தீபாவளிக்கு வீடே மணக்குற அளவில் செட்டிநாடு மட்டன் குழம்பை செய்யுங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்..

Posted By:

Chettinad Mutton Kuzhambu Recipe In Tamil: தீபாவளிக்கு உங்கள் வீட்டில் காலையில் இட்லிக்கு மட்டன் குழம்பை செய்யப் போகிறீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்யும் மட்டன் குழம்பை செய்யாம, செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பை செய்யுங்கள். இந்த மட்டன் குழம்பு இட்லிக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Chettinad Mutton Curry How To Make a Chettinad Mutton Kuzhambu Recipe

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* மட்டன் - 1 1/4 கிலோ
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 6
* ஏலக்காய் - 1
* கல்பாசி - சிறிது
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* கசகசா - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 1/2 கப்

குழம்பிற்கு...

* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* ஜாதிக்காய் பொடி - 1/2 சிட்டிகை
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு கழுவி விட்டு, அத்துடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, மிளகு, சீரகம், சோம்பு, முந்திரி, கசகசா சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாகும் வரை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்கி, பின் ஊற வைத்து மட்டனை சேர்த்து 5-6 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி, பின் தக்காளி மற்றும் 1/2 சிட்டிகை ஜாதிக்காய் பொடியை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு, பின் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 31, 2024, 8:14 [IST]
Desktop Bottom Promotion