Latest Updates
-
பணத்தின் வரலாறு: காகித பணத்தை முதன் முதலாக பயன்படுத்திய நாடு எது தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க..
முருகனுக்கு சுமக்கும் காவடிகளில் என்னென்ன காவடிகள் இருக்கு தெரியுமா?
ஆறுமுக கடவுளுக்கு பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துக்கின்றனர். பக்தர்கள் காவடி எடுப்பதற்கும் காரணம் இருக்கிறது. காவடிகள் என்னென்ன காவடிகள் இருக்கின்றன என பார்க்கலாம்.
தைப்பூச திருநாளான இன்று ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் மற்றும் சிவாலயங்களில் திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. தைப்பூசத்தையொட்டி பால் குடம், காவடி, பாதயாத்திரை என பக்தர்கள் முருகன் கோவில்களுக்குப் படையெடுத்துள்ளனர். முருகன் கோவிலுக்கு பாதையாத்திரையாக செல்லும்போது, காவடியை சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதியில் கோவிலை அடையும்போது மனதில் உள்ள பாரங்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுகின்றனர் பக்தர்கள்.

இடும்பன் அசுரனாக இருந்தாலும் சிறந்த பக்திமான். அகத்திய மாமுனிவர் இமயமலைச் சாரலில் இருந்த இரண்டு மலை சிகரங்களுள் ஒன்றை சிவனாகவும் இன்னொன்றை சக்தியாகவும் வழிபட்டு வந்தார். அவை சிவகிரி என்றும் சக்திகிரி என்றும் அழைக்கப்பட்டது. அந்த இரு மலைகளையும் பொதிகை மலைக்கு கொண்டுவர விரும்பினார். அத்தகைய பலம் தருவதற்கு முருகப்பெருமானை வழிபட்டார்.
முருகன் அருளால் அந்த இரண்டு சிகரங்களையும் தூக்கிக்கொண்டு கேதாரம் வரை வந்தவர் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது இடும்பனும் அவன் மனைவி இடும்பியும் அகத்தியரை வணங்கி அருள்புரிய வேண்டினார்கள். அகத்தியர் இடும்பனை நோக்கி இந்த இரண்டு மலைகளையும் தென் திசை நோக்கி பொதிகை மலையில் கொண்டு வந்து வைத்தால், உமக்கு பேரும் புகழும் கிடைக்கும் என்றார்.

காவடி தூக்கிய இடும்பன்
அகத்தியரின் கட்டளையை ஏற்று இடும்பன் மலையைத் தூக்கும் ஆற்றலைத் தரவேண்டும் என்று வேண்டினான். அவரும், முருகனுடைய மூலமந்திரத்தையும் வழிபடும் முறையையும் கற்றுத் தந்தார். முனிவரை வணங்கியபடி முருகப்பெருமானை நினைத்து மூலமந்திரத்தை ஜெபித்தான். அப்போது, அஷ்ட நாகங்கள் கயிறுகளாக அவனிடம் வந்தன. பிரம்மதண்டம், புஜதண்டமாக தோள் மீது சுமக்கின்ற தடியாக வந்தது. குறுமுனிவரின் தவத்தையும், முருகனின் ஆற்றலையும் கண்டு வியந்தான்.

முருகன் அருள்
நாகக் கயிறுகளை உறிகளாக்கி, இரண்டு மலைகளை தூக்கி, உறிகளில் வைத்தான். பிரமதண்டத்தை தோள் மீது வைக்கும் தடியாக்கி, இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக மாட்டி, முருகப்பெருமானின் மூல மந்திரத்தை நினைத்து, முழங்காலை ஊன்றியபடி பிரம்மதண்டத்தைத் தோளில் வைத்து முருக நாமத்தைக் கூறியபடி எழுந்தான்.

முருகன் திருவிளையாடல்
சிவகிரி சக்திகிரியை காவடி போல தோளில் சுமந்து கொண்டு வந்தான். அனைத்தையும் அறிந்த முருகப்பெருமான் அந்த மலைகளை திருவாவினன்குடியில் நிலைபெற்றிருக்க திருவிளையாடல் புரிந்தார். வழியெங்கும் சுமை தெரியாமல் இருக்க முருகநாமத்தைப் பாடியபடி வந்தான். வழியில் சற்று இளைப்பாற எண்ணி காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான். இளைப்பாறுதல் முடிந்ததும் காவடியைத் தூக்க முயன்றான். முன்பு போல் கனமாக இருந்தது. இடும்பியும் அவனோடு சேர்ந்து தூக்க முயன்றாள். ஆனால் அசைக்கக் கூட முடியவில்லை. அதைப்பார்த்து சிறுவன் ஒருவன் சிரித்தான். ஏற்கனவே தூக்க இயலாத கோபத்தில் இருந்த இடும்பன், சிறுவனை அடிக்கப் பாய்ந்தான், அவனால் முடியவில்லை. மாறாக மயக்க முற்று நிலத்தில் வீழ்ந்தான். இடும்பனின் மனைவிக்கு வந்தது சிறுவனல்ல பழனிமலை முருகன் என்று புரிந்து கொண்டாள். ஐயனே எனக்கு மாங்கல்யபிச்சை அருள வேண்டும் என்று கெஞ்சினாள்.

என்னென்ன காவடிகள்
மனமிறங்கிய முருகப் பெருமான் அருள்புரியவே, இடும்பன் எழுந்தான். இருவரும் முருகப்பெருமானை வணங்கி மகிழ்ந்தார்கள். அப்போது முருகன், இடும்பனே, இந்த இரண்டு மலைகளும் இங்கேயே இருக்கட்டும். இந்த இருமலையின் மேல் யாம் எழுந்தருளி பக்தர்களை காப்போம். இம்மலையின் அடிவாரத்தில் நீ காவலாக இரு. சக்திகிரி, சிவகிரியை நீ சுமந்தது போல், பக்தர்களும் சுமந்து வந்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பெறுவார்கள் என்று அருளினார். முருகப்பெருமானுக்கு பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, அக்னி காவடி, சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, சர்ப்பகாவடி, இளநீர் காவடி, வேல் காவடி, கரும்புத் தூளி காவடி என பல காவடிகள் உள்ளன.

இளநீர்க்காவடி
இக்காவடி கம்பு அல்லது பனை மட்டையைக் காவடித் தண்டாகக் கொண்டு தண்டின் இரு புறங்களிலும் இளநீர்க் காய்களை கட்டிக்கொண்டு, மேள தாளங்களின்றி 'வேல் வேல்" 'வேல் வேல்" என்று வெற்றி முழக்கமிட்டு எளிமையான முறையில் எடுத்து வரப்படுகிறது. இளநீர் காவடியில் எடுத்துவரப்படும் இளநீரானது இறைவனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மச்சக்காவடி
மீனைக் காவடியில் கட்டிக் கொண்டு வருவது மச்சக் காவடி ஆகும். மீனை மூன்று இடங்களில் லேசாக வெட்டி, உப்பிட்டு மண் சட்டியில் மஞ்சள் தண்ணீரில் போட்டுக் காவடித் தண்டில் கட்டிக்கொண்டு வருவர். காவடியை எடுத்து முடித்த பின் கோவில் குளத்தில் இடுப்பளவு ஆழத்தில் இறங்கி நின்று காவடித் தண்டில் கட்டப்பட்ட மண் சட்டியைத் தலைக்கு மேலாக தூக்கி ஆட்டும் போது சட்டியில் உள்ள மீன் நீரில் துள்ளி விழும்.

சர்ப்பக்காவடி
நல்ல பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும். சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் 41 நாள் விரதம் இருப்பார்கள். அவர்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட பாம்பை காட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கனவு வருமாம். அவர்களும் அந்தக் காட்டில் போய் ஒரு குறிப்பிட்ட அந்த ஜாதி பாம்பை போய் பிடித்து அதை ஒரு பெட்டியில் வைத்து உப்பிட்டு கொண்டு வந்து, அதைக் காவடியாக சுமந்து வந்து திருச்செந்தூர் கடற்கரையில் விடுவார்கள். அது வேறு எங்கும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நேரே கடலின் உட் பகுதிக்கு சென்று விடும்.இந்த சர்ப்பக் காவடி முன்னாட்களில் ஒவ்வொரு ஆண்டும் நிறையவே வரும். இப்போது எப்போதாவது அபூர்வமாகத்தான் வருகிறது. இப்படி சர்ப்பக் காவடி எடுப்பது அவரவர்களின் நம்பிக்கை.

அலகு குத்துதல்
நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

பறவைக் காவடி மயில்காவடி
மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. பறவைக்காவடி எடுப்பவர்கள் அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுவார்கள். பால்குடத்தை காவடியாக சிலர் எடுத்து வருவார்கள். காவிரி தீர்த்தத்தை குடங்களில் தீர்த்தமாக காவடியாக எடுத்து வருவார்கள்.



Click it and Unblock the Notifications