நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க...

Posted By:

Nagercoil Traditional Karupatti Paniyaram Recipe In Tamil: உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான, அதே சமயம் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைப்பவரா? அப்படியானால் பணியாரம் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் என்றே கூறலாம். இந்த பணியாரத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம். இந்த பணியாரம் மிகவும் சுவையானது மட்டுமின்றி சத்தானதும் கூட. ஏனெனில் இது கருப்பட்டி சேர்த்து செய்யப்படுகிறது.

Nagercoil Traditional Karupatti Paniyaram How To Make This Traditional Paniyaram

தினமும் சிறிது கருப்பட்டியை சாப்பிட்டால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் மற்றும் உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். முக்கியமாக கருப்பட்டியில் இரும்புச்சத்து உள்ளதால், இரத்த சோகை குறைய ஆதரவாக இருக்கும். இவ்வளவு நன்மைகளை வழங்கும் கருப்பட்டியை உங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு கருப்பட்டியைப் பயன்படுத்தி பணியாரம் செய்து கொடுங்கள்.

உங்களுக்கு இந்த நாகர்கோவில் கருப்பட்டி பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 2 கப்
* கருப்பட்டி - 2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பச்சரிசியை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஊற வைத்த பச்சரிசியை நீரில் கழுவிவிட்டு, ஒரு காட்டன் துணியில் போட்டு 10-15 நிமிடம் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் அரிசியைப் போட்டு பவுடர் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை பொடித்து எடுத்துக் கொண்டு, அதில் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கருப்பட்டியை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கருப்பட்டி கரைந்ததும், அதை இறக்கி, ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கரைத்த கருப்பட்டியை கொஞ்சம் கொஞ்சமாக அரைத்த மாவுடன் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்ததும், மீதமுள்ள கருப்பட்டியை தனியாக பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த மாவை மூடி வைத்து 6 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும்.
* ஒருவேளை உடனே பணியாரம் சுட நினைத்தால், 2 சிட்டிகை ஆப்ப சோடாவை சேர்த்து கலந்து, சுட்டு சாப்பிடலாம். ஆனால் பாரம்பரிய முறையில் செய்த பணியாரத்தை சாப்பிட நினைத்தால், புளிக்க வைக்க வேண்டும்.
* மாவு புளித்த பின், அதில் மீதமுள்ள கருப்பட்டியை சேர்த்து நன்கு பணியார மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு சிறிய குழிகரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி, குறைவான தீயில் வைத்து பொரித்து எடுத்தால், நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் தயார்.

குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு எண்ணெயில் பொரிக்க வேண்டாமெனில், பணியாரக்கல்லில் மாவை ஊற்றி வேக வைத்து சாப்பிடலாம்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 13, 2026, 18:48 [IST]
Desktop Bottom Promotion