Latest Updates
-
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
மதுரை சித்திரை திருவிழா 2023: இன்று மதுரை மீனாட்சி அம்மனின் திருத்தேரோட்டம்!
Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை சித்திரை திருவிழாவின் பதினோறாம் நாளான இன்று மதுரை மீனாட்சி அம்மனின் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த திருத்தேரோட்டத்தில் "நகரும் கோயில்" என்று தேர்கள் இடம் பெறுகின்றன. எல்லா உற்சவ நாட்களிலும் கோயிலின் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் திருத்தேரோட்டம் அன்றைக்கு மட்டும் கோயிலின் நடை சாத்தப்படுகிறது. இந்த திருத்தேரோட்டத்தில் சுந்தரேஸ்வரர் பெரிய தேரிலும், அன்னை மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுவார்கள்.

இரு தேர்களிலும் சிவபுராணமும், திருவிளையாடற்புராணங்களும் சிற்பங்களாய் செதுக்கப்பட்டு இருக்கும். ஓதுவார்கள், சேந்தனார் போன்றவர்கள் திருப்பல்லாண்டு பாடியபடியே தேருடன் வலம் வருவார்கள். அம்மனையும் அப்பனையும் திருத்தேரில் காணக் கண்கோடி வேண்டும்.
திருத்தேரோட்டம் வரலாறு
அன்னை மீனாட்சி அம்மனுக்கு 1981 ல் தங்கத்தேர் செய்யப்பட்டது. இந்த தங்கத் தேர் 14.5 அடி உயரத்தில் செய்யப்பட்டு இழுக்கப்பட்டு வருகிறது. இந்த தங்க ரதத்தில் 6.964 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டு செய்யப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர் கி. பி 16 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் வடிவமைக்கப்பட்டது.
இந்த தேரில் சிவபெருமானின் 64 திருவிளையாடற்புராணப் சிற்பங்களும் இடம் பெற்று இருப்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த தேரின் அமைப்பானது அண்ட பிண்டத்திற்கு சமமானதாகும். எனவே இந்த தேர் 8 அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு திருத்தேரோட்டம் அன்றைக்கும் தேர்கள் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு தெருவில் இழுத்துச் செல்லப்படுகிறது.
தேர்கள் பல வண்ண மலர்களாலும். பல வண்ணத் துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். தேர்களை இழுத்துச் செல்லும் போது வான வேடிக்கை, கோலாட்டாம், மேள தாளங்கள் முழங்க சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் திருக்கல்யாண தோற்றத்தில் வலம் வருவார்கள். தேரை இழுக்கும் போது பக்தர்கள் "மீனாட்சி சுந்தர மகாதேவா" என்ற கோஷங்களை எழுப்பி தேரை இழுப்பார்கள். சித்திரை மாதம் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வெற்றி உண்டாகும் என்பது ஐதீகம்.
திருத்தேரோட்டத்தின் தத்துவமும் பலனும்
பதினோறாம் நாள் நடைபெறும் திருத்தேர் திருவிழா இறைவனின் சங்காரம் (மறைத்தல், அருளல்) குறித்து நடைபெறுவதாகும். மேலும் ஆன்மாக்களுக்கு உயர்வு நல்கிவருவதையும் குறிப்பதாகும். இத்தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்குச் சமமாகும். விசுவவிராட் சொரூபமே எட்டு அடுக்குகளாகும். அதன் உச்சியில் இருக்கும் கும்பம் சோடசாந்தம், அதற்கு அடுத்து கீழடுக்கு துவாதசாந்தம், அதற்கடுத்த அடுக்கு மஸ்தக அதிஸ்தானம், அதற்கடுத்த அடுக்கு மஸ்தக மத்தியஸ்தானம், அதற்கடுத்த அடுக்கு மஸ்தக அந்தஸ் தனம், அதற்கடுத்த அடுக்கு புருவமத்தியஸ்தானம், நடுவில் தாங்கும் குத்துக்கால்கள் தத்துவக்கால்கள்.
முன்னுள்ள மூன்று துறைகள் மூன்று கண்கள் போன்றவை. பின்னவை, சிகையும் இட வலக்காதுகளுமாகும். இறைவன் எழுந்தருளி இருக்கும் கேடய பீடம் முப்பாழ். குதிரைகள் சூரிய சந்திரகலைகள். சாரதி அக்னிக்கலை இவை நாசியாகும். அடுத்த அடுக்கு கண்டஸ்தானம், அதை அடுத்த அடுக்கு இருதய ஸ்தானம், அதை அடுத்த அடுக்கு நாபி, அதற்கு அடுத்த அடுக்கு குண்டலி ஸ்தானம். தேரின் பத்துச் சக்கரங்களும் தசவாயுக்கள்.
இறைவன் இதற்குக்கர்த்தா தான் ஒருவனே என்றுணர்த்தி இவ்வாறமைந்த பிண்டத்துவ சரீரமாகிய இரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி அசைவற்ற மனத்தை உந்தி, குண்டலிருந்து நாபிக்கும், அதிலிருந்து கண்டத்திற்கும், அதிலிருந்து வாய்க்கும் ஏற்றி இலயப்படுத்தி, முறையே ரதக்குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண் வழியாகவும், நடுவழியாகவும் மேல்நோக்கி, ஆறாம் அடுக்காகிய புருவ மத்திக்கும் ஏற்றி இலயப்பட்டு சும்மா இருந்த படி இருக்கும் நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற இலயக்கிரமத்மைக் காட்டுகிறது. மேலும் தேர் திரிபுராதிகளைச் சிவன் சிரித்து எரித்து ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய ஸ்திதித் தொழிலுக்கும் அறிகுறியாகும் என்கிறது தேரின் அமைப்பு.
திருத்தேரோட்டம் தேவாரப் பாடல்
போழொத்த வெண்மதியம் சூடிப் பொலிந்திலங்க
வேழத்து உரிபோர்த்தான் வெள்வளையாள் தான் வெருவ
ஊழித்தீ அன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே என்று திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.
திருத்தேரோட்டம் நடைபெறும் நேரம்
காலை எழுந்தருளும் நேரம் : 6.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : திருத்தேர்
இரவு எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : சப்தாவர்ணச்சப்பரம்
திருத்தேரோட்டம் அலங்காரம்
இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் சுந்தரேஸ்வரர் பெரிய தேரிலும் எழுந்தருளுவார்கள். வண்ணமயமான பட்டு உடுத்தி இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ மதுரை மாசி வீதிகளில் வலம் வருவார்கள். குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்புறப் பாடல்கள் பாடியும், சின்னஞ் சிறு குழந்தைகள் கோலாட்டாம் ஆடியும் வரவேற்பார்கள்.
அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுவார்கள். திருத்தேரோட்டத்தில் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெறுங்கள். தேர்கள் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு தெருவில் இழுத்துச் செல்லப்படுகிறது. தேர்கள் பல வண்ண மலர்களாலும் பல வண்ணத் துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.



Click it and Unblock the Notifications