2025 ராகு கேது பெயர்ச்சியால்.. ராகு தரும் ராஜயோகம்.. கேது தரும் கோடீஸ்வர யோகம் யாருக்கு?

Rahu Ketu Peyarchi Palan 2025 Tamil: நவகிரகங்களில் ராகு, கேது ஆகியவை நிழல் கிரகங்களாகும். இந்த ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள், அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இந்த ஆண்டு ராகு மற்றும் கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதி, அதாவது இன்று நடக்கிறது. இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசியிலும் பயணம் செய்கின்றனர்.

2025 ஆம் ஆண்டின் ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார். இப்போது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராகு கேதுப் பெயர்ச்சி பலன்களைப் பார்ப்போம்.

Rahu Ketu Peyarchi Palan 2025 Tamil Rahu Ketu Transit 2025 Effects On 12 Zodiac Signs

மேஷம்

ராகு பகவான் லாப ஸ்தானமான 11வது வீட்டிலும் கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் அமர்ந்துள்ளதால் உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். நிறைய பண வரவு கிடைக்கும். பணத்தை சேமிக்கும் அளவிற்கு செலவுகள் கட்டுப்படும். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும் உயர்பதவிகள் தேடி வரும். அள்ளித்தரப்போகிறார் ராகு பகவான். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் கிடைக்கும்.

ரிஷபம்

ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். சொத்து, சுகம் சேருவதோடு உங்க வாழ்க்கையின் தரமும் உயரும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள். குடும்பத்தோடு ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள்

மிதுனம்

ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கைத் தரம் உயரும். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் மாயமாவார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து வாங்க முயற்சி செய்வோருக்கு கால நேரம் கூடிவரும். புதன்கிழமை விநாயகரை அருகம்புல் சாற்றி வணங்குங்கள்.

கடகம்

ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும், கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளனர். உடல்நிலையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். பிரச்சினைகளை வெளியில் சொல்ல வேண்டாம். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

சிம்மம்

அஷ்டம சனி காலத்தில் ராகு பகவான் ஏழாம் வீட்டிலும், கேது பகவான் ஜென்ம ராசியிலும் அமர்வதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வருவாய் அதிகரித்தாலும் செலவுக்கு குறையிருக்காது. உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பது அவசியம். ஜென்ம ராசியில் கேது பகவான் அமர்வதால் விரக்தியான மனநிலையைத் தருவார் என்றாலும் கவலைப்படாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும்.

கன்னி

ராகு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாவது வீட்டிலும் கேது பகவான் 12ஆம் வீடான மோட்ச ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் நினைத்தது நிறைவேறும் காலம் வந்து விட்டது. எதிரி, போட்டி, பொறாமை, கடன், வைத்திய செலவு ஆகிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்துள்ளதால் கடன் அடைப்படும். தீராத நோய் தீரும். எதிரிகள் உங்களைக் கண்டு விலகி ஓடுவார்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும். வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம், நீண்ட நாள் கனவான புத்திர பாக்கியம் கிடைக்கும்.

துலாம்

ராகு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார் கேது லாப ஸ்தானமான 11வது வீட்டில் அமர்ந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் அடிக்கடி செல்வீர்கள். புதிதாக சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி வாழ்க்கையில் வெற்றியை தேடித்தரும். நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்துள்ளது சிறப்பான அம்சமாகும். வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். பொருளாதார நிலை சீரடையும். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு சென்று துர்க்கையை வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு

மூன்றாமிடத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். காதலால் கசிந்து உருகுவீர்கள். அபரிமிதான பண வரவு கிடைக்கும். ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் கோடீஸ்வர யோகம் கிடைத்துள்ளது. செய்யும் தொழில் மூலம் நல்ல லாபமும் புதிய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். தேவைக்கேற்ப பணவசதி உண்டாகும். சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும். யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும்.

மகரம்

உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் பேசும் வார்த்தைகளில் கடுமையை வெளிப்படுத்த வேண்டாம் கனிவை வெளிப்படுத்துங்கள். பணவரவு பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மன உளைச்சல்கள் தீரும் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடாக இருங்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே.. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடும் நேரம் வந்து விட்டது. காரணம் ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள ராகுவை குரு பகவான் பார்வையிடுகிறார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும். ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் முதலீடு செய்யாதீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது.

மீனம்

விரைய ஸ்தானத்தில் ராகு ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. உங்களுக்கு நீண்டநாளாக இருந்த உடல் உபாதைகள் நீங்கும். ஜென்ம சனியால் அபரிமிதாக சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது நல்லது. பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். கேது பகவான் உங்க எதிரிகளை வெல்ல வைப்பார். கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். ஆன்மீக யாத்திரைகள் புதிய அனுபவங்களை கொடுக்கும். வியாழக்கிழமை குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion