இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்!

Fatty Liver Symptoms In Tamil: நமது உடலில் மிகப்பெரிய முக்கியமான உறுப்பான கல்லீரல், உடலில் சுமார் 500-க்கும் அதிகமான பணிகளை செய்து வருகிறது. அதில் இரத்தத்தை சுத்தம் செய்வது, உணவை செரிப்பது, ஆற்றலை சேமிப்பது மற்றும் நோய்த் தொற்றுக்களை எதிர்ப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த கல்லீரல் இல்லாமல் நம்மால் உயிர்வாழவே முடியாது. இப்படிப்பட்ட கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

AIIMS Trained Doctor Shares 5 Signs Of Fatty Liver You Can Check At Home

அதுவும் சமீப காலமாக இந்தியாவில் அமைதியாக அதிகரித்து வரும் ஒரு சுகாதார பிரச்சனை தான் கொழுப்பு கல்லீரல் நோய். தற்போது கிட்டத்தட்ட 38% பெரியவர்கள் மதுசாரா கொழுப்பு கல்லீரல் நோயால் (NAFLD) பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான பிரச்சனை அமைதியாக அதிகரித்து வருவதற்கு காரணம், இந்த பிரச்சனையின் அறிகுறிகள் பெரிய அளவில் தீவிரமானதாக இருக்காதது தான்.

எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை மற்றும் குடல் மருத்துவ நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருவருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருந்தால், அதை வீட்டில் இருந்தே எப்படி கண்டுபிடிப்பது என்று பகிர்ந்துள்ளார். டாக்டர் சேத்தி கூறும் அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.

1. வயிற்றைச் சுற்றி கொழுப்பு தேங்கியிருப்பது

கொழுப்பு கல்லீரல் நோயின் முக்கியமான அறிகுறிகளுள் ஒன்று தான் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு தேங்கி இருப்பது. எனவே ஒல்லியாக இருந்தாலும், வயிற்றுப் பகுதி மட்டும் வீங்கியிருந்தால், அவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருக்கக்கூடும். ஒருவரது உடலின் மற்ற பகுதியில் தேங்கும் கொழுப்புக்களை விட, கல்லீரல் மற்றும் உள்ளுறுப்புக்களைச் சுற்றி தேங்கும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது. இவ்வாறு மறைந்திருக்கும் கொழுப்பானது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை மற்றும் மோசமான வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. இவை இரண்டும் மதுசாரா கொழுப்பு கல்லீரல் நோய்க்கான ஆரம்ப எச்சரிக்கைகளாகும்.

2. தொடர்ச்சியான உடல் சோர்வு

கொழுப்பு கல்லீரல் நோய் இருந்தால், வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உடல் சோர்வு அல்லது களைப்பை சந்திக்க நேரிடும். அதுவும் எவ்வளவு ஓய்வு எடுத்தாலும், உடல் சோர்வு நீங்காமல் இருந்தால், கல்லீரலில் பெரிய பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்றுவதில் கல்லீரல் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதுவும் கல்லீரலில் கொழுப்புக்கள் தேங்கும் போது, ஆற்றலை மாற்றும் செயல்முறை மெதுவாகி, பகல் வேளையில் மந்தமாகவோ, ஆற்றலின்றியோ உணரக்கூடும்.

3. வலது விலா எலும்புக்கு கீழ் வலி

அடிக்கடி வலது விலா எலும்புக்கு கீழே மிதமான வலியோ அல்லது அசௌகரியத்தையோ சந்தித்தால், அது சில சமயங்களில் கல்லீரல் வீக்கம் அல்லது அழற்சியின் அறிகுறியாகும். அதுவும் இப்படி சந்திக்கும் வலியானது எப்போதும் கூர்மையானதாக இருக்காது, பெரும்பாலும் அது ஒருவித அழுத்தம், பாரம் அல்லது வயிறு நிறைந்திருப்பது போன்றதாக இருக்கும். கல்லீரலானது நமது உடலுக்கு வலது பக்கத்தில் இருப்பதால், வலது பக்கத்தில் சந்திக்கும் இப்படியான உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். குறிப்பாக உடல் பருமன் மற்றும் மிகுந்த உடல் சோர்வுடன் இந்த வலி ஏற்படும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

4. இன்சுலின் எதிர்ப்புத்தன்மை

இன்சுலின் எதிர்ப்புத்தன்மை கொழுப்பு கல்லீரலுடன் ஆழமாக தொடர்பு கொண்டுள்ளது. உடலின் செல்கள் இன்சுலினுக்குத் திறம்படப் பதிலளிப்பதை நிறுத்திவிடுகின்றன. இதன் விளைவாக தலைமுடி உதிர்வு, முகப்பரு, உண்ட பின்னரும் பசி எடுக்கும், திடீர் ஆற்றல் இழப்பு, கழுத்து அல்லது அக்குள் பகுதிகளில் ஏற்படும் கருமையான திட்டுகள் போன்றவை ஏற்படலாம். எனவே இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

5. குமட்டல் மற்றும் பசியின்மை

கல்லீரல் கொழுப்புக்களையும், நச்சுக்களையும் ஜீரணிக்க சிரமப்படும் போது, அது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். குமட்டல் உணர்வு, சாப்பிட்ட பிறகு சீக்கிரமே வயிறு நிறைந்துவிடுவது, அல்லது உணவின் மீது பொதுவாக ஆர்வமின்மை போன்றவை இதன் நுட்பமான அறிகுறிகளாக இருக்கலாம்.உணவில் உள்ள கொழுப்புகளைத் திறமையாகக் கையாளும் கல்லீரலின் திறன் குறைவதாலேயே இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று டாக்டர் சேத்தி விளக்குகிறார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, August 21, 2026, 14:20 [IST]
q
Desktop Bottom Promotion