ஓணம் ஸ்பெஷல் கேரளாவின் 3 விதமான பாரம்பரிய இனிப்புகள் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Onam 2025: கேரளாவில் மிகவும் பிரமாண்டமாக 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் ஓணம். கேரளாவின் துடிப்பான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல்வேறு சுவையான உணவு வகைகளின் கொண்டாட்டமாக ஓணம் கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் மலையாள மாதத்தின் முதல் மாதமான சிங்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி அத்தத்தில் தொடங்கி, செப்டம்பர் 05 ஆம் தேதி திருவோணத்தில் முடிவடைகிறது.

ஓணம் பண்டிகை என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது, ஓணம் சத்யா என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான சைவ விருந்து தான். இந்த சத்யா விருந்தில் கேரளாவின் பாரம்பரிய உணவுகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். அதுவும் ஒரு வாழை இலையில் சாம்பார், அவியல், பச்சடி, ரசம் முதல் இனிப்புக்களில் நெய் அப்பம், அட பிரதமன், ரவா லட்டு, பால் பாயாசம் போன்ற 20-க்கும் அதிகமான உணவுகள் இடம் பெற்றிருக்கும்.

Onam 2025 3 Traditional Sweets From Kerala You Can Try At Home This Onam Festival

உங்களுக்கும், உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் கேரள உணவுகள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ஓணம் பண்டிகையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கேரளாவின் பாரம்பரிய இனிப்புக்களை செய்து கொடுத்து அசத்துங்கள்.

1. அட பிரதமன்

ஓணம் சத்யா விருந்தில் இடம் பெறும் மிகவும் முக்கியமான இனிப்பு தான் அட பிரதமன் என்னும் ஒரு வகையான பாயாசம். இந்த பாயாசம் அட அரிசி, வெல்லம், தேங்காய் பால், நட்ஸ் போன்றவை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 2 டம்ளர்
* அட அரிசி - 1 கப்
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 100 மிலி
* தேங்காய் பால் - 1 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதித்ததும், அதில் அட அரிசியை கழுவி சேர்த்து, நன்கு வேக வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அதில் 100 மிலி நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், அதில் வடிகட்டி வைத்துள்ள அட அரிசியை சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
* நீர் ஓரளவு வற்றியதும், அதில் தேங்காய் பால், ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து ப்ரை செய்து, அட பிரதமனுடன் சேர்த்து கிளறினால், சுவையான அட பிரதமன் தயார்.

2. நெய் அப்பம்

கேரளாவின் ஓணம் சத்யா விருந்தில் இடம் பெறும் மற்றொரு இனிப்பு பலகாரம் தான் நெய் அப்பம். வாழைப்பழம், பச்சரிசி, காய்ந்த தேங்காய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த அப்பம், மிகவும் சுவையாக இருக்கும். இந்த நெய் அப்பத்தை ஒருமுறை வீட்டில் ட்ரை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள்.

தேவையான பொருட்கள்:

* வாழைப்பழம் - 3
* பச்சரிசி - 1 டம்ளர் (ஊற வைத்தது)
* வெல்லம் - 1/4 கப்
* தண்ணீர் - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன் + தேவையான அளவு
* காய்ந்த தேங்காய் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெள்ளை எள்ளு விதைகள் - 1 டீஸ்பூன்
* கருப்பு எள்ளு விதைகள் - 1 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் வாழைப்பழம், ஊற வைத்த பச்சரிசியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1/4 கப் வெல்லம் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்ததை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், காய்ந்த தேங்காயை சேர்த்து நன்கு வறுத்து, அரைத்த வாழைப்பழத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ஏலக்காய் தூள், வெள்ளை எள்ளு விதைகள், கருப்பு எள்ளு விதைகள் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதன் குழிகளில் நெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான நெய் அப்பம் தயார்.

3. ரவா லட்டு

தேவையான பொருட்கள்:

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உலர் திராட்சை - சிறிது
* ரவை - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் - 3
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், உலர் திராட்சை சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ரவையை சேர்த்து, நன்கு வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 1/4 கப் நீரை ஊற்றி, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கூடுதலாக நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை மற்றும் தட்டி வைத்துள்ள ஏலக்காயை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து, சர்க்கரை நன்கு கரைந்த பின், அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்த ரவையை சேர்த்து கிளறி, குக்கரை மூடி விசில் போட்டு, 15 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து குக்கர் மூடியைத் திறந்தால், ரவை நீரில் நன்கு ஊறியிருப்பதைக் காணலாம்.
* பின் கையில் நெய் தடவி, ரவையை சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி, நடுவே ப்ரை செய்து வைத்துள்ள ஒரு உலர் திராட்சையை வைத்து அழுத்தினால், ரவா லட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 29, 2025, 19:09 [IST]
Desktop Bottom Promotion