மதுரை சித்திரை திருவிழா 2023: இன்று அழகர் மாண்டூக முனிவருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்வும்.. தசாவதார காட்சிகளும்

Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதத்தில் தொடங்கி இன்று வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்றைக்கு மாலையில் அழகர் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நேற்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் விழா நடைபெற்றது. ராமராயர் மண்டகப்படியில் தீர்த்தவாரி நடைபெற்று பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் நேற்றிரவு வண்டியூர் வீரராவகப்பெருமாள் கோயிலில் எழுந்தருளினார்.

Madurai Chithirai Thiruvizha 2023: Moksham For Manduga Maharishi

இதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்து இன்று காலையில் சேஷ வாகனத்தில் புறப்பட்டு கள்ளழகர் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியே வண்டியூர் வைகை ஆற்றில் அமையப் பெற்றுள்ள தேனூர் மண்டபத்திற்கு செல்ல இருக்கிறார்.

அங்கு நாரை மோட்சம் அளிக்கும் நிகழ்வும் தேனூர் கிராமத்துக்கு மரியாதை அளிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதனையடுத்து கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கு அப்புறம் இன்றிரவு இராமராயர் மண்டபகத்தில் விடிய விடிய பல்வேறு தசாவதார திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அவர் தரிசனம் தருகிறார் .

மாண்டூக முனிவருக்கு மோட்சம் வழங்கும் வரலாறு

சர்ப்ப வாகனத்தில் வண்டியூரில் இருந்து புறப்படும் அழகர் தேனூர் மண்டபத்தில் மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இதற்குப் பின்னாடி ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. சுதபஸ் என்ற முனிவா், அழகர் மலையில் உள்ள நூபுரகங்கையில் தீா்த்தமாடி, பெருமாளை நோக்கிக் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துா்வாச முனிவா் அவ்வழியே வந்தார்.

அவா் வந்தது தெரியாமல் தியானத்தில் இருந்த சுதபஸ்தருக்கு துா்வாசா் 'மண்டூகோபவ' (தவளையாக போகக் கடவாய்) என் சாபமிட்டார். மாண்டூக முனிவர் அதிலிருந்து சாப விமோசனம் கேட்டார். அதற்கு சுப விமோசனமாக 'விவேகவதி தீா்த்தக்கரையில் அதாவது வைகை ஆற்றில் நீ தவம் செய்து கொண்டு இரு அப்பொழுது அங்கு வரும் அழகர் உனக்கு சாப விமோசனம் தருவார் என்று துர்வாசர் கூறினார்.

இதன்படி மதுரை சித்திரை திருவிழாவின் போது ஒவ்வொரு சித்ரா பவுா்ணமிக்கு மறுநாள் அழகா் வந்து மாண்டூக முனிவருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. பிறகு அன்று இரவு ராமராயா் மண்டபத்தில் அழகர் தங்குகிறார். அங்கு அழகருக்கு இரவு முழுவதும் தசாவதாரம் அலங்காரம் நடைபெறுகிறது. மறுநாள் பூப்பல்லாக்கு முடிந்து அழகா் மலையை நோக்கி அழகா் புறப்பட்டு செல்கிறார்.

நாரை பறக்கவிடும் நிகழ்வு

இந்த சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வில் நாரை பறக்க விடப்படுகிறது. நாரை (கொக்கு) பறக்க விடுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. நீருக்கடியில் தவளையாக மாற்றப்பட்டுள்ள சுதபஸ் முனிவரை கண்டறியவே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அதாவது சுதபஸ் முனிவரை தவளை என நினைத்து நாரை உண்ண வரும் போது கள்ளழகரின் அருளால் அவர் மோட்சம் பெறுகிறார்.

பிறகு அவர் தவளையில் இருந்து மனித உருவத்தை அடைகிறார். அதனால் தான் தேனூர் மண்டபத்தில் நாரை பறக்க விடப்படுகிறது என்கிறது புராண வரலாறு. அதே மாதிரி இந்த விழாவின் போது தேனூர் மக்களுக்கு தான் முதல் மரியாதை கொடுக்கப்படும். இந்த தேனூர் மண்டபத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது. மதுரை சித்திரை திருவிழாவின் போது எல்லா மண்டகப்படித்தாரர்களும் அழகருக்கு மண்டகப்படி வரியை செலுத்தி வரவேற்பார்கள். ஆனால் தேனூர் மண்டகப்படிக்கு மட்டும் அழகர் தேனூர் மக்களுக்கு வரி செலுத்தி அருள் புரிகிறார்.

தேனூர் கிராமம் தான் அழகர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட தாய்க் கிராமம் ஆகும். அதனால் தான் இந்த கிராமம் இன்றளவும் அழகரின் திருநாம பெயரான சுந்தரராஜ பெருமாள் பெயரிலேயே தேனூர் சுந்தரராஜன் பூமி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இன்றளவும் தேனூரில் விளையும் நெற்கதிர்கள் அழகருக்கு படைக்கப்பட்டு வருகிறது.

தங்கக் கருட வாகன அலங்காரம்

இன்று கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் தங்கக் கருட வாகனத்தில் வலம் வருகிறார். வண்ணமயமான பட்டு உடுத்தி அணிகலன்களால் அலங்காரம் செய்யப்பட்டு இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ வீதிகளில் வலம் வருவார். பக்தர்கள் அனைவரும் கள்ளழகர் வாராரு வாராரு என்ற முழக்கத்துடன் அவரை வரவேற்பார்கள். அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுவார்கள்.

இந்த நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள், வழக்கமாக வைகை ஆற்றுக்குள் கும்பல் கும்பலாக நிற்பார்கள். அப்படியே மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்து விட்டு தேனூர் மண்டபத்தில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டு ராமராயர் மண்டபத்தில் இன்றிரவு தங்குகிறார்.

தசாவதாரக் கோலம்

இன்றிரவு ராமராயர் மண்டபத்திற்கு வந்ததும் அழகர் அங்கு விடிய விடிய தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். தசாவதார கோலமான 10 அவதாரத்தில் அவர் காட்சி தருகிறார். மச்சம், கூர்மம், வராகம், வாமனன், நரசிம்மம், ராமர், கிருஷ்ண அவதாரம் என பத்து விதமான அவதாரங்களில் அவர் காட்சி தருகிறார். அவரின் பத்து அவதாரங்களையும் காணக் கண் கோடி வேண்டும்.

Story first published: Saturday, May 6, 2023, 12:30 [IST]
Desktop Bottom Promotion