Monkeypox: கொரோனா போல குரங்கு அம்மை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையுமா? விளக்கும் டாக்டர். ஃபரூக் அப்துல்லா!

Monkeypox: சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இந்நபர் பாதிக்கப்பட்டிருப்பது குரங்கு அம்மையில் அதிக ஆதிக்கம் செலுத்தும் கிளேட் 1பி விகாரம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட இந்நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 70 நபர்களை கேரள சுகாதாரத் துறை தற்போது கண்காணித்து வருகிறது. இதுவரை அவர்களிடம் எவ்வித அறிகுறியும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா தனது சமூக வலைத்தள பக்கத்தில் குரங்கு அம்மை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்பது குறித்து விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

Monkeypox Doctor explains Whether Monkeypox Be A Threat To India

அதில் அவர் கூறியிருப்பதாவது: "எப்படி கொரோனா பெருந்தொற்று சீனாவின் வூஹான் நகரத்தில் ஆரம்பித்ததோ அது போல இந்த 2024 ஆம் ஆண்டு பெருந்தொற்றாக அடையாளம் காணப்பட்டுள்ள எம்-பாக்ஸின் எபிசெண்ட்டர் (கொள்ளை நோய் ஆரம்பித்த இடம்) "கமிடுகா" எனும் நகரம். வாருங்கள் கமிடுகா வழி பாடம் கற்போம்.

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள காங்கோ எனும் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கிவு மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் தான் இந்த "கமிடுகா". இங்கு தான் க்ளாடு ஒன் எனும் வகை எம் பாக்ஸ் வைரஸ் தொற்று ஆரம்பித்து காங்கோ கென்யா ருவாண்டா போன்ற நாடுகளுக்கும் பரவி தற்போது பெருந்தொற்று ஆகி இருக்கிறது.

வகைகள்

எம்-பாக்ஸ் வைரஸில் இரண்டு வகைகள் உள்ளன. அவை:

முதல் வகை (CLADE 1B) - சற்று மூர்க்கமானது, அறிகுறிகளில் ஆக்ரோஷமும் மரண விகிதங்களை அதிகமாக ஏற்படத்தக்கூடியது.

இரண்டாவது வகை ( CLADE 2) - முதல் வகையை ஒப்பிடும் போது சாந்தமானது. மரணவிகிதங்கள் குறைவு

கமிடுகா எனும் நகரம் தங்கச் சுரங்கம் இருக்கும் பகுதியாகும். அங்கு முக்கிய தொழில் தங்கம் எடுத்தல். முறையாக அங்கே தங்கி இருக்கும் மக்களின் தொகை ஒரு லட்சத்துக்கும் குறைவு. ஆனால் அந்த நகரின் தொழில் முக்கியத்துவம் காரணமாக பல லட்சம் மக்கள் தற்காலிகமாக வந்து செல்லும் நகரமாக இருக்கிறது. இந்த நகரத்தில் 2024 வருடம் மட்டும் சுமார் 6000 நபர்களுக்கு எம்-பாக்ஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் வெளிப்படுத்திய அறிகுறிகள் பெரும்பான்மை மக்களுக்கு காய்ச்சல், உடல் வலி என்று குணமாகி விடுகிறது. எதிர்ப்பு சக்தி குன்றியோர், குழந்தைகள்,
பல்வேறு இணை நோய்கள் கொண்டவர்களுக்கு முகம், கை, நெஞ்சுப் பகுதி, இனப்பெருக்க உறுப்புகளைச் சுற்றி அம்மைக் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. இந்தக் கொப்புளங்கள் சுமார் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடித்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்தக் காலம் முழுவதும் தொற்று ஏற்பட்ட ஒருவர் மற்றொருவருக்கு தொற்றைப் பரப்ப வாய்ப்பு அதிகரிக்கிறது.

கமிடுகா நகரில் எம் பாக்ஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்த நபர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில், செப்டம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை 371 நோயாளிகள் எம் பாக்ஸ் நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் 4 பேர் இறந்துள்ளனர். கர்ப்பமாக இருந்த 8 பெண்களில் 4 பேருக்கு கர்ப்பம் கலைந்துள்ளது.

நோயாளிக்கு சிகிச்சை அளித்து மூன்று மருத்துவ ஊழியர்களுக்கு தொற்று பரவியுள்ளது. இந்த ஆய்வில் பெறப்பட்ட செய்தி யாதெனில் தொற்று கண்ட நோயாளிகளுள் 88.4% பேர் தொற்றுக்கு முன் சமீபத்தில் அந்த நகரத்தில் உள்ள பார்களில் /பாலியல் தொழிலாளிகளிடம் சென்று வந்ததைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த எம் பாக்ஸ் தொற்று 2022 ஆம் ஆண்டு பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு 2023 வரை அமலில் இருந்தது. அப்போது க்ளாடு இரண்டு வகை வைரஸ் பரவியது. அதில் பெரும்பான்மையான தொற்றாளர்கள் கே எனும் ஆண்களுடன் மட்டும் உடலுறவு கொள்ளும் ஆண்களிடமும், பை செக்சுவல் எனும் ஆண் பெண் இருபாலரிடமும் உறவு கொள்ளும் நபர்களிடமும் பெரும்பான்மையாக கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் இருந்து எம் பாக்ஸ் பரவுவதற்கு தோலோடு தோல் நீண்ட நேரம் தொடுதல் நிகழ வேண்டும் என்பது புலப்படுகிறது. உடலுறவில் அத்தகைய நீண்ட நேர நெருங்கிய தோலோடு தோல் நெருக்கம் ஏற்படுவதால் உடலுறவு என்பது நோய்ப் பரவலுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. எனினும் ஒருவருக்கு எம் பாக்ஸ் தொற்று ஏற்பட்டால் அவர் தகாத உடலுறவு மூலம் மட்டும் தான் அந்தத் தொற்றைப் பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

தொற்று ஏற்பட்டவர் அதன் அறிகுறிகளுடன் இருக்கும் போது கை குலுக்குதல், நெருக்கமாக இருத்தல் ,அருகில் இருக்கும் போது தும்முதல் இருமல் போன்றவற்றாலும் தொற்றாளரின் ஆடையில்/ சுற்றி இருக்கும் பகுதிகளில் இருக்கும் வைரஸ் அதைத் தொடும் பிறருக்கு பரவலாம். ஒருகாலத்தில் எய்ட்ஸ் பரவும் போது
எய்ட்ஸ் ஏற்பட்டவர் அனைவரும் தகாத உறவால் தான் தொற்றைப் பெறுகிறார் என்பது போல மூடநம்பிக்கை நிலவி வந்தது.

ஆனாலும் எய்ட்ஸ் என்பது ரத்தம் மூலம் பரவலாம். எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு பயன்படுத்திய ஊசியை பிறருக்கு பயன்படுத்தும் போதும், அவருக்கு உபயோகித்த ரேசர் பிறருக்கு பயன்படுத்தும் போது, எய்ட்ஸ் நோயருக்கு பிறக்கும் குழந்தைகள், அவருடன் உறவில் ஈடுபடும் இணையர் ஆகியோரும் தொற்று பெற்றனர். இந்த வகையிலும் எய்ட்ஸ் பரவியது.

அது போலவே எம் பாக்ஸ் தொற்று என்பது பெரும்பான்மை உடலுறவால் பரவினாலும் இந்தத் தொற்று தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குழந்தைகள், இணையருக்கும் பரவலாம். இன்னும் சம்பந்தமே இல்லாத நபர்களுக்கும் எப்படி அம்மை நோய் பரவுகிறதோ அது போல பரவலாம். எனவே எம் பாக்ஸ் பாதிக்கப்பட்ட நபர்களை அருவருப்பாக பார்க்கக் கூடாது.

கமிடுகா நகரில் அதன் ஏறி இறங்கும் தற்காலிக மக்கள் தொகை மாற்றத்தின் காரணமாகவும், அங்கு நடக்கும் வணிகம் சார்ந்த பண சுழற்சி காரணமாகவும்
பாலியல் தொழில் என்பது பெண்கள் அவர்களின் வறுமையை குடும்பத்தின் பட்டினியை சரிசெய்ய குடிசைத் தொழில் போல செய்யப்பட்டு வருவதை அறிய முடிகிறது. இதை "ட்ரான்சாக்சனல் செக்ஸ்" ( TRANSACTIONAL SEX) என்ற பதம் கொண்டு அழைக்கிறார்கள்.

காங்கோ நாட்டில் நிலவி வரும் உள்நாட்டுக் கலவர சூழல், நிலையற்ற அரசு, சீரற்ற பொருளாதாரம் ஆகியவற்றால் பசி பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடி வருகிறது.
எனவே பெண்களில் ஒரு பகுதியினர் தங்களின் வறுமை மற்றும் பட்டினியை போக்க இவ்வாறு உடலுறவில் ஈடுபட்டு அதற்கு பதிலாக உணவு, உடை போன்றவற்றையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

ப்ராஸ்டிட்யூசன் எனும் பாலியல் தொழிலில் பணமே பிரதானம். உடலுறவுக்கு பணம் வாங்கிக் கொண்டு உறவில் ஈடுபடுவது விலை மாதர். அவர்களுக்கு தொழிலாகவே அது அமைகிறது. ஆனால் ட்ரான்சாக்சனல் செக்ஸ் என்பது ப்ராஸ்டிட்யூசனில் இருந்து மாறுபட்டது.

நாட்டின் நிலை, வறுமை, பட்டினி, பஞ்சம் ஆகியவற்றால் குடும்பத்தை நடத்தும் தலைவிகளே தங்களின் பிழைப்புக்காக இத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு ஈடாக பணம் மட்டும் என்றில்லை. ஆடை, உணவு ஆகியவற்றையும் பெற்றுக் கொண்டு உடலுறவில் ஈடுபடுகிறார்கள். எனவே இதை "உயிர்பிழைப்புக்காக செய்யப்படும் உடலுறவு" என்றும் அழைக்கிறார்கள்.

பெரும்பாலும் பாலியல் தொழிலாளர்களுக்கென சேவை அமைப்புகள் நமது நாட்டில் இயங்கி வருகின்றன. அந்த சேவை அமைப்புகள் மூலம் பாலியல் நோய் சார்ந்த விழிப்புணர்வு, ஆணுறை உபயோகம், பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு , பாலியல் நோய்களின் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஆகியவை தொடர்ந்து செய்யப்பட்டு நம் நாட்டில் எய்ட்ஸ் நோயின் பரவல் மற்றும் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால் ஆப்ரிக்க நாடுகளில் வறுமை பட்டினி பஞ்சம் மட்டுமே உள்ளது.

மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவை அமைப்புகள் பெரிதாக இல்லை. இதனால் எம் பாக்ஸ் தொற்று அங்கே எளிதில் பரவி வருகிறது. எம் பாக்ஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களிடம் இருந்து அவர்களின் இணையர்; குழந்தைகளுக்கும் தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 32 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 32 பேரில் தற்போது 2024 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இருவரும் அடக்கும். தற்போது தொற்று கண்டறியப்பட்ட இருவரும் நலமுடன் இருக்கிறார்கள்.

ஆப்ரிக்காவின் காங்கோவில் எம் பாக்ஸ் தொற்று பரவல் நடப்பதற்கு முக்கியமான காரணங்கள்

- கொடூரமான வறுமை
- தலைவிரித்தாடும் பசி பஞ்சம்
- கல்வியறிவு இல்லாமை
- விழிப்புணர்வு போதாமை
- வறுமைக்காகவும் பட்டினிக்காகவும் செய்யப்படும் பாலியல் தொழில்
- பாலியல் தொழிலில் ஈடுபடுவோரிடையே விழிப்புணர்வு இல்லாமை
- வளர்ந்த நாடுகள் ஆப்ரிக்காவை ஒரு கண்டமாகவே கண்டுகொள்ளாமல் இருப்பது
-போதுமான தடுப்பூசிகள் வாங்குவதற்குக் கூட பொருளாதாரமற்று தத்தளிக்கும் அந்த நாட்டு அரசாங்கம்

மேற்கூறிய பல விசயங்களை ஆராய்ந்து நோக்கும் போது, நம் நாட்டில் 2022 முதல் தற்போது வரை எம் பாக்ஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலாததின் காரணங்கள் புலப்படுகின்றன. எனினும் எம் பாக்ஸ் குறித்த விழிப்புணர்வு நம் அனைவருக்குமே கட்டாயம் தேவை. இந்த நோய் குறித்து முக்கியமான மூன்று விசயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

முதல் விசயம்

நோயின் அறிகுறிகளில் முக்கியமானது கைகள், முகம், நெஞ்சுப் பகுதி குறிப்பாக இனப்பெருக்க உறுப்பு , ஆசன வாய் ஆகியவற்றை சுற்றி அம்மைக் கொப்புளங்கள் ஏற்படுவது. இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெற வேண்டும்.

இரண்டாவது விசயம்

இந்த அம்மைக் கொப்புளங்கள் காய்ந்து சருகாகி உலர்ந்து விழும் வரை தொற்றாளர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது நோய்ப் பரவலைத் தடுக்கும்.

மூன்றாவது விசயம்

தொற்று கண்டறியப்பட்டவரை ஒதுக்குதலோ அருவருப்புடன் அணுகுதலோ கூடாது. இந்தத் தொற்று உடலுறவால் மட்டுமே பரவும் தொற்று அன்று. தொற்று கண்டவருடன் அருகருகே உரசிக் கொண்டு அமர்ந்து பயணித்தாலும் தொற்று பரவும் வாய்ப்புண்டு என்பதால் தயவு கூர்ந்து எய்ட்ஸ் நோய்க்கு ஆரம்ப காலத்தில் செய்த ஒதுக்குதல் அருவருப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

முறையான நோய் கண்டறிதல்

முறையான சிகிச்சை ஆகியவற்றால் மரண விகிதத்தை வெகுவாகக் குறைக்க முடியும். எனவே மரணம் குறித்த பீதியும் அவசியமற்றது. எம் பாக்ஸ் இந்தியாவில் அதீத தாக்கம் செலுத்தும் வாய்ப்பு தற்போதைக்கு குறைவு என்பதே எனது அறிவியல் சார்ந்த பார்வை.

கமிடுகா வழி பாடம் கற்போம். எனினும் கவனத்துடன் கூடிய விழிப்புணர்வு நம் அனைவருக்கும் தேவை என்று கூறி நிறைவு செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, September 25, 2024, 15:09 [IST]
Desktop Bottom Promotion