பன் தோசையும், பொட்டுக்கடலை சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Bun Dosa With Pottukadalai Chutney Recipe In Tamil: காலையில் டிபன் செய்ய தோசை அல்லது இட்லி மாவு இல்லையா? சட்டென்று ஒரு அட்டகாசமான காலை டிபனை செய்ய வேண்டுமா? அப்படியானால் பன் தோசையும், அதற்கு சைடு டிஷ்ஷாக பொட்டுக்கடலை சட்னியையும் செய்யுங்கள்.

இந்த பன் தோசைக்கு ரவையும், தயிரும் இருந்தால் போதும், பஞ்சு போன்று மென்மையான பன் தோசையை 15 நிமிடத்தில் செய்துவிடலாம். அதே சமயம் 2 நிமிடத்தில் அதற்கான சட்னியையும் செய்துவிடலாம். முக்கியமாக இந்த சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள் இப்படியான ரெசிபியை தெரிந்து வைத்துக் கொண்டால் உபயோகமாக இருக்கும்.

Bun Dosa With Pottukadalai Chutney How To Make This Delicious Breakfast In 15 Minutes

உங்களுக்கு இந்த பன் தோசையும், பொட்டுக்கடலை சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன் தோசை மற்றும் பொட்டுக்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பன் தோசைக்கு...

* உப்புமா ரவை - 200 கிராம்
* கெட்டித் தயிர் - 200 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 200 மிலி
* ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன்

தோசை தாளிப்புக்கு..

* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியதாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - 1 கைப்பிடி

பொட்டுக்கடலை சட்னிக்கு...

* பொட்டுக்கடலை - 100 கிராம்
* காஷ்மீரி வரமிளகாய் - 6
* பூண்டு - 15 பல்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 200 கிராம் ரவை மற்றும் 200 மிலி தயிரை எடுத்துக் கொண்டு நன்கு கலந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஊற வைத்துள்ள ரவையை மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன் 200 மிலி நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்கி இறக்கி, தயாரித்து வைத்துள்ள மாவில் சேர்க்க வேண்டும்.
* பின்னர் அந்த மாவில் 1/2 டீஸ்பூன் ஆப்ப சோடாவை சேர்த்து, 1 கைப்பிடி கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறி, 5 நிமிடம் மாவை ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னிக்கு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, காஷ்மீரி வரமிளகாய், பூண்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்தால், பொட்டுக்கடலை சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து தோசையை திருப்பிப் போட்டு, 2-3 நிமிடம் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், பன் தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 20, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion