4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும்

Posted By:

Punjabi Curd Egg Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போதும் முட்டையை ஒரே மாதிரிதான் செய்வீர்களா? அதுவும் சாதம் மற்றும் டிபனுக்கு என்று கிரேவி, பொடிமாஸ் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டையுடன் தயிரை சேர்த்து இந்த பஞ்சாபி ஸ்டைல் முட்டை மசாலாவை செய்யுங்கள். இந்த பஞ்சாபி ஸ்டைல் முட்டை மசாலா சப்பாத்தி, பூரி, தோசை என அனைத்திற்கும் செம காம்பினேஷனாக இருக்கும்.

Punjabi Curd Egg Masala Recipe How to Make at Home in Tamil

இந்த டாஹி முட்டை மசாலா தாபா ஸ்டைலில் ஹோட்டலில் சாப்பிடும் சுவையிலேயே இருக்கும். இப்படி வித்தியாசமான முட்டை மசாலா செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். முக்கியமாக இந்த பஞ்சாபி ஸ்டைல் முட்டை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது சமையலே தெரியாதவர்கள் கூட செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் தயிர் முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 4 முட்டைகள்
- 1 பெரிய வெங்காயம்
- 1 சிறிய தக்காளி
- 1/2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
- 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு
- 1 கப் கெட்டியான தயிர்
- 1/2 ஸ்பூன் வெள்ளை எள்
- 1 பிரியாணி இலை
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 அங்குல துண்டு பட்டை
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 ஸ்பூன் கசூரி மேத்தி
- 4 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு

செய்முறை:

- முட்டைகளை முதலில் வேக வைத்து தோல் உரித்து அதில் கீறல் போட்டு வைத்துக் கொள்ளவும்.

- வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தயிரை நன்கு அடித்து தனியே எடுத்து வைக்கவும்.

- எள்ளை ஒரு வாணலியில் போட்டு, அவை லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்த எள் விதைகளை ஒரு சிறிய கிண்ணத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.

- அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

- வெங்காயம் நன்கு ஆறிய பிறகு, வதக்கிய வெங்காயம்-இஞ்சி-பூண்டு கலவையுடன் வறுத்த எள்ளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் பிரியாணி இலை மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- அதன்பிறகு சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரியத் தொடங்கியதும், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதைச் சேர்க்கவும்.

- ஒரு நிமிடம் இதை வதக்கியப் பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். குறைந்த தீயில் 2 நிமிடம் வதக்கவும்.

- தக்காளி நன்கு வதங்கியதும் மசாலாப் பொடிகள் அனைத்தையும், தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.

- பிறகு நன்கு அடித்து வைத்த தயிரைச் சேர்த்து, குழம்பு கொதிக்கும் வரை தொடர்ந்து கிளறவும்.

- வேகவைத்த முட்டைகளை மெதுவாகச் சேர்த்து, குழம்பை குறைந்த தீயில் 3-4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

- இறுதியாக, கசூரி மேத்தியை நசுக்கிச் சேர்த்து நன்கு கிளறவும். கிரேவியை மேலும் ஒரு நிமிடம் வேகவிடவும். அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

- அவ்வளவுதான் சூப்பரான பஞ்சாபி ஸ்டைல் டாஹி முட்டை மசாலா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, November 13, 2026, 22:33 [IST]
Desktop Bottom Promotion