4 முட்டை இருந்தா ஈவ்னிங் இந்த மாதிரி போண்டா செய்யுங்க.. டேஸ்ட் செம சூப்பரா இருக்கும்...

Posted By:

Egg Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் வழக்கமாக செய்வது போன்று இல்லாமல், வித்தியாசமான சுவையில் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா?

உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு போண்டா செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்யக்கூடிய ஸ்டைலில் போண்டாவை செய்யாமல் முட்டைக் கொண்டு வித்தியாசமான முறையில் போண்டா செய்யுங்கள். நிச்சயம் இந்த போண்டா அனைவரும் ஈர்க்கும் வகையில் சுவையாக இருக்கும்.

Egg Bonda How To Make a Egg Bonda Recipe

உங்களுக்கு முட்டை போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை - 4
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - சிறிது
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* துருவிய கேரட் - சிறிது

மாவிற்கு...

* கடலை மாவு - 3/4 கப்
* பச்சரிசி மாவு - 1/4 கப்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - சிறிது
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு இட்லி தட்டை எடுத்து, அதன் 4 குழிகளின் மேல் சிறு சிறு கிண்ணத்தை வைக்க வேண்டும்.
* பின் அந்த கிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
* பின் அந்த முட்டைகளின் மேல் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை தூவ வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் தூள் தூவி, பின் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் துருவிய கேரட்டை தூவி, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முட்டை வெந்ததும், அதை எடுத்து குளிர வைத்து, கிண்ணத்தில் இருந்து முட்டையை கவிழ்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டைகளை எடுத்து, மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை போண்டா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 31, 2024, 18:19 [IST]
Desktop Bottom Promotion