75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா?

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் அன்றாட பயணங்களுக்காக ரயிலை நம்பியே இருக்கிறார்கள். இந்திய ரயில்வேயை இந்தியப் போக்குவரத்தின் ஆன்மா என்றே கூறலாம். ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் இல்லையென்றால் பொதுவாக அபாரதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்படும். ஆனால் இந்தியாவில் ஒரு ரயில் மட்டும் டிக்கெட்டே எடுக்காமல் எங்கு வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம்.

Indian Railways India s Only Train Where No Ticket Is Needed for Travelling

டிக்கெட் தொடர்பான கடுமையான விதிமுறைகளைக் கொண்ட நம் நாட்டில் இது சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், 'பக்ரா-நங்கல்' ரயில் இதை சாத்தியமாக்கியுள்ளது. அதுவும் இது இப்போது தொடங்கப்பட்டதல்ல, கிட்டதட்ட 75 ஆண்டுகளாகப் பயணிகளிடம் கட்டணம் ஏதுமின்றி இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு தனித்துவமான மற்றும் மிகவும் போற்றப்படும் அங்கமாகத் திகழ்கிறது.

வரலாற்றுப் பின்னணி கொண்ட பயணம்

இந்தியாவின் மிக உயரமான மற்றும் மிகவும் தனித்துவமான அணைகளில் ஒன்றான பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானப் பணிகளுக்கு உதவும் வகையில், 1948-ஆம் ஆண்டில் பக்ரா-நங்கல் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த ரயில், காலப்போக்கில் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பயணிக்கும் ஒரு போக்குவரத்துச் சேவையாக மாறியது. இது ரயில் சேவை வரலாற்றுச் சிறப்பம்சங்கள் நிறைந்த ஒரு பயண அனுபவத்தை வழங்குகிறது.

இந்த ரயில் முதலில் நீராவி என்ஜின்களில் இயக்கப்பட்டது, ஆனால் 1953-ல், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டீசல் என்ஜின்கள் அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு இந்த நிலை மாறியது. நவீன மேம்பாடுகள் இருந்தபோதிலும், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு கராச்சியில் உருவாக்கப்பட்ட மரப் பெட்டிகளுடன் இது தனது காலனித்துவ பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தப் பழங்கால பெட்டிகள் இதில் பயணிக்கும் பயணிகளைக் கடந்த காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன, இது வெறும் ஒரு பயணமாக இல்லாமல், அதற்கும் மேல் தனித்துவமான அனுபவமாக இருக்கிறது.

எத்தனை கிலோ மீட்டர் பயணிக்கிறது?

பஞ்சாபின் நங்கல் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பக்ரா ஆகிய இடங்களுக்கு இடையே 13 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் இந்த ரயில், சட்லஜ் நதி மற்றும் சிவாலிக் மலைத்தொடர்களின் அமைதியான மற்றும் அழகான நிலப்பரப்புகள் வழியாகச் செல்கிறது. பயணத்தின்போது ஆறு நிலையங்களில் நிற்கும் இந்த ரயில், மூன்று சுரங்கப்பாதைகள் வழியாகவும் பயணிக்கிறது. இது பயணிகளுக்கு அற்புதமான காட்சிகளையும் மறக்க முடியாத அனுபவத்தையும் வழங்குகிறது.

கட்டணமில்லாப் பயணம்

இந்திய ரயில்வேயால் நிர்வகிக்கப்படும் மற்ற ரயில்களைப் போல அல்லாமல், இந்தத் தனித்துவமான சேவை 'பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தால்' (BBMB) இயக்கப்படுகிறது. 75 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த ரயிலில் கட்டணம் வசூலிக்காமல் தொடர்ந்து இயக்க வேண்டும் என்பது ஒரு திட்டமிட்ட முடிவாகும். மணிக்கு 18 முதல் 20 லிட்டர் எரிபொருள் தேவைப்படுவதால் இதற்கான இயக்கச் செலவு அதிகமாக இருந்தாலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் தொழில்சார் சாதனைகளின் அடையாளமாகத் திகழும் இந்த ரயிலின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் BBMB இந்த முடிவை எடுத்துள்ளது.

தினமும் 800-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயிலில் ஏறி, அதன் வரலாற்றுச் சிறப்பையும் அப்பகுதியின் அழகையும் கண்டு ரசிக்கின்றனர். உள்ளூர் மக்கள் இதை ஒரு வசதியான மற்றும் இலவசப் பயண வழியாகக் கருதுகின்றனர். அதே சமயம், சுற்றுலாப் பயணிகள் பக்ரா-நங்கல் அணையின் பொறியியல் அற்புதத்தையும், சிவாலிக் மலைகளையும் ரசிக்கின்றனர். பக்ரா-நங்கல் ரயில் ஒரு இலவசப் பயணம் மட்டுமல்ல, அது இந்தியாவின் வரலாறு மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாகத் திகழ்கிறது.

Story first published: Friday, October 9, 2026, 10:22 [IST]
Desktop Bottom Promotion