உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்

By Mayura Akilan

Healthy Relationship
உறவுகளை மேன்மைப்படுத்த தவறியதன் விளைவாக , வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அவசரத்தில் நாம் எடுக்கும் எந்த ஒரு சின்ன விஷயமும் நமக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறது. நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விஷயங்கள் அற்ப விஷயங்கள் என்பது புலனாகும். எதையுமே சாதாரணமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. உறவுகளை மேம்படுத்த உளவியாலாளர்கள் கூறிய ஆலோசனை பின்பற்றுங்கள் வெற்றிப்பாதைகள் தானாகவே திறக்கும்.

தவறான மனோபாவம்

சின்ன விஷயங்களைச் சின்ன விஷயங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால், அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விஷயங்கள்தான். ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன.

முழுமையாக கேளுங்கள்

ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள். அவர் சொல்வதை நீங்கள் முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்கள். மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும். இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும்.

எதிராளியை சந்தோசப்படுத்துங்கள்

ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை.

எதிராளியை மகிழ்ச்சிப்படுத்துங்கள்

நாம் நினைப்பதுதான் சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமில்லை. நம்முடையதும், பிறருடையதும் சரியாக இருக்கும். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நம்முடைய அளவுகோல்களை வைத்துக் கொண்டு பிறருடைய அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிலை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அதில் நாமும் பங்கு பெறலாம்.

வாழ்க்கை எளிதாகும்

திருப்தி என்பது தொடுவானம் போன்றது. நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும். எனவே கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்று கொள்ள வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்கக் கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும்.

எதிர்மறைகளை விலக்குங்கள்

எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி படைத்தவை. ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. இதன் விளைவாக குழப்பம் மிக்க மனநிலைக்கு ஆளாவீர்கள். மேலும் மனமானது கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது.

நிதானத்தை கடைபிடியுங்கள்

நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் எதிர்ப்பார்ப்பது வீண். இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய அவசியமே இருக்காது. பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும். மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. அமைதி நிலையில்தான் ஆற்றலை முழுமையாக ஒருமுகப்படுத்தவும் முடியும். எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள், உறவுகள் கூடிவரும், சாதனைகள் தொடரும்.

Story first published: Friday, February 24, 2012, 17:56 [IST]
Desktop Bottom Promotion