Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
செரிமானம் சிறக்க, எப்படி உணவருந்த வேண்டும்? திருக்குறள் கூறும் அற்புத வழிமுறை!
உலக பொதுமறையான திருக்குறளில் இல்லாத நல்ல விஷயங்களே இல்லை. ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து மரணம் வரை, ஒருவன் எப்படி வாழ வேண்டும், உறவுகளை பேணிக் காக்க வேண்டும், உணவருந்த வேண்டும், இன்பம், துன்பம், பாவம், கடமை, பொறுமை, காதல், காமம், இச்சை என அ முதல் ஃ-ன்னா வரை அனைத்தை பற்றியும் கூறப்பட்டுள்ளது.
திருக்குறளில் பொருட்பாலில் மருந்து எனும் அதிகாரத்தில் உணவருந்தும் முறை மற்றும் நோய்கள் பற்றி திருவள்ளுவர் மிக அருமையாக எடுத்துரைக்கும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு காணலாம்....

குறள் #941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று!
பொருள்:
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும். - சாலமன் பாப்பையா
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். - கலைஞர்
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
- மு.வரதராசன்

குறள் #942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
பொருள்:
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை. - சாலமன் பாப்பையா
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை. - கலைஞர்
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. - மு.வரதராசன்

குறள் #943
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
பொருள்:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி. - சாலமன் பாப்பையா
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும். - கலைஞர்
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
- மு.வரதராசன்

குறள் #944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
பொருள்:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க. - சாலமன் பாப்பையா
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும். - கலைஞர்
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும். - மு.வரதராசன்

குறள் #945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
பொருள்:
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை. - சாலமன் பாப்பையா
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை. - கலைஞர்
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை. - மு.வரதராசன்

குறள் #946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
பொருள்:
குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும். - சாலமன் பாப்பையா
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை. - கலைஞர்
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும். - மு.வரதராசன்

குறள் #947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
பொருள்:
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும். - சாலமன் பாப்பையா
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும். - கலைஞர்
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
- மு.வரதராசன்

குறள் #948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
பொருள்:
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும். - சாலமன் பாப்பையா
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்). - கலைஞர்
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
- மு.வரதராசன்

குறள் #949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
பொருள்:
மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும். - சாலமன் பாப்பையா
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும். - கலைஞர்
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
- மு.வரதராசன்

குறள் #950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
பொருள்:
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும். - சாலமன் பாப்பையா
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது. - கலைஞர்
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது. - மு.வரதராசன்



Click it and Unblock the Notifications











