 கையளவு

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1/4 டீஸ்பூன்

* சீரகம் - 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* பச்சை மிளகாய் - 2 (கீறியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் நீங்கள் வறுத்த வேர்க்கடலையைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவற்றை அப்படியே மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தால், அந்த வேர்க்கடலையை வாணலியில் போட்டு நன்கு வறுத்து இறக்கி, தோலை நீக்கிவிட்டு, பின் அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து ஒரு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மல்லித் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்னர் பொடித்த வேர்க்கடலையை சேர்த்து நன்கு கிளறி, உங்களுக்கு வேண்டிய அளவு நீரை ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக மூடியைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பீர்க்கங்காய் வேர்க்கடலை தொக்கு தயார்.

Image Courtesy: chitrasfoodbook

[ of 5 - Users]
Story first published: Monday, December 12, 2022, 13:35 [IST]
Desktop Bottom Promotion