இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..

Posted By:

Mutton Kurma Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே உங்கள் வீட்டில் காலையில் இட்லியும், மட்டன் குழம்பும் தான் டிபனாக இருக்குமா? அதுவும் இப்படி செய்து சாப்பிட்டால் தான் விடுமுறை நாளை கொண்டாடியது போன்று இருக்குமா? இட்லிக்கு எப்பவும் ஒரே சுவையில் தான் மட்டன் குழம்பு செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மட்டன் குருமாவை செய்யுங்கள். இந்த மட்டன் குருமா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Mutton Kurma How To Make Mutton Kuruma For Idly And Dosa

இந்த மட்டன் குருமா குறித்து ஹேமா சுப்ரமணியன் என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* மட்டன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்

மசாலா அரைப்பதற்கு...

* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 2 டீஸ்பூன்
* முந்திரி - 6
* தண்ணீர் - சிறிது
* தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1
* மராட்டி மொக்கு - 1
* கல்பாசி - சிறிய துண்டு
* ஜாவித்ரி - சிறிய துண்டு
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* ஊற வைத்த மட்டன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சுடுநீர் - 1 1/2 கப்
* அரைத்த மசாலா

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா, முந்திரி மற்றும் சிறிது நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மிக்சர் ஜாரில் ஊற வைத்த பொருட்களை நீருடன் அப்படியே சேர்த்து, அத்துடன் தேங்காயை சேர்த்து முதலில் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, மராட்டி மொக்கு, கல்பாசி, ஜாவித்ரி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்க வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மல்லித் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, குருமா மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து, நன்கு 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மட்டன் குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, June 7, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion