சிக்கன் வாங்குனா.. மறக்காம ஒருவாட்டி இந்த குழம்பை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..

Posted By:

Chicken Milagu Kulambu Recipe In Tamil: ஞாயிற்றுக் கிழமை அன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கப் போகிறீர்களா? அந்த சிக்கனை சற்று ஸ்பெஷலாக சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சளி பிடித்துள்ளதா? அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு மிளகு குழம்பு செய்து கொடுங்கள்.

இந்த சிக்கன் மிளகு குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். தற்போது குளிர்காலம் என்பதால், இந்த சுவையில் சிக்கன் குழம்பை செய்து சாப்பிட்டால், சளி தொல்லையால் சிரமப்படுவதைத் தடுக்கலாம். முக்கியமாக இந்த குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

Chicken Milagu Kulambu How To Make a Chicken Pepper Kuzhambu

உங்களுக்கு சிக்கன் மிளகு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் மிளகு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு..

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் - 3/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடு தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, அத்துடன் தக்காளியையும் சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நீர் விடும் வரை நன்கு சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர் விட்டு வந்ததும், அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குழம்பிற்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் மிளகு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, November 16, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion