மதுரை சித்திரை திருவிழா 2023: ஏழாவது நாளில் யாழி வாகனத்தில் வலம் வரும் மீனாட்சி!

Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை சித்திரை திருவிழா எப்பொழுதுமே சிறப்பம்சம் நிறைந்தது. ஏனெனில் மற்ற ஊர்களிலும் திருக்கல்யாணத்துடன் சித்திரை திருவிழா நடைபெற்றாலும் மதுரையில் மட்டும் தான் அன்னை மீனாட்சி பட்டாபிஷேகம் நிகழ்ந்த பிறகு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

மதுரை நகரை ஆள்பவளைக் கரம்பிடிக்கக் கயிலாயநாதனே மணமகனாய் வந்த பெருமையை பேசுகிறது நம்முடைய சித்திரை திருவிழா. மதுரை சித்திரை திருவிழாவை பொருத்த வரை நிறைய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிளையாடல் புராணம், சிவபுராணம் போன்றவற்றை ஓதியும் ஜெபித்தும் வருவது உண்டு.

Madurai Chithirai Thiruvizha 2023: Seventh Day Celebration

அந்த வகையில் ஏழாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் நந்தி வாகனத்தின் மீதும் மதுரை மீனாட்சி அம்மன் யாளி வாகனத்தின் மீதும் வலம் வர இருக்கிறார்கள். ஏழாம் நாள் திருவிழா என்பது ஏழுவகைப் பிறப்பை பறைசாற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது என்கிறது புராணம்.

மதுரை சித்திரை திருவிழா ஏழாம் நாள் வரலாறு

மதுரை சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் நந்திகேஸ்வரர் மற்றும் யாளி வாகனத்தில் வலம் வருகின்றனர். அந்தக் காலத்தில் ஸ்ரீ சைலத்தில் வாழ்ந்த சிலாதி முனிவர் சிவனுடைய அருளால் புத்திரப் பேறு பெற்றார். இதனால் அந்த முனிவர் அவருடைய பிள்ளைக்கு நந்தி என்ற பெயரையும் சூட்டினார். ஆனால் அந்த குழந்தையின் ஆயுட்காலம் குறைவாக இருந்தது. இதனால் நந்தி சிவனை நோக்கி தவமிருந்தார்.

நந்தியின் பக்தியில் உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் அவனுக்கு ஈஸ்வர பட்டத்தை அளித்தார். எனவே அன்று முதல் அவன் நந்திகேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அவனுடைய ஆயுட்காலமும் நீட்டிக்கப்பட்டது. உங்களுடைய நம்பிக்கையால் விதியை மாற்ற முடியும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இதனால் தான் ஏழாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் நந்தி வாகனத்தின் மீது வலம் வருகிறார்.

அதே நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் யாளி என்ற வாகனத்தில் அழகாக வீற்றிருந்து காட்சியளிக்க உள்ளார். யாளி என்பது யானையும், சிங்கமும் இணைந்த உருவமாகும். யானையை போல் மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்கவும், தற்பெருமையால் கோபத்தால் சுற்றித் திரியும் சிங்கத்தை போல் இல்லாமல் இருக்கவும், அதை அடக்கி மனிதன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அம்மன் யாளி வாகனத்தில் வலம் வருகிறார்.

நந்திகேஸ்வரர் மற்றும் யாளி வாகனத்தின் திருவிளையாடற்புராணப் பாடல்

நந்திகேஸ்வரர் பாடல்

"வந்துஇறை அடியில் தாழும்
வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த
வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர்
அலகுஇடும் குப்பை ஆக்கும்
நந்திஎம் பெருமான் பாத
நகைமலர் முடிமேல் வைப்பாம்" - என்று பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணத்தில் பாடியுள்ளார்.

யாளி வாகனப் பாடல்

"கிரிஎட்டும் என மழையைக் கிழித்து எட்டும்
புழைக்கை மதிக் கீற்றுக் கோட்டுக்
கரிஎட்டும் சினமடங்கல் நால்எட்டும்
எட்டெட்டுக் கணமும் தாங்க
விரிஎட்டுத் திசைபரப்ப மயன்நிருமித்து
உதவியஅவ் விமானம் சாத்தி
அரிஎட்டுத் திருவுருவப் பரஞ்சுடரை
அருச்சிப்பான் ஆயி னானே"

ஏழாம் நாள் திருவிழாவின் தத்துவமும் பலனும்

ஏழாம் நாள் திருவிழா ஏழுவகைப் பிறப்பு, கலையாதிகள் ஏழு, மாயாகுணம் ஏழு என்னும் இவற்றைத் தவிர்த்தற் பொருட்டாகும். ஏழாம் நாள் காலையில் பிட்சாடனத் திருக்கோலத் திருவிழா நடைபெறும். இதில் தாருகாவனத்து ரிஷிகளும், ரிஷி பத்தினிகளும் ஆவண மலத்தால் தாங்கள் சுதந்திரர்களென எண்ணிக் கடவுளை மறந்தனர். அவர்கள் பரதந்திரர்களென உணர்த்துதற் பொருட்டு இறைவன் பிட்சாடன மூர்த்தியாய்ச் செல்ல ரிஷி பத்தினிகள் அவரழகில் ஈடுபட்டனர்.

விஷ்ணு மோகினியாகச் செல்ல அவ்வழகில் ரிஷிகள் ஈடுபட்டனர். இவ்விரண்டு செயல்களாலும் ரிஷிகளும், அவர் பத்தினிமார்களும் பரதந்திரர்களேயென அவர்களை உணரச் செய்து பரமன் மறைந்தருளினான். இந்த பராக்ரமக் கோலமே பிட்சாடனக் கோலமாகும். ஏழாம் நாள் இரவில் அதிகாரநந்தி வாகனம்.

இதை விருத்திக்கிரம சங்காரக் கோலம் என்பர். அதிகாரநந்தி மான், புழு, சதுர்ப்புஜம், முக்கண் முதலிய குறிகளோடு சாரூப்பிய பதவியைப் பெற்றவர். இவர் விஞ்ஞான கலர் எனும் ஆன்மாக்களுள் சிறந்தவர் ஆவர். கைலையில் சிவசந்நிதிதானத்தில் அதிகாரம் செலுத்துபவர். ஆதலால் அதிகாரநந்தி எனப் பெயர் பெற்றார்.

நந்தி மற்றும் யாளி வாகன அலங்காரம்

இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் யாளி வாகனத்தின் மீதும், சுந்தரேஸ்வரர் நந்தி வாகனத்தின் மீதும் வலம் வர இருக்கிறார்கள். அம்மையும் அப்பனும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ண பட்டு உடுத்தி இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ மதுரை மாசி வீதிகளில் வலம் வருவார்கள். குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்புறப் பாடல்கள் பாடியும், சின்னஞ் சிறு குழந்தைகள் கோலாட்டாம் ஆடியும் அம்மனையும் அப்பனையும் வரவேற்பார்கள்.

மக்கள் தாங்கள் கொண்டு வந்த மலர்கள் மற்றும் பூ மாலைகளை அம்மனுக்கு கொடுத்து அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுவார்கள். இன்றைக்கு நந்திகேஸ்வரர் மற்றும் யாளி வாகன அம்மனை வழிபட்டு அம்மனின் அருளாசியை பெறுங்கள்.

நந்தி மற்றும் யாளி வாகனம் புறப்படும் நேரம்

காலை எழுந்தருளும் நேரம் :8 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : தங்கச்சப்பரம்
இரவு எழுந்தருளும் நேரம் : 7 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : நந்திகேஸ்வரர் மற்றும் யாளி

திருவீதியுலா முடிவுற்று கோயிலுக்கு வரும் நேரம் இரவு 10.30 மணியளவில் இருக்கும். இரவு புஷ்ப சிங்கார திருக்கண்ணில் இரட்டை சோட சோபசார தீபாராதனை ஆன பின் கோயிலுக்குள் எழுந்தருளுகிறார்கள்.

Desktop Bottom Promotion