கோடையில் வீட்டில் இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்கணுமா? எவ்வளவு குடிக்கணும்?- டாக்டர் ஃபரூக் அட்வைஸ்!

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக அம்மை, மஞ்சள் காமாலை போன்ற பல பிரச்சனைகள் கோடையில் தான் தலைத் தூக்கும். இது தவிர நீரிழப்பு, அதிக வியர்வையால் படர்தாமரை போன்றவற்றால் ஏராளமானோர் அவதிப்படுவார்கள்.

இப்படி கோடையில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தடுப்பது எப்படி, கோடைக்காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும், ஹீட் ஸ்ட்ரோக் எவ்வளவு அபாயகரமானது, வீட்டில் இருந்தாலும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டுமா என்பன போன்ற பல கேள்விகளுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனை பொது நல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா தமிழ் போல்ட்ஸ்கைக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த கேள்விகளுக்கான விடையை அறிய தொடர்ந்து படியுங்கள்.

Exclusive: Dr Farooq Abdullah Advice Dos And Donts During Summer

கேள்வி: கோடைக்காலத்தில் அடிக்கடி எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்?

கோடைக்காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால், முதலில் சந்திக்கும் பிரச்சனை தான் நீர்ச்சத்து குறைபாடு அல்லது நீரிழப்பு தான். ஒருவர் முறைப்படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை அறிந்து, முறைப்படி நீரை அருந்த வேண்டும். இந்த நீர்ச்சத்து குறைபாடு தொடர்ந்து ஏற்படும் போது நாவறட்சி, தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல், ஒரு விஷயத்தில் கூர்ந்து செயல்பட முடியாமை, முடிவெடுப்பதில் சிரமம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனை முக்கியமாக வெளியே வெயிலில் அதிகம் சுற்றுபவர்களுக்கு தான் அதிகம் ஏற்படும்.

கேள்வி: உடலினுள் கோடையால் எம்மாதிரியான பிரச்சனைகள் வரலாம்?

தோல் சார்ந்த வியாதிகள், தோல் சருமம் சார்ந்த புண்கள், வெப்பம் மற்றும் வியர்வையால் பூஞ்சை தொற்றுகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதுவும் அக்குள், கவட்டை பகுதியில் படர்தாமரை வருவதற்கான வாய்ப்புள்ளது. இது தவிர முறையாக பராமரிக்கப்படாமல், முறையாக காய்ச்சப்படாத நீரினால் பல தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெயில் காலத்தில் உணவுகள் வேகமாக கெட்டுப் போய்விடும். எனவே உணவு சார்ந்த ஃபுட் பாய்சனிங் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி: கோடையால் தான் அஜீரண கோளாறு வருகிறது என்பது உண்மையா?

கோடைக்காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் அஜீரண கோளாறு ஏற்படும். எனவே இதைக் கட்டுப்படுத்த வேண்டும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் நீர்ச்சத்துள்ள பழங்கள் காய்கறிகளை எடுக்க வேண்டும். கார்போனேட்டட் பானங்களைத் தவிர்க்க வேண்டும். இளநீர், பதநீர் போன்ற பானங்களைக் குடிக்க வேண்டும். சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகளை குடிக்க வேண்டும். தயிர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். அதிக காரம், அதிக புளிப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பால் சார்ந்த பொருட்களை அளவாக சேர்த்துக் கொள்ளலாம்.

கேள்வி: கோடையில் கார்போனேட்டட் பானங்கள் உடலை வறட்சியாக்கும் என்பது உண்மையா?

உண்மை தான். இந்த பானத்தில் உள்ள கார்போனேட்டட் மற்றும் சர்க்கரை சேர்ந்து நீர்ச்சத்தை சரிசெய்யாமல், நீர்ச்சத்தை அதிகமாக சிறுநீரின் வழியே வெளியேற்றும். இதனால் இன்னும் நீரிழப்பு தான் ஏற்படும். அதற்கு பதிலாக வெறும் நீரைக் குடித்தாலே போதும். மிதமான குளிர்ந்த நீர் குடித்தால் போதும். ஆனால் பலர் செய்யும் பொதுவான தவறு மிகவும் குளிர்ச்சியான நீரைக் குடிப்பது. ஐஸ் கட்டியை போட்டு குடிப்பது. இதெல்லாம் தொண்டைக்கு, சுவாச பாதைக்கு நல்லதல்ல. மண்பானை நீரைக் குடிக்கலாம். இல்லன்னா ஃப்ரிட்ஜில் இருந்து நீரை எடுத்து அதை அரைமணிநேரம் கழித்து குடிக்கலாம்.

கேள்வி: எந்த அறிகுறிகளை வைத்து நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிப்பது?

முதலில் சிறுநீரின் நிறத்தைக் கொண்டு அறியலாம். சாதாரணமாக சிறுநீரின் நிறம் வெள்ளை அல்லது வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். நீரிழப்பு ஏற்பட்டிருந்தால், அடர் மஞ்சள்/சிவப்பு நிறத்தில் மாறும், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலியும் இருக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் இருப்பது. நாவறட்சி எப்போதும் இருக்கும், உதடு வெடிப்பு, வியர்வை நின்று சரும வறண்டு போய் உடல் சூடாக இருக்கும், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, மந்தத்தன்மை, குமட்டல், அடுத்த நிலை ஹீட் ஸ்ட்ரோக் என்று சொல்லக்கூடிய மயக்க நிலைக்கு சென்றுவிடுவார்கள்.

கேள்வி: ஹீட் ஸ்ட்ரோக் எவ்வளவு அபாயகரமானது?

ஹீட் ஸ்ட்ரோக் முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் உயிரைப் பறிக்கக்கூடிய அளவில் அபாயகரமானது. இளைஞர்களுக்கு பிரச்சனை இல்லை. வெயிலில் செல்லும் ஒருவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால், அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரத்த நாளங்கள் வழியே திரவங்கள் செலுத்த வேண்டும். ஹீட் ஸ்ட்ரோக்கில் உள்ள ஒருவரை கண்டால், அவரது ஆடைகளை தளர்த்தி, அவரை முதலில் குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுக்கணும். சுயநினைவில் இருந்தால் அவரை உட்கார வைத்து குடிக்க நீரைக் குடிக்க வேண்டும். சுயநினைவில் இல்லாவிட்டால் நீரைக் கொடுக்கக்கூடாது. ஒரு பக்கமாக அவரை படுக்க வைத்து, அவருக்கு மூச்சு உள்ளதா, அவரது நாடித்துடிப்பை பார்த்து, அவரை உடனே காற்றோட்டமான இடத்திற்கு மாற்றி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

கேள்வி: கர்ப்பிணிகள், பிபி, சர்க்கரை நோய், ஹைப்பர் டென்சன் உள்ளவர்கள் கோடையை எவ்வாறு கையாள்வது?

முடிந்த அளவு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வெளியே வரக்கூடாது. வீட்டில் இருக்கும் போது 3-4 லிட்டர் நீரைக் குடிக்க வேண்டும். வெறும் நீராக மட்டும் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை, மோர், இளநீர் என்றும் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடக்கூடாது. மற்ற இணை நோய்களைக் கொண்டவர்கள் நீர்ச்சத்துள்ள பழங்களை உட்கொள்ளலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். முக்கியமாக வெயிலுக்கு செல்லாமல் இருந்தாலே சிறப்பாக இருக்கலாம்.

கேள்வி: சிறந்த கோடைக்கால டயட் என்ன?

கோடைக்காலத்தில் அவித்த உணவுகளான இட்லி, இடியாப்பம், தோசை போன்றவற்றை சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவுகள், காரமான உணவுகளைத் தவிர்க்கணும். வெளியே சாப்பிடுவதைத் தவிர்த்து வீட்டு உணவுகளை சாப்பிலாம். விலை குறைவான தர்பூசணி பழத்தை சாப்பிடலாம். நீர்ச்சத்துள்ள காய்கறிகான புடலங்காய், பூர்க்கங்காய் போன்றவற்றை சாப்பிடலாம். நீராகாரம் பருகலாம். நுங்கு, இளநீர் சாப்பிடலாம்.

கேள்வி: சன்ஸ்க்ரீன், லிப் பாம் அவசியம் பயன்படுத்தணுமா?

இது நமது தோலின் சென்சிடிட்டிவிட்டியைப் பொறுத்தது. சென்சிடிவ் தோல் இருந்தால் சருமம் டேனாகும். போட்டோ சென்சிவ் தோல் இருந்தால், சில சமயங்களில் தோலில் புண்கள், அரிப்பு, எரிச்சல் வரும். இத்தகையவர்கள் SPF 30 சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி, பொதுவாக வெயிலில் சென்றால் சருமத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாவிட்டால், அவர்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் தொப்பி, க்ளௌஸ் பயன்படுத்தலாம், முகத்தை துணியால் மறைத்து செல்லலாம்.

கேள்வி: வீட்டில் இருந்தாலும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டுமா?

வீட்டில் இருந்தாலும் சரி, ஒட்டுமொத்த வீடும் சூடாகிறது. இப்படி வீடு சூடாகும் போது, நம்மை அறியாமலேயே நமது உடலும் சூடாகும். அதனால் தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் தேவை. நமது உடல் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, நமது உடல் இந்த தண்ணீரை சுவாசிப்பது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றின் வழியே தண்ணீர் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இப்படி தண்ணீர் உடலால் தினசரி பயன்படுத்தப்படுவதால், கட்டாயம் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவை. அதுவும் வெயில் காலத்தில் வீட்டிலேயே இருந்தாலும் வியர்வை, நீரிழப்பு ஏற்படும். எனவே வீட்டில் இருந்தாலும் கட்டாயம் நீர்ச்சத்தைப் பராமரிக்க வேண்டும்.

கேள்வி: கோடையில் அதிகம் பரவக்கூடிய தொற்று நோய்களிடம் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது?

உணவு சார்ந்த தொற்றுநோயான ஃபுட் பாய்சன் ஏற்படலாம். உணவை சரியாக பராமரிக்காத போது, அதனால் கிருமி தொற்று என்னும் ஃபுட் பாய்சன் ஏற்படும். எனவே ஒரு நாளில் சமைத்த உணவை அன்றே சாப்பிட்டு விட வேண்டும். அடுத்தப்படியாக, கோடைக்காலத்தில் அம்மை அதிகம் பரவும். அம்மை ஏற்பட்டவரை தனிமைப்படுத்த வேண்டும். தற்போது அம்மைக்கு வைரஸ் கொல்லி மருந்துகள் உள்ளன. அதைக் கொடுப்பதன் மூலம் குறுகிய காலத்தில் சரியாகும்.

சரியாக கொதிக்க வைக்காத நீரைக் குடிப்பது, அசுத்தமான ஹோட்டல்களில் உணவுகளை உண்பது, கைகளை கழுவாமல் உணவுகளை உண்பது போன்றவற்றால் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் பரவும். இதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை வரும். மஞ்சள் காமாலை என்பது ஒரு அறிகுறி. அதற்கான காரணத்திற்கு ஏற்ப உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். நாட்டு மருந்துகளை உடனே எடுக்கக்கூடாது.

ஏனெனில் மஞ்சள் காமாலை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே மஞ்சள் காமாலை ஏற்பட்டால், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். ஹெபடைடிஸ் ஏ தொற்றைத் தவிர்க்க நீரை நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இவற்றை மனதில் கொண்டால், தொற்றுகளில் இருந்து எளிதில் வெற்றி பெறலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, April 21, 2023, 19:15 [IST]
Desktop Bottom Promotion