ராகி ஊத்தாப்பமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Ragi Utthappam With Kara Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் ஒரு மாதிரியான டிபன் தான் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சத்தான டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

Ragi Utthappam With Kara Chutney How To Make a Ragi Dosa With Kara Chutney Recipe

உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகியைக் கொண்டு ஊத்தாப்பம் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னியை செய்து கொடுங்கள். இந்த ராகி ஊத்தாப்பம் சுவையாகவும் இருக்கும், சத்தானதும் கூட. உடல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒருமுறை இந்த டிபன் காம்போவை செய்து கொடுங்கள்.

இந்த ராகி ஊத்தாப்பம் மற்றும் கார சட்னி ரெசிபி குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த ராகி ஊத்தாப்பம் மற்றும் கார சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி ஊத்தாப்பம் மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தோசை மாவிற்கு...

* அவல் - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப்
* ராகி மாவு - 1 கப்
* மோர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - பொடியாக நறுக்கியது
* கொத்தமல்லி - (பொடியாக நறுக்கியது)

சட்னிக்கு...

* பூண்டு - 3 பல்
* தக்காளி - 2
* வெல்லம் - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் அவலை எடுத்து நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கப் நீரை ஊற்றி, 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த அவலை நீருடன் அப்படியே சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ராகி மாவு, மோர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 3 பல் பூண்டு, தக்காளி, வெல்லம், சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், கார சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தயாரித்து வைத்துள்ள மாவை, ஊத்தாப்பம் போன்று ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ராகி ஊத்தாப்பம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 26, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion