4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க

Posted By:

Bread Pulao Recipe in Tamil: பொதுவாக வெரைட்டி சாதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது புளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவைதான். இந்த வகையான வெரைட்டி சாதங்கள் செய்வதற்கு மிகவும் எளிமையானது மற்றும் சுவையானது, அதனால்தான் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்கு மதிய உணவாக இது செய்து கொடுக்கப்படுகிறது.

Bread Pulao Recipe How to Make at Home in Tamil

எவ்வளவு நாட்கள்தான் இந்த வழக்கமான ரைஸ் வகைகளையே குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது. கொஞ்சம் வித்தியாசமாக அதேசமயம் சுவையான சாதங்களை செய்து கொடுக்கும் போது குழந்தைகள் அவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட வித்தியாசமான சாதங்களில் ஒன்றுதான் பிரட் புலாவ். பொதுவாக குழந்தைகள் பிரட்டை வைத்து ஆம்லெட், டோஸ்ட் போன்றவற்றைத்தான் சாப்பிடுவார்கள், ஆனால் இந்த ஸ்டைலில் புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை அவர்களின் லன்ச் பாக்சில் கொடுத்தால் மிகவும் சந்தோசமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த சுவையான பிரட் புலாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- பாஸ்மதி அரிசி - 1 கப்
- பிரெட் துண்டு - 4
- வெண்ணெய் - 3 ஸ்பூன்(டோஸ்ட் செய்ய)
- பச்சை பட்டாணி - 1/2 கப்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 6
- நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 ஸ்பூன்
- நறுக்கிய புதினா இலைகள் - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1 தேக்கரண்டி
- தயிர் - 1/4 கப் அல்லது அதற்கும் குறைவாக
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - 2 ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பிரிஞ்சி இலை - 2
- கிராம்பு - 5
- பட்டை - 2 இன்ச்
- ஏலக்காய் - 4

செய்முறை:

- முதலில் பிரட் துண்டுகளில் வெண்ணெய் தடவி, ஒரு தோசைக்கல்லில் போட்டு இரண்டு புறமும் பழுப்பு நிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை டோஸ்ட் செய்யவும்.

- டோஸ்ட் தயாரானதும், அவற்றைச் சிறிது நேரம் ஆறவிட்டு, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி, குறைந்தது 15-20 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.

- ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிச் சூடாக்கி, தாளிப்பதற்கான பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, அவை நன்கு பொரிந்து வரும் வரை வதக்கவும்.

- அதன்பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து லேசாக வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒருமுறை கிளறிய பின், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

- அடிப்பிடிக்காமல் இருக்க, மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கவும்.

- பின்னர், பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- அதன்பின், அரை கப் வேக வைத்த பட்டாணியைச் சேர்த்து, மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதின் சுவை பட்டாணியில் ஏறும் வகையில் ஒரு நிமிடம் வதக்கவும்.

- பின்னர் உப்பு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தயிர் மசாலாவுடன் நன்றாகக் கலக்கும் வரை வதக்கவும்.

- அதன்பிறகு, ஊறவைத்து தண்ணீர் வடித்து வைத்துள்ள பாசுமதி அரிசியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

- பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான-அதிகத் தீயில் 5-6 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் தீயைக் குறைத்து, அரிசி 80% வேகும் வரை மூடி வைத்துச் சமைக்கவும்.

- அரிசி வெந்ததும், பிரட் துண்டுகளைச் சேர்த்து அரிசியுடன் மெதுவாகக் கிளறவும். பிறகு பாத்திரத்தை இறுக்கமாக மூடவும்.

- இப்போது அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.

- அவ்வளவுதான், சுவையான பிரட் புலாவ் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 29, 2026, 12:44 [IST]
Desktop Bottom Promotion