International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம்

International Day of Older Persons 2026: இந்தியாவில் மூத்த தலைமுறையினரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் தீவிரத்தைப் பார்த்தால், முதியோர் பராமரிப்பை நாம் திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒட்டுமொத்தப் பார்வையையுமே மாற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதைப் பளிச்சென உணர முடிகிறது.

சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது: வரும் 2050-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை சுமார் 34.7 கோடியைத் (347 million) தொட்டுவிடும்! அதாவது, நம் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் மூத்த குடிமகனாக இருப்பார்.

International Day of Older Persons 2026 A New Approach To Healthcare For Parents And The Elderly - Importance

முதியோரின் எண்ணிக்கை இப்படி மலையென உயர்ந்து வரும் வேளையில், அனைவராலும் எளிதில் அணுகக்கூடிய, வருமுன் காக்கும் தடுப்பு முறைகள் கொண்ட, தனிநபரின் சூழலுக்கு ஏற்பத் திட்டமிடப்பட்ட நவீனப் பராமரிப்பு முறைகள் முன்னெப்போதையும் விட இன்று அத்தியாவசியமாகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 01 ஆம் தேதி சர்வதேச முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கம் முதியவர்களின் உரிமைகள், ஆரோக்கியம் மற்றும் சமூகப் பங்களிப்பைப் போற்றுதல் ஆகும். இந்தச் சர்வதேச முதியோர் தினத்தில் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அது ஆரோக்கியமான முதுமை என்பது வெறும் 'நீண்ட ஆயுளைத் தரும் வருடக்கணக்கு' மட்டுமல்ல; பெரியவர்கள் தங்களின் அந்திமக் காலம் வரை சுயமாக இயங்கும் தற்சார்புடனும், உடல்-மன சுறுசுறுப்புடனும், சமூகத்தோடு இயைந்த உற்சாகத்துடனும் வாழ்வதை உறுதி செய்வதே ஆகும்!

இந்த சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு பெற்றோர், முதியோர் சுகாதாரப் பராமரிப்பில் புதிய அணுகுமுறை குறித்து அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் நிறுவனர் & இயக்குநரான, கிருஷ்ணா காவ்யா தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

International Day of Older Persons 2026 A New Approach To Healthcare For Parents And The Elderly - Importance

அப்போது அவர் கூறியதாவது, "இந்தியக் குடும்பங்களில் மூத்த தலைமுறையினர் வாழும் முறையில் இன்று ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவ வசதிகளின் வளர்ச்சியால் மனிதனின் சராசரி ஆயுட்காலம் கணிசமாக அதிகரித்துள்ளது; அதே நேரம் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனிக்குடும்பங்கள் பெருகிவிட்டன.

இத்தகைய சூழலில், முதியோர் பராமரிப்பு என்பது வெறும் 'நோய் வந்த பிறகு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்று மருந்து மாத்திரை கொடுப்பது' என்ற குறுகிய எல்லைக்குள் மட்டும் இனி சுருங்கிவிட முடியாது!

வயதான பிறகும் பெரியவர்கள் திடகாத்திரமாகவும், உடல்நலத்துடனும், சுயமாக இயங்கும் தற்சார்புடனும், சுறுசுறுப்பாகவும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் இன்று எழுந்துள்ளது." என்றார்.

நோய்த்தடுப்பு மருத்துவத்தின் அவசியம்

"முதுமையிலும் ஆரோக்கியமாகத் திகழ 'தடுப்பு முறை சுகாதாரப் பராமரிப்பு' (Preventive Healthcare) மிக முக்கியப் பங்காற்றுகிறது.

* வழக்கமான முழு உடல் பரிசோதனைகள்
* சரியான காலகட்டத்தில் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகள்
* உரிய தடுப்பூசிகள்
* ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவு
* அன்றாட எளிய உடற்பயிற்சிகள்

போன்றவை ஆபத்துகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் பின்விளைவுகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. வயது கூடும்போது நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் எலும்புத் தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு. இவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவது மிகவும் அவசியம்.

அதேபோல், முதியவர்கள் மத்தியில் ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல் 'தடுமாறி கீழே விழுவது'. ஒருமுறை கீழே விழுந்தால் கூட, அது அவர்களின் அன்றாட நடமாட்டத்தையும், சுதந்திரத்தையும் ஒட்டுமொத்தமாக முடக்கிவிடக்கூடும். எனவே, வீடுகளில் வழுக்கும் தரைகள், போதிய வெளிச்சமின்மை போன்ற ஆபத்துகளைக் கண்டறிந்து சரிசெய்வது, தசை வலிமையைப் பராமரிப்பது, கண்பார்வைக் குறைபாடு அல்லது உடல் சமநிலைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பது ஆகியவை மிக அவசியம்." என்றும் காவ்யா கூறினார்.

மனநலமும்.. உணர்வுப்பூர்வமான பாதுகாப்பும்..

"முதுமையை அழகாகக் கடப்பது என்பது உடலைப் பராமரிப்பது மட்டுமல்ல; மனநலமும் சம அளவில் முக்கியமானவை. பணி ஓய்வு பெறுவது, வாழ்க்கைத் துணையின் இழப்பு, பிள்ளைகள் வெளியூர்களிலோ வெளிநாடுகளிலோ வசிப்பது போன்ற சூழல்கள் முதியோரிடையே கடுமையான தனிமை உணர்வை விதைத்துவிடுகின்றன.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடுவது, பொழுதுபோக்குகளில் நேரம் செலவிடுவது, எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது வாழ்க்கையின் மீதான பிடிப்பை மீட்டுக் கொடுக்கும். அதே நேரம், நினைவாற்றல் குறைபாடு, பழக்கவழக்கங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களை டிமென்ஷியா போன்ற பாதிப்புகளின் ஆரம்ப அறிகுறிகளாகப் புரிந்து கொண்டு தகுந்த மருத்துவ ஆதரவைப் பெற வேண்டும்." என்றார்.

நவீன முதியோர் பராமரிப்புச் சேவைகள் (Adaptive Senior Care)

"இன்று பெரும்பாலான பெரியவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள்; அதே வேளையில், தேவைப்படும் போது தொழில்முறை மருத்துவ ஆதரவு கைக்கெட்டும் தூரத்தில் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். குடும்பத்தினரும் பணிச்சுமை காரணமாக வேறு நகரங்களில் வசிக்க வேண்டிய சூழல் இருப்பதால், Assisted Living, Rehabilitation, Memory Care, Palliative Care, Home Healthcare போன்ற தழுவல் முதியோர் பராமரிப்பு முறைகள் (Adaptive senior care) இன்று அவசியமாகின்றன.

தடுப்பு மருத்துவப் பராமரிப்பு, முதியோர் இல்லக் கவனிப்பு, பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு, வீட்டுக்கே வந்து மேற்கொள்ளப்படும் செவிலியர் பராமரிப்பு ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வெளிநாடுகளைப் போல் இப்போது சென்னையிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் முதியோர் பராமரிப்பு சேவைகள் கிடைக்கின்றன. இதனால் முதுமையில் பெற்றோரை தனியாக தவிக்க விடாமல் அவர்கள் உணர்வுப்பூர்வமாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ இன்றைய தலைமுறையினர் துணை நிற்க வேண்டும்." என்று கிருஷ்ணா காவ்யா கூறினார்.

Desktop Bottom Promotion