70வது தேசிய திரைப்பட விருதுகள் 2024: 4 விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன் படத்தின் நிஜமான இடங்கள்..!

70வது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 16ஆம் தேதியான இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 2022ஆம் ஆண்டுக்கான திரைப்படங்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 32 மொழிகளில் இருந்து 130 படங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஜனவரி முதல் டிசம்பர் 31, 2022 வரை தணிக்கை செய்யப்பட்ட படங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்பட்டன.. அதில், மிகப்பெரிய வெற்றியை, சிறந்த நடிகருக்கான விருதை காந்தாரா படத்திற்காக ரிஷப் ஷெட்டி பெற்றுள்ளார்.

அதுபோல சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருதை காந்தாரா படம் வென்றுள்ளது.. சிறந்த நடிகைக்கான விருது திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனுக்கும், கட்ச் எக்ஸ்பிரஸ் படத்திற்காக மானசி பரேக்கிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.. அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடித்த உஞ்சாய் படத்திற்காக சூரஜ் பர்ஜாத்யா சிறந்த இயக்குனராக விருது பெற்றார். நீனா குப்தாவும் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றார்.

70-national-film-awards-2024-highlights-of-ponniyin-selvan-film-which-won-4-awards

இதில் மிக முக்கியமாக தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றது.. சிறந்த பின்னணி இசைக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார். சிறந்த ஒலி அமைப்பிற்கான விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் ஒளிப்பதிவிற்கான விருதை ரவி வர்மாவும் பொன்னியின் செல்வன் படத்திற்காக பெற்றுள்ளனர். தொடர்ந்து 4 விருதுகளை வென்ற தமிழ் படமான இந்த பொன்னியின் செல்வன் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

இந்த காலத்தில் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் ஒரு விநாடியில் தகவல் போய் சென்றுவிடும்.. ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு ரகசியமாக ஒரு செய்தியை கொண்டு செல்ல வந்தியத்தேவன் எவ்வளவு நீண்ட நெடிய சாகச பயணம் செய்திருந்தார் என்பதை எழுத்தாளர் கல்கி நாவல் மூலமாக விளக்கி இருப்பார்.. அதனையே இயக்குனர் மணிரத்தனமும் படத்தில் நமக்கு காட்சிகளாக காட்டியிருப்பார்... அவரது அந்த பயணத்தில் உள்ள கற்பனை சுவாரஸ்யங்களை நாவலில் படித்து இருப்போம்.. அதே நேரம் அந்த பயணத்தில் உள்ள நிஜத்தை நினைவுபடுத்தும் வகையில் தற்போதும் காணப்படும் தொல்லியல் இடங்கள் இன்றும் நமது தமிழகத்தில் உள்ளன... அவை என்னென்ன இடங்கள் என்று பார்க்கலாம்..

வீராணம் ஏரி

தேசிய விருது பெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் (நாவலின்) முதல் பாகமான புது வெள்ளத்தின் முதல் அத்யாயம் தொடங்குவதே வீராணம் ஏரியிலிருந்துதான். கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டை அருகே அமைந்துள்ள இந்த ஏரியின் உண்மையான பெயர் வீரநாராயண மங்கலம் ஏரி. சோழ இளவரசனும் முதலாம் பராந்தகனின் முதல் குழந்தையுமான ராஜாதித்ய சோழன், பெரிய சோழர் காலத்தில் 907 மற்றும் 955 A.D.க்கு இடையில் இந்த ஏரியைக் கட்டினார். அவரது தந்தையின் நினைவாக இந்த நீர்நிலைக்கு வீரநாராயணன் என்று பெயர் வழங்கப்பட்டது. காலப்போக்கில் வீராணம் என மாற்றப்பட்டது. பல்லவர்களுக்கு எதிரான போருக்காக திருமுனைப்பாடி என்கிற இடத்தில் முகாம் அமைத்து தமது படை வீரர்களுடன் ராஜாதித்ய சோழன் தங்கியிருந்தபோது, அந்த வீரர்களைக் கொண்டு இந்த ஏரியை கட்டியதாக வரலாற்றில் கூறப்படுகிறது. ஆதித்யகரிகாலன் அளித்த செய்தியுடன் காஞ்சிபுரத்திலிருந்து குதிரையில் கிளம்பிய வந்தியத்தேவன் தனது பயணக் களைப்பை மறந்து வீராணம் ஏரியின் அழகில் மெய்மறப்பதாக பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி குறிப்பிட்டிருப்பார்.

கடம்பூர் மாளிகை

பொன்னியின் செல்வன் கதையில் திடீர் திருப்பங்கள் நிகழும் இடம்தான் கடம்பூர் செங்கண்ணர் சம்புவரையர் மாளிகை. ஆதித்ய கரிகால சோழனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட இடமாகவும், அவர் கொல்லப்பட்ட இடமாகவும் இந்த மாளிகை பொன்னியின் செல்வன் நாவலில் சொல்லப்படுகிறது.. தனது பயணத்தில் வீராணம் ஏரி, காட்டுமன்னார் கோயில் ஆகிவற்றை கடந்து வந்த வந்தியத்தேவன் பிறகு சேரும் இடம்தான் இந்த கடம்பூர் மாளிகை. காட்டுமன்னார் கோயிலிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழக்கடம்பூர் என்கிற இடத்தில்தான் செங்கண்ணர் சம்புவரையர் மாளிகை அமைந்திருந்தாக கூறப்படுகிறது. கல்கியால் வர்ணிக்கப்பட்ட அந்த இடத்தில் தற்போது ஸ்ரீருத்ரபதி கோயில் மட்டுமே எஞ்சியுள்ளது. அந்த கோயிலின் கருவறை அருகே ரகசிய சுரங்கப்பாதை ஒன்று காணப்படுகிறது. தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளது..

வீரநாராயண பெருமாள் கோயில்

வீராணம் ஏரி அருகே உள்ள காட்டுமன்னார் கோயிலில்தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க தலம் அமைந்துள்ளது.. . பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து வரும் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் இந்த தலத்திலிருந்துதான் அறிமுகமாவார்.. வந்தியத்தேவன் முதன் முதலாக இந்த கோயில் முன்புதான் ஆழ்வார்க்கடியான் நம்பியை சந்திப்பார். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோயில் நாலாயிரம் திவ்யபிரபந்தம் முதல் முதலாக இசையோடு பாடப்பெற்ற தலம் என்கிற பெருமைக்குரியது. நாலாயிரம் திவ்பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகள் அவதரித்த தலம் என்கிற சிறப்பும் இந்த காட்டுமன்னார் கோயிலுக்கு உண்டு. அதுவே பிற்காலத்தில் காட்டுமன்னார்கோயில் என மாறியதாக வரலாறு கூறுகிறது.

கொள்ளிடம் ஆறு

பொன்னி நதி என அழைக்கப்பட்ட காவிரி, அதன் கிளையாறுகளான கொள்ளிடம், அரிசிலாறு ஆகியவை முற்காலத்தில் எந்த அளவிற்கு பரந்துவிரிந்து காணப்பட்டது என்பதை பொன்னியின் செல்வன் படத்தில் காட்சிகளாக விளக்கியுள்ளனர்.. வந்தியத்தேவன் கொள்ளிடம் ஆற்றில் படகில் பயணிக்கும் காட்சிகளையும், அரிசிலாற்றில் குந்தவை தமது தோழிகளுடன் படகில் பயணிக்கும் காட்சிகளையும் கல்கி வர்ணிக்கும் இடம் மிகச் சிறப்பாக இருக்கும். தற்போதும் இந்த ஆறுகள் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பாய்ந்து டெல்டா மாவட்டங்களை பசுமையாக்குகின்றன.

கும்பகோணம்

இப்போதுள்ள தஞ்சையின் முக்கிய நகரமான கும்பகோணம்தான் முற்காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்டது. மேலக் கடம்பூரிலிருந்து சுமார்.. 41 கி.மீ தொலைவில் உள்ள இந்த குடந்தை வந்தியத்தேவனின் பயணத்தில் முக்கியமான ஒரு இடம். இங்குதான் தனது காதலியான அரசிளங்குமரி குந்தவையை முதல் முறையாக சந்திப்பார் வந்தியத்தேவன்.

கடம்பூர் மாளிகையிலிருந்து குதிரைப்பயணம், கொள்ளிடம் ஆற்றில் படகு பயணம் என கடந்து வரும் வந்தியத் தேவன், குடந்தை நகரத்தின் ஆன்மிகச் சிறப்பையும், அங்குள்ள சோதிடர்களின் பெருமையையும் நாவலில் பதிவிட்டுள்ளார் கல்கி. தற்போதும் அந்த பெருமைகளுடன் புகழ்பெற்று இருக்கிறது இந்த கும்பகோணம். இங்குள்ள ஆதி கும்பேஸ்வரர் கோயிலும் அங்கு நடைபெறும் மகாமக பெருவிழாவும் உலகப் புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..

திருப்புறம்பியம்

1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த பள்ளிப்படை கோயிலின் தொல்லியல் எச்சங்கள் தற்போதும் திருப்புறம்பியத்தில் காணப்படுகின்றன. சுவர்கள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கின்றன. பாண்டிய மன்னர்களின் திட்டமான ஆதித்யகரிகாலனையும் அவரது தம்பி அருள்மொழி வர்மனையும் ஒரே நேரத்தில் தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தனர்.. அதன்மை இந்த பள்ளிப்படை கோயில் அருகே அமர்ந்துதான் ஆழ்வார்கடியான் நம்பி ஒட்டுக்கேட்பதாக பொன்னியின் செல்வன் (நாவலில்) கதை விவரிக்கப்பட்டிருக்கும்.. கும்பகோணத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த பள்ளிப்படை. திருப்புறம்பியம் போருக்கு பின்னர் அவ்வூரில் ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட சாட்சிநாதேஸ்வரர் கோயில் தற்போதும் புகழ்பெற்ற சிவனுடைய ஸ்தலமாக உள்ளது..

திருவையாறு

வந்தியத்தேவன் கும்பகோணத்திலிருந்து காவிரி கரையோறம் வழியாக தஞ்சாவூர் செல்லும் வழியில் வருவதுதான் திருவையாறு... சோழ நாட்டின் செழுமையும், பெருமையும் அவரது மனதில் மேலோங்கும் அளவிற்கு திருவையாறின் அழகு மிளிர்ந்ததாக பொன்னியின் செல்வனில் வர்ணித்திருப்பார் நாவலாசிரியர் கல்கி. திருஞானசம்பந்தர் தேவாராத்தில் திருவையாறு குறித்து அளித்த வர்ணணையை தத்ரூபமாக நேரில் பார்த்த மகிழ்ச்சியில் வந்தியத் தேவன் திழைத்ததாக நாவலில் அவர் கூறியுள்ளார். திருவையாற்றில் காவிரி கரையோரம் அமைந்துள்ள ஐயாறப்பர் கோயில் தேவாரம் பாடல்பெற்ற சிவ தலங்களில் ஒன்று. திருவையாறு வந்ததும் இந்த கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும் என்று விரும்பினான் வந்தியத் தேவன். அந்த ஐயாறப்பர் கோயில் தற்போதும் பிரசித்திபெற்று திகழ்கிறது.

தஞ்சாவூர் அரண்மனை

வந்தியத்தேவனின் பயணத்தின் முக்கியப் நிகழ்வுகள் திருவையாறிருந்து 33 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சையில்தான் நிகழும். உறையூர், பழையாறையை அடுத்து சோழர்களின் புதிய தலைநகரமாக விளங்கிய இந்த தஞ்சாவூர் 164 ஆண்டுகள் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது. சோழர்கள் காலத்தில் இந்த நகரம் கோட்டைகளாலும், மாட மாளிகைகளாலும் எவ்வாறு சூழப்பட்டிருந்தது என பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்டுள்ளது.. தஞ்சையில் சோழ மன்னர்களின் அரண்மனை குறித்து தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

பழையாறை

கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழையாறை நகரம் தஞ்சாவூருக்கு முன்பு சோழர்களின் தலைநகராக விளங்கியது. புதிய தலைநகரான தஞ்சையில் மன்னர் சுந்தரசோழன் வசித்தாலும் அவரது மகள் குந்தவை தனது தோழிகளுடன் பழையாறை நகரத்திலேயே வசித்து வந்தார். தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப்போல் பழையாறை நகரம் காணப்பட்டதாக பொன்னியின் செல்வன் நாவலில் இலக்கிய நயத்துடன் கல்கி குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு அபாயங்களை கடந்து பழையாறைக்கு வந்து சேரும் வந்தியத்தேவன் அங்கு அரசிளங்குமரி குந்தவையை சந்தித்து ஆதித்ய கரிகாலன் தம்மிடம் அளித்த இரண்டாவது ஓலையை அளிப்பார். பொன்னியின் செல்வனின் கதையோட்டத்தில் முக்கிய இடம்பெற்றுள்ள இந்த பழையாறை நகரம் தற்போது பிரபலமான ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தற்போது நாதன் கோயில் என்று அழைக்கப்படும் வைணவத்தலத்திற்கு நந்திபுரா விண்ணகரக் கோயில் என்கிற பெயரும் உண்டு. இந்த கோயிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டங்களில் செம்பியன் மகாதேவி, குந்தவை பிராட்டியார், ஆழ்வார்கடியார் நம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக பொன்னியின் செல்வன் விவரிக்கிறது. கீழ்பழையாறையில் உள்ள சோமேஸ்வரர் ஆலயமும் வந்தியத் தேவன் பயணித்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது

Desktop Bottom Promotion