ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Restaurant Style Paneer Tikka Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் பன்னீரை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் பன்னீரை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா செய்யுங்கள். இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Paneer Recipes How To Make Restaurant Style Paneer Tikka Masala Recipe

உங்களுக்கு இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* பன்னீர் - 200 கிராம் (சற்று பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* பெரிய வெங்காயம் - 1/2 (சற்று பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* சிவப்பு குடைமிளகாய் - 1/2 (சற்று பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* கெட்டி தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* முந்திரி - 8
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன் + 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* அரைத்த மசாலா
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* கசூரி மெத்தி - சிறிது
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* வதக்கிய பன்னீர்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாய், கெட்டி தயிர், சீரகத் தூள், கரம் மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள், மிளகுத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், முந்திரியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலா, சீரகத் தூள், மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, தக்காளி மென்மையாகும் வரை வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பொருட்களை அப்படியே சேர்த்து, பொன்னிறமாகும் வரை ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, ஜாரில் சிறிது நீரை அலசி ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் கசூரி மெத்தி மற்றும் சர்க்கரையை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், அதில் வதக்கிய பன்னீரை சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, July 27, 2026, 20:50 [IST]
Desktop Bottom Promotion