குழம்பு வைக்க நேரமில்லையா? 10 நிமிசத்துல இந்த கொத்தமல்லி தொக்கு செய்யுங்க... சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...!

Posted By:

Kothamalli Thokku Recipe in Tamil: இல்லத்தரசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கலே தினமும் என்ன சமைப்பது என்பதுதான். ஏனெனில் எப்படி யோசித்தாலும் சாம்பார், புளிக்குழம்பு மற்றும் குருமா தவிர வேறு சமையலை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமாகும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தினமும் காலை அல்லது இரவில் என்ன சமைப்பது என்பது அவர்களின் வேலையின் போதும் தலைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

காலையில் அவசரமாக வேலைக்கு செல்லும்போது என்ன குழம்பு வைக்கலாம் என்ற யோசனையே பாதி நேரத்தை தின்றுவிடும். அதுபோன்ற நேரங்களுக்காகத்தான் உள்ளது சில தொக்கு வகைகள். அந்த வகையில் கொத்தமல்லியை வைத்து எப்படி தொக்கு செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இட்லி, தோசைக்கு கொத்தமல்லி சட்னி எப்படி சிறந்த சைடிஷாக உள்ளதோ, அதேபோல சாதத்துக்கு இந்த கொத்தமல்லி தொக்கு சிறந்த சைடிஷாக இருக்கும்.

Kothamalli Thokku Recipe How to Prepare Kothamalli Thokku

தேவையான பொருட்கள்:

- பச்சைக் கொத்தமல்லி - 1 கட்டு
- வர மிளகாய் - 10
- கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 4 ஸ்பூன்
- பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
- பூண்டு - 10 பல்
- புளி - நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

- முதலில் கொத்தமல்லியை தனியாக பிய்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

- வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு மற்றும் பொட்டுக்கடலை மூன்றையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

- அதே எண்ணெயில் புளியையும், பெருங்காயத்தையும் தனித்தனியாக காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

- பச்சைக் கொத்தமல்லியை நன்றாக கழுவி எண்ணெய் விட்டு ஈரப்பதம் போய் நன்றாக சுருங்கும் வரை வதக்கவும்.

- கொத்தமல்லி நன்கு வதங்கியதும் மிக்சி ஜாரில் அதனுடன் பூண்டு சேர்த்து துவையல் மாதிரி நைசாக தண்ணீர்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

- வறுத்த வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பொட்டுக்கடலை, பொரித்த புளி, பெருங்காயம் இவற்றுடன் உப்பு சேர்த்து நைஸாக மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.

- இந்த கலவை நன்கு தூளானதும் அரைத்த கொத்தமல்லியுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது நேரம் உலர வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- குழம்பு வைக்க நேரமில்லாத சமயத்தில் இதனை சூடான சாதத்தில் போட்டு நெய்யுடன் சேர்த்து பருப்பு பொடி போல சாப்பிட்டால் சுவையாக இருக்கலாம். குழந்தைகளுக்கும் மதிய உணவிற்கு கொடுத்து விடலாம்.

- தேங்காய், வெங்காயம் சேர்க்காததால் இதை பிரிட்ஜில் வைத்தால் 10 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 25, 2024, 17:06 [IST]
Desktop Bottom Promotion