ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருமுறை செஞ்சு பாருங்க..

Posted By:

Hotel Style Kothamalli Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசையைத் தான் டிபனாக செய்யும் ஐடியா உள்ளதா? இன்னும் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.

Hotel Style Kothamalli Chutney How To Make This Delicious Chutney

அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று மல்லி சட்னியை செய்யாமல், ஒருமுறை ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை அரைக்கும் பக்குவம் தான் இதன் சுவைக்கு முக்கிய காரணம். எனவே சரியான பக்குவத்தில் வதக்கி அரையுங்கள்.

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 1
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி - 1 கட்டு
* தேங்காய் - 1 மூடி (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை உடைத்து சேர்த்து நிறம் மாற வறுத்து, இவ்விரண்டையும் ஒரு தட்டில் எண்ணெயை வடிகட்டிவிட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் புளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லியை சுத்தம் செய்து சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், பெருங்காத் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னி தயார்.

ஊட்டச்சத்து மதிப்பு

3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி சட்னியில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:

* கலோரிகள் : 95-110 kcal (தேங்காய் ஒரு மூடி பயன்படுத்தப்பட்டுள்ளதால் நல்ல ஆற்றல் கிடைக்கும்)

* புரதச்சத்து : 2-2.5 கிராம் (உளுந்தம் பருப்பிலிருந்து)

* கார்போஹைட்ரேட் : 5-6 கிராம்

* நார்ச்சத்து : 2.5-3 கிராம் (அதிக நார்ச்சத்து)

* கொழுப்பு : 7-8.5 கிராம் (தேங்காய் மற்றும் எண்ணெயிலிருந்து கிடைக்கும் நல்ல கொழுப்பு)

[ of 5 - Users]
Story first published: Monday, July 6, 2026, 6:54 [IST]
Desktop Bottom Promotion