அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்..

Posted By:

Avarakkai Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போது அவரைக்காய் வாங்கினாலும், அதைக் கொண்டு பொரியல் தான் செய்வீர்களா? ஆனால் இந்த அவரைக்காயைக் கொண்டு கிரேவி செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் இந்த கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சுவையில் அவரைக்காயை செய்யும் போது, அவரைக்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Avarakkai Gravy How To Make Broad Beans Gravy

உங்களுக்கு இந்த அவரைக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவரைக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* நறுக்கிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 5 பல் (தட்டியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* அவரைக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
* அரைத்த தேங்காய் விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, கசகசா மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு பற்களை தட்டிப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய அவரைக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான அவரைக்காய் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 3, 2026, 14:20 [IST]
Desktop Bottom Promotion